உணவுக்காடு வளர்ப்பு மற்றும் தென்னிந்திய பழங்கள் திருவிழா

சத்குருவின் காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் "உணவுக்காடு வளர்ப்பு மற்றும் தென்னிந்திய பழங்கள் திருவிழா" என்ற தலைப்பிலான மாபெரும் கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி, திருச்சி எஸ்.ஆர்.எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவன வளாகத்தில் வரும் ஜூன் 14-ஆம் தேதி நடைபெற உள்ளது.

இது தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பு இன்று சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நடைபெற்றது. இதில் காவேரி கூக்குரல் இயக்கத்தின் கள ஒருங்கிணைப்பாளர் தமிழ்மாறன் மற்றும் மண்வள மேம்பாட்டிற்காக ஐநாவின் விருது வென்ற ஒரே இந்திய விவசாயி வள்ளுவன் ஆகியோர் கலந்து கொண்டு இவ்விழா மற்றும் கண்காட்சி குறித்த சிறப்பம்சங்களை விளக்கிப் பேசினர்.

தமிழ்மாறன் பேசுகையில் ;

ஒற்றைப்பயிர் சாகுபடி முறையால் விவசாயிகளுக்கு வருமானம் குறைகிறது. விவசாய நிலங்களில் மண் வளம் குறைதல் , அதிக நீர்த் தேவையால் நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவது உள்ளிட்ட சுற்றுச்சூழல் பிரச்சினைகளும் ஏற்படுகின்றன. ஆகையால், காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் விவசாயிகளிடம் மரம் சார்ந்த பலபயிர் சாகுபடி விவசாய முறையை பெருமளவில் முன்னெடுத்து வருகிறோம். இந்த விவசாய முறையால் மண் வளம், மண்ணின் நீர்ப்படிக்கும் திறன், நதிநீர் வளம் ஆகியன உயர்வதோடு விவசாயிகளின் வருமானமும் அதிகளவில் உயர்கிறது.

அதே போன்று மக்களின் ஆரோக்கியத்தில் பழங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஒரு காலத்தில் நம் வீடுகளிலேயே மா, பலா, வாழை, கொய்யா, சப்போட்டா, கறிவேப்பிலை, முருங்கை உள்ளிட்ட பல வகையான மரங்கள் இருந்தன. ஒவ்வொரு வீட்டின் கொல்லைப் புறத்திலும் ஒரு சிறிய உணவுக் காடு இருந்தது. ஆனால், இன்றைய நகரமயமாதல் காரணமாக அந்த உணவுக் காடுகள் பெருமளவில் அழிந்து விட்டன.

தமிழக விவசாயிகளும் கடந்த 40, 50 வருடங்களாக ஒற்றைப் பயிர் சாகுபடிக்கு மாறி விட்டனர். அதற்கு முன்பு வரை பல பயிர் சாகுபடி முறையில் அனைத்து விவசாய நிலங்களும் உணவுக்காடாகத்தான் இருந்தன. ஆகையால், பாரம்பரிய உணவுக்காடு முறையை மீண்டும் பரவலாக்கும் நோக்கில் பழங்களின் உற்பத்தி, மதிப்புக் கூட்டுதல் மற்றும் சந்தைப்படுத்தல் தொடர்பான ஆலோசனைகளை வழங்கும் வகையில் காவேரி கூக்குரல் சார்பில் இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

ஐ.நா விருது வென்ற ஒரே இந்திய விவசாயியான பொள்ளாச்சியைச் சேர்ந்த வள்ளுவன் பேசுகையில் ;

இந்த மாபெரும் நிகழ்வு மூன்று முக்கிய அம்சங்களை உள்ளடக்கி நடைபெறுகிறது. முதலாவதாக, இந்தியாவின் 4 முன்னணி வேளாண் ஆராய்ச்சி நிறுவனங்களின் விஞ்ஞானிகள் மற்றும் வல்லுநர்கள் பங்கேற்று நவீன தொழில்நுட்ப அறிவைப் பகிர்ந்து கொள்கின்றனர்.

இரண்டாவதாக, தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, உத்திரபிரதேசம் ஆகிய 5 மாநிலங்களைச் சேர்ந்த முன்னோடி வெற்றி விவசாயிகள் தங்களது நேரடி சாகுபடி அனுபவங்களையும் வழங்குகின்றனர்.

மூன்றாவதாக, நுகர்வோருக்கும் இயற்கை முறையில் விவசாயம் மேற்கொள்ளும் விவசாயிகளுக்கும் இடையே நேரடித் தொடர்பை உருவாக்குவதற்காக பிரம்மாண்டமான வேளாண் கண்காட்சி நடைபெறுகிறது.

மாம்பழம் & அவகாடோ சாகுபடி ( தேசிய தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையம் )

300 வகை மா மற்றும் 100 வகை பலா வகைகளைக் காட்சிப்படுத்தி, அது குறித்த தொழில் நுட்பங்களை தேசிய தோட்டக்கலை ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் பகிர்கிறார்கள். ஒருமுறை நடவு செய்தால் பல தலைமுறைகளுக்கும் வருமானம் தரக்கூடிய அவகாடோ சாகுபடியின் தொழில் நுட்பங்கள், சந்தை வாய்ப்புகள் மற்றும் பராமரிப்பு முறைகள் குறித்து முதன்மை விஞ்ஞானி முனைவர் செந்தில் குமார் விளக்கவுள்ளார்.

வாழை வகைகள் (தேசிய வாழை ஆராய்ச்சி நிலையம்)

500 வாழை வகைகளைக் காட்சிப்படுத்தி, அவற்றின் வளர்ப்புத் தொழில் நுட்பங்களை திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் பகிர்கிறார்கள்.

பழங்களை மதிப்புக் கூட்டி சந்தைப்படுத்துதல் (NIFTEM)

பழ வகைகளை மதிப்பு கூட்டி சந்தைப்படுத்தும் தொழில்நுட்பங்களைத் தஞ்சாவூர் தேசிய உணவு தொழில்நுட்பம், தொழில்முனைவு மற்றும் மேலாண்மை நிறுவன விஞ்ஞானிகள் பகிர்கிறார்கள்.

கிழங்கு வகைகள் (தேசிய கிழங்குகள் ஆராய்ச்சி நிலையம்)

70-க்கும் மேற்பட்ட கிழங்கு வகைகளைக் காட்சிப்படுத்தி, அவற்றின் சாகுபடி தொழில்நுட்பங்கள், ஊட்டச்சத்து மதிப்பு மற்றும் வருவாய் வாய்ப்புகள் குறித்து திருவனந்தபுரம் தேசிய கிழங்குகள் ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் விளக்கவுள்ளனர்.

சமவெளியில் ஆப்பிள் சாகுபடி

வறட்சியான மாவட்டமான ஆந்திரப் பிரதேசத்தின் அனந்தபூரில் வெற்றிகரமாக ஆப்பிள் சாகுபடி செய்து வரும் விவசாயி கே.வி. ரமணா ரெட்டி, சமவெளியிலும் ஆப்பிள் சாகுபடி சாத்தியம் என்பதைத் தனது அனுபவங்களின் மூலம் பகிரவுள்ளார்.

பலா & பப்பாளி சாகுபடி

பப்பாளியில் 10 மடங்கு லாபம் சாத்தியம் என்பது குறித்து வேளாண் விஞ்ஞானி சரவணன் தொழில்நுட்பங்களைப் பகிரவுள்ளார். மேலும், 100-க்கும் மேற்பட்ட பலா வகைகளைக் காட்சிப்படுத்தி, அவற்றின் சிறப்புகளை முன்னாள் வேளாண்த்துறை துணை இயக்குநர் ஹரிதாஸ் விளக்கவுள்ளார்.

மேங்கோ மேன்

ஒரே மரத்தில் 234 மாம்பழ வகைகளை உருவாக்கிச் சாதனை படைத்த இந்தியாவின் ‘மேங்கோ மேன்’ பத்மஸ்ரீ கலீம் உல்லா கான், மாம்பழ சாகுபடியில் தனது அனுபவங்களையும் வெற்றி ரகசியங்களையும் பகிரவுள்ளார்.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்க முன்பதிவு அவசியம். முன் பதிவு செய்ய forms.gle/rvAxzjx82Gn33uhp8 என்ற இணைப்பைப் பயன்படுத்தலாம் அல்லது 94425 90079, 94425 90081 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்தனர்.

Source: Read Full Article