எளிய வீட்டுப் பிள்ளைகளின் கைகளில் மக்கள் பணியை வழங்கி மக்களாட்சியை அலங்கரித்திருக்கிறீர்கள் என முதலமைச்சர் விஜய்க்கு அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பிறந்தநாள் வாழ்த்து மூலம் புகழாரம் சூட்டியுள்ளார்.

தமிழ்நாட்டின் முதலமைச்சரான விஜய் இன்று தனது 52வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பலரும் சமூக வலைத்தளங்கள் மூலம் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழக அமைச்சர்களும் வாழ்த்துகளை கூறி வருகின்றனர்.

உங்களுடன் இணைந்து பயணிப்போம்

அதில் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா வெளியிட்ட பதிவில், “மதிப்பிற்குரிய கழகத் தலைவர், தமிழ்நாடு முதல்வர், பாசத்திற்குரிய அண்ணன் ஜோசப் விஜய்க்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். மக்கள் கொடுத்த உயரத்தை அதே மக்களுக்காக உதறிவிட்டு சேவையாற்ற வந்தீர்கள்; "மக்கள்தானே மன்னர்கள்" என்ற மக்களாட்சியின் மகத்துவத்தை அறிவித்தீர்கள்; மக்கள் விரும்பிய முதல்வராக, மக்களில் ஒருவராகத் தேர்தலில் வென்று, மக்களாட்சித் தலைமையை ஏற்றீர்கள். இப்போது, காலை முதல் இரவு வரை நேரம் காலம் பார்க்காது "மக்கள் ஊழியனாக" அலுவல் பணியை செய்துக்கொண்டிருக்கிறீர்கள். அன்று நாயகனாக உங்களைக் கொண்டாடிய மக்களுக்கு, இன்று ஜனநாயகனாக தன் வாழ்வை ஒப்படைத்து அர்ப்பணிப்புடன் சேவையாற்றி வருகிறீர்கள்.

"மக்களிடம் செல்" என்று கூறி பல சாமானியர்களையும் தலைவர்களாக்கி அழகு பார்த்தார் பேரறிஞர் அண்ணா. "மக்கள் கொடுத்த பொறுப்பை ஒருபோதும் மறக்காதே" என்று கூறி, அரைநூற்றாண்டுக்கு பிறகு எளிய வீட்டுப் பிள்ளைகளின் கைகளில் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் என மக்கள் பணியை வழங்கி மக்களாட்சியை அலங்கரித்திருக்கிறார் எங்கள் அண்ணன்.உங்கள் கொள்கை பாதையிலும், அரசியல் உறுதியிலும், மக்கள் பணியிலும் என்றும் உங்களோடு உடன் பயணிப்போம்” என தெரிவித்துள்ளார்.

டி.கே.பிரபுவின் வாழ்த்து

இதேபோல் கனிமவளத்துறை அமைச்சர் டி.கே.பிரபு வெளியிட்ட வாழ்த்து பதிவில், “தேர்தல் அரசியலில் பணபலம் இருந்தால் மட்டுமே வெல்ல முடியும் என்கிற பிம்பத்தைச் சுக்குநூறாக உடைத்தெறிந்து, ஒரு சாமானியனும் வெல்ல முடியும் என்ற புதிய வரலாற்றைப் படைத்த மக்கள் நாயகன் நீங்கள்! 33 ஆண்டுகால கடின உழைப்பால், சோதனைகளை சாதனைகளாக்கி, இன்று எவராலும் எட்ட முடியாத உயரத்தை எட்டியுள்ளீர்கள். நேர்மையுடன் உழைத்தால் முன்னேறலாம் என்பதற்கு இன்றைய தலைமுறை இளைஞர்களுக்கு உங்களை விட ஒரு சிறந்த முன் உதாரணம் இருக்க முடியாது! இளைஞர்களின் எழுச்சி நாயகனாய், தாய்மார்கள் மற்றும் குழந்தைகளின் அன்பு நட்சத்திரமாய் விளங்கும் முதலமைச்சர் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துகள் என தெரிவித்துள்ளார்.

அதேபோல் வனத்துறை அமைச்சர் ரஞ்சித்குமார் வெளியிட்டுள்ள பதிவில், “தமிழ்நாட்டை புதிய பாதையில் வழிநடத்தும் முதலமைச்சர், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர், நம் நெஞ்சினில் வாழும் அன்பு அண்ணன் தளபதிக்கு நெஞ்சம் நிறைந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள்” என கூறியுள்ளார்.

Source: Read Full Article