திருச்சியின் பொறுப்பு அமைச்சரான தன்னை காணவில்லை என திமுகவினர் பரப்பும் வதந்திகளால் ஒரு பிரயோஜனமும் இல்லை என அமைச்சர் ரமேஷ் பதிலடி கொடுத்துள்ளார்.

செய்தியார்கள் சந்திப்பில் இதுதொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் பதிலளித்தார். அப்போது, “கடந்த சில தினங்களால் திருச்சியில் என் மீது ஒரு தனிப்பட்ட திட்டமிட்டப்பட்ட தகவல் ஒன்று பரப்பப்பட்டு வருகிறது. தவெக வெற்றியை ஏற்றுக் கொள்ள முடியாதவர்கள், திருச்சியை தங்கள் கோட்டை என நினைத்துக் கொண்டிருந்தவர்கள், இன்று அது தளபதி கோட்டையாக மாறிவிட்டது என ஏற்றுக்கொள்ள முடியாதவர்கள் ஸ்ரீரங்கம் எம்.எல்.ஏ.வான என்னை காணவில்லை என பொதுமக்கள் சொல்வது போல தகவல் பரப்புகிறார்கள். அது முற்றிலும் பொய் என மக்களுக்கு நன்றாக தெரியும். கடந்த ஒரு மாதமாக என்னுடைய தொகுதியின் எம்.எல்.ஏ அலுவலகத்தில் மக்களால் அளிக்கப்பட்ட குறைகள் அடிப்படையில் எல்லாம் செய்யப்பட்டுள்ளதற்கு ஆதாரம் என்னிடம் உள்ளது.

நான் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக இருக்கிறேன். திருச்சி மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சராக உள்ளேன். தமிழ்நாடு முழுவதுமான கோயில்களை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறேன். கடந்த 2 வாரங்களுக்கு முன்பு கூட அதிகாரிகளை அழைத்து ஆய்வுக்கூட்டம் நடத்தினேன். நான் இல்லாவிட்டாலும் தொகுதியில் மக்கள் பணியில் குறை ஏற்பட்டு விடக்கூடாது என தவெகவினரை வைத்து பணிகளை மேற்கொண்டு வருகிறேன்.

அமைச்சர் போன் அடித்தால் எடுப்பது கிடையாது என கூறுகிறார்கள். ஒவ்வொரு நாளும் வரக்கூடிய போன் கால்கள் அனைத்து நோட்டில் தேதி வாரியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன்மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுவரை எந்த புகார்கள் சரி செய்யப்பட்டதோ, அதற்கெல்லாம் நன்றி தெரிவித்தும் கடிதங்கள் எழுதப்பட்டுள்ளது. ஆனால் திமுக திட்டமிட்டு அவதூறு பரப்புகிறார்கள். இதனால் எந்த பிரயோஜனமும் இல்லை.

வெற்றியை தாங்க முடியாமல் இருக்கும் திமுகவினர் ஜெலுசில் வாங்கி சாப்பிட்டு விட்டு வீட்டில் இருக்கலாம். திமுகவினர் பரப்பும் தகவலால் எனக்கு எந்தவகையிலும் பாதிப்பில்லை. இதனால் என் அமைச்சர் பதவியை பறிக்கவோ, எம்.எல்.ஏ. பதவியில் இருந்து நீக்கவோ முடியாது. 2 நாட்கள் பதவியில் இருந்தாலும் மக்களுக்கு உழைக்க தயாராக இருக்கிறோம். எங்களுக்கு எந்த பயமும் கிடையாது. உங்கள் எனர்ஜியை வீணாக்க வேண்டாம் என திமுகவுக்கு கேட்டுக்கொள்கிறேன்.

Also Read: HBD Joseph Vijay: முதல்வர் விஜய் பிறந்தநாள்.. முதல் ஆளாய் முந்திய கீர்த்தனா.. நள்ளிரவில் பட்டாசுகளால் ஜொலித்த சிவகாசி!

மேலும் மாற்றம் வேண்டும் என்று மக்கள் எங்களுக்கு ஓட்டு போட்டார்கள். தவெக ஆட்சிக்கு வந்து ஒரு மாதம் தான் ஆகிறது. ஆனால் கடந்த 5 ஆண்டுகளாக திமுக ஆட்சியில் செய்யப்பட்ட நிர்வாக, பொருளாதார சீர்கேடுகளை சரிசெய்யவே பல மாதங்களாகும். அதற்கான கால அவகாசத்தில் தான் நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம். எல்லா துறைகளிலும் ஊழல் மற்றும் லஞ்சத்தை ஒழித்துக் கொண்டிருக்கிறோம். மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். இதையெல்லாம் சட்டமன்றத்தில் பேச வேண்டும் என நினைத்தவர் இன்று வீட்டில் டிவியில் அமர்ந்து சட்டமன்ற நிகழ்ச்சிகளைப் பார்த்து வருகிறார். அதனை மு.க.ஸ்டாலினால் ஏற்க முடியவில்லை என அமைச்சர் ரமேஷ் பதிலடி கொடுத்துள்ளார்.

Source: Read Full Article