ஊத்தங்கரை : நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் இளைஞர்களால் மிகப்பெரிய அரசியல் மாற்றம் உருவாகியுள்ளது; அவர்களின் எண்ண ஓட்டங்களை அறியவே தாம் கிராமம் கிராமமாகச் சென்று கருத்து கேட்டு வருவதாக பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்பி தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம், ஊத்தங்கரை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கோவிந்தாபுரம் கிராமத்தில் நடைபெற்ற பாமக கிளைக் கூட்டத்தில் பங்கேற்று, கட்சியின் அடுத்தகட்ட வளர்ச்சி குறித்து அவர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது தொண்டர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் அன்புமணி ராமதாஸ் பேசியதாவது:

46 ஆண்டு காலப் போராட்டத்திற்கு வெற்றி!

"தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் ஆளுநர் உரையில், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த ஒரு அறிவிப்புக்காகத்தான் பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்களும், கட்சியினரும் கடந்த 46 ஆண்டுகளாகத் தொடர்ந்து போராடி வந்தோம்.

கடந்த ஐந்து ஆண்டுகளில் இக்கோரிக்கையை வலியுறுத்திப் பல்வேறு போராட்டங்கள், மாநாடுகளை நடத்தினோம். ஆனால், அப்போதைய திமுக அரசு இதனைச் செய்யவில்லை. இதையடுத்து, புதிய தமிழக முதலமைச்சர் விஜய்யை நான் நேரில் சந்தித்தபோது, சுமார் 25 நிமிடங்கள் சாதிவாரி கணக்கெடுப்பின் அவசியம் குறித்தும், அதனால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் விரிவாக விளக்கினேன். தற்போது இந்த அறிவிப்பு ஆளுநர் உரையில் இடம்பெற்றிருப்பது வரலாற்று நிகழ்வாகும்."

இளைஞர்களிடம் கருத்து கேட்பு:

உரையைத் தொடர்ந்து, அங்கிருந்த இளைஞர்களிடம் கட்சியின் வளர்ச்சி குறித்தும், தலைமைக்கு அவர்கள் கூற விரும்பும் ஆலோசனைகள் குறித்தும் அன்புமணி ராமதாஸ் நேரடியாகக் கேட்டறிந்தார். அதற்குப் பதிலளித்துப் பேசிய பெரும்பாலான இளைஞர்கள், "படித்து முடித்தும் தகுதிக்கேற்ற வேலை கிடைக்காததால், சாதாரண கூலி வேலைக்குச் செல்லும் அவல நிலை உள்ளது. எனவே, வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும்" என உருக்கமாகக் கோரிக்கை விடுத்தனர்.

1.30 கோடி பேருக்கு வேலை இல்லை:

இளைஞர்களின் கோரிக்கைக்குப் பதிலளித்த அன்புமணி ராமதாஸ், "தற்போது தமிழ்நாட்டில் சுமார் ஒரு கோடியே 30 லட்சம் இளைஞர்கள் வேலை இல்லாமல் தவித்து வருகின்றனர். தமிழக அரசுக்குத் தகுந்த அழுத்தம் கொடுத்து, அரசுத் துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை விரைந்து நிரப்பத் தேவையான அனைத்துக் கட்ட நடவடிக்கைகளும் பாமக சார்பில் எடுக்கப்படும்" என உறுதியளித்தார்.

சட்டவிரோத மதுக்கடைகளை மூட அழுத்தம்:

கூட்டத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இயங்கி வரும் சட்டவிரோத மதுக்கடைகள் (சந்துக்கடைகள்) குறித்துத் தொண்டர்கள் புகார் எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர்: "பாமக சட்டமன்றக் குழுத் தலைவர் சௌமியா அன்புமணி விடுத்த கோரிக்கையின் அடிப்படையில், தர்மபுரியில் பல சந்துக்கடைகள் மூடப்பட்டுள்ளன. அதேபோல், கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் உள்ள சட்டவிரோத மதுக்கடைகளை உடனடியாக மூட உரிய அழுத்தம் கொடுக்கப்படும். தமிழ்நாடு முழுவதும் முழு மதுவிலக்கைக் கொண்டு வர வேண்டும், டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்பதுதான் பாமகவின் முதன்மை இலக்கு. அதற்காகத் தொடர்ந்து போராடுவோம்," என்று அவர் பேசினார். இக்கூட்டத்தில் மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் திரளான பாமக தொண்டர்கள், இளைஞர்கள் கலந்துகொண்டனர்.

Source: Read Full Article