கோவிலில் ரகசிய திருமணம்

கர்நாடக மாநிலம் பெங்களூரு தெற்கு மாவட்டத்தில் உள்ள மகதி பகுதியை சேர்ந்தவர் 22 வயதுடைய பவானி. இவர் பி.எஸ்.சி பட்டப் படிப்பு முடித்து விட்டு பெங்களூருவில் உள்ள திகளாரபல்ய பகுதியில் உள்ள செல்போன் விற்பனை நிலையத்தில் பில்லிங் பிரிவில் பணியாற்றி வந்தார்.

வேலை காரணமாக துளசி நகர் பகுதியில் தனியாக வாடகை வீட்டில் தங்கி வசித்து வந்ததாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில், பவானிக்கு அதே பகுதியை ஆட்டோ ஓட்டுநரான 33 வயதுடைய சந்திரசேகர் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் தொடர்ந்து பழகி வந்த நிலையில் நாளடைவில் இவர்களது பழக்கம் காதலாக மாறியுள்ளது.

இந்த காதல் உறவு தீவிரமடைந்த நிலையில், பெற்றோருக்கு தெரியாமல் கடந்த ஆண்டு இருவரும் கோவிலில் எளிமையான முறையில் திருமணம் செய்து கொண்டு ரகசியமாக குடும்பம் நடத்தி வந்திருக்கின்றனர்.

நடத்தையில் சந்தேகம் - ஏற்கனவே திருமணம்

திருமணமாகி சில மாதங்கள் கடந்த நிலையில் , சந்திரசேகர் நடத்தையில் பவானிக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது அதனை தொடர்ந்து அவரது செயல்பாடுகளை கவனித்த போது சந்திரசேகருக்கு ஏற்கனவே திருமணமாகி ஆறு வயதில் ஒரு குழந்தை இருப்பது தெரிய வந்துள்ளது.

இதனால் கடும் அதிர்ச்சி அடைந்த பவானி, நடந்த விஷயங்களை பற்றி தனது பெற்றோரிடம் தெரிவித்து உள்ளார். மேலும், சந்திரசேகருடன் வாழ விருப்பமில்லை பிரிய வேண்டும் என்று முடிவு செய்த பவானிக்கு , அவரது குடும்பத்தினர் வேறு ஒருவருடன் திருமண ஏற்பாடுகளை செய்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த சூழ்நிலையில், கடந்த ஜூன் 13-ஆம் தேதி பவானியின் சமூக வலைதள கணக்கில் சந்திரசேகரை திருமணம் செய்த போது எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் ஸ்டோரி வைத்திருப்பதை கவனித்த அவரது உறவினர்கள் இதுகுறித்த தகவலை பவானியின் தந்தையிடம் தெரிவித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து அதிர்ச்சியடைந்த பவானியின் தந்தை பவானியை தொடர்பு கொள்ள முயற்சித்த போது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த அவர், வீட்டின் உரிமையாளரிடம் தகவல் தெரிவித்த நிலையில் அவர் பாவினியின் வீட்டிற்கு சென்று கதவை தட்டி பார்த்திருக்கிறார்.

வீடு நீண்ட நேரமாக திறக்கப்படாததால் சந்தேகமடைந்த வீட்டின் உரிமையாளர் இது குறித்து காவல் துறைக்கு தகவல் தெரிவித்த நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது பவானி உயிரிழந்த நிலையிலும் அவருக்கு அருகிலேயே சந்திரசேகர் மயக்க நிலையிலும் கிடந்துள்ளனர். இதையடுத்து, பவானியின் தந்தை அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.

அதன்படி சிகிச்சைக்கு பிறகு சந்திரசேகரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் பல முக்கிய தகவல்கள் வெளிச்சத்துக்கு வந்தது. விசாரணையில், பவானி தன்னை விட்டு பிரிய முடிவு செய்ததால் மன வருத்தத்தில் இருந்த சந்திரசேகர் தொடர்ந்து தன்னுடன் வாழுமாறு பவானியை தொந்தரவு செய்து வந்திருக்கிறார்.

ஆனால் பவானி மறுப்பு தெரிவிக்கவே அவரை கொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்து கொள்ளும் திட்டத்தில் இருந்த சந்திசேகர் பவானிக்கு வலுக்கட்டாயமாக விஷத்தை கொடுத்த போது அவர் அதனை வாந்தி எடுத்து விட்டதாக சொல்லப்படுகிறது.

இதனால் பாவனி உயிர் பிழைத்து விடுவாரோ என அச்சமடைந்த சந்திரசேகர் வீட்டில் இருந்த கத்தியால் அவரை சரமாரியாக குத்தி கொலை செய்து விட்டு அவரும் விஷம் குடித்து தற்கொலை முயன்றது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து சந்திரசேகரை கைது செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

Source: Read Full Article