இலங்கையில் இந்தியா ஏ, ஆப்கானிஸ்தான் ஏ மற்றும் இலங்கை ஏ ஆகிய 3 நாடுகளின் அணிகள் மோதிய முத்தரப்பு கிரிக்கெட் தொடர் நடந்தது. இந்த தொடரின் இறுதிப்போட்டிக்கு இந்தியா ஏ - இலங்கை ஏ அணிகள் தகுதி பெற்றிருந்தன.

சூர்யவன்ஷி காட்டடி:

இரு அணிகளுக்குமான இறுதிப்போட்டி இன்று தம்புல்லா மைதானத்தில் நடந்தது. ஐபிஎல் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான பிரியன்ஷ் ஆர்யா, சூர்யவன்ஷி, ருதுராஜ், திலக் வர்மா இந்திய அணியில் இடம்பிடித்திருந்தனர்.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு வைபவ் சூர்யவன்ஷி - பிரியன்ஷ் ஆர்யா ஆட்டத்தை தொடங்கினர். சூர்யவன்ஷி தனி ஆளாக அதிரடி காட்டினார். ஐபிஎல் தொடரில் ஆடுவது போல அதிரடியாக ஆடினார். பந்துகளை பவுண்டரிக்கும், சிக்ஸருக்கும் அனுப்பினார்.

94 ரன்கள்:

மறுமுனையில் பிரியன்ஷ் ஆர்யா அவருக்கு ஒத்துழைப்பு அளித்தார். சிக்ஸர் மழை பொழிந்த சூர்யவன்ஷி 29 பந்துகளில் 94 ரன்கள் எடுத்து அவுட்டானார். அதில் 10 பவுண்டரிகள் 8 சிக்ஸர்கள் அடங்கும். இந்திய அணி அப்போதே 8.5 ஓவர்களில் 132 ரன்கள் எடுத்திருந்தது. பிரியன்ஷ் ஆர்யா மறுமுனையில் 29 பந்துகளில் 6 பவுண்டரி 1 சிக்ஸருடன் 39 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

அடுத்து ருதுராஜ் கெய்க்வாட் 40 ரன்கள் எடுக்க கேப்டன் திலக் வர்மா 90 பந்துகளில் 4 பவுண்டரி 1 சிக்ஸருடன் 67 ரன்கள் எடுத்தார். கடைசி கட்டத்தில் அன்குல்ராய் 15 பந்துகளில் 1 பவுண்டரி 4 சிக்ஸருடன் 39 ரன்கள் எடுத்து அவுட்டானார். கடைசியில் இந்திய அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 377 ரன்கள் எடுத்தது.

378 ரன்கள் இலக்கு:

378 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை அணிக்கு தொடக்க வீரர் அவிஷ்கா 3 ரன்னில் அவுட்டாக, நிரோஷன் 25 ரன்களிலும், நுவனிந்து 21 ரன்களிலும் அவுட்டாக, 75 ரன்களுக்கு 3 விக்கெட் இழந்த நிலையில் சதீரா சமரவிக்ரமா - கேப்டன் சஹான் ஜோடி நிதானமாக ஆடியது.

சதீரா 52 ரன்களுடனும், சஹான் 38 ரன்களுடனும் அவுட்டாக வனுஜா ஷகான் 62 ரன்கள் கடைசி கட்டத்தில் எடுத்து போராடினார். அவருக்கு விஜயகாந்த் 39 ரன்கள் எடுத்து ஒத்துழைப்பு அளிக்க கடைசியில் இலங்கை அணி 47.1 ஓவர்களில் 311 ரன்களுக்கு அவுட்டானது.

தொடரை வென்ற இந்தியா:

இந்திய அணியில் யஷ் தாக்கூர், விப்ராஜ் நிகாம் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். அன்குல் ராய் 2 விக்கெட்டும், கேப்டன் திலக் வர்மா மற்றும் அசோக் சர்மா தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர். இந்திய அணி இந்த போட்டியில் 66 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்த முத்தரப்பு தொடரை கைப்பற்றியது.

நேற்று சீனியர், இன்று ஜுனியர்:

இந்திய சீனியர் அணி நேற்று ஆப்கானிஸ்தான் அணியுடனான கடைசி போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை வென்ற நிலையில், இன்று இந்திய ஏ அணி தொடரை வென்று அசத்தியுள்ளது.

Source: Read Full Article