தன்னுடைய எருமை மாடு இறந்து, அதற்கான காப்பீட்டு ஆவணங்கள் தொலைந்ததால் காப்பீட்டு தொகையை பெற முடியாமல் தவித்த விவசாயிக்கு 10 ஆண்டுகளுக்கு பிறகு நிவாரணம் கிடைத்திருக்கிறது.

ஹைதராபாத்தில் நடந்த சம்பவம்

தெலுங்கானா மாநிலம் வாரங்கல் பகுதியில் உள்ள ராமவரம் பகுதியைச் சேர்ந்த விவசாயி ரஜினிகுமார் வளர்த்து வந்த எருமை மாடு கடந்த 2016ஆம் ஆண்டு உடல்நலக்குறைவால் உயிரிழந்தது. இந்த எருமை மாடு மாநில கால்நடை திட்டத்தின் அடிப்படையில் காப்பீடு செய்யப்பட்டிருந்தது. அதனடிப்படையில், காப்பீடிற்கான ஆவணங்கள், எருமை மாடு இறந்ததற்கான சான்று, காப்பீடு செய்யப்பட்டதற்கு அடையாளமாக மாட்டின் காதில் இடப்பட்டிருந்த வில்லை ஆகியவற்றை திரட்டி, காப்பீடு தொகை கோரி அந்த விவசாயி, ஹைதராப்பாத்தில் இருந்த காப்பீட்டு நிறுவனத்திற்கு கொரியர் மூலம் அனுப்பி வைத்தார். ஆனால், அந்த கொரியர் காப்பீட்டு நிறுவனத்திற்கும் சென்று சேரவில்லை. விவசாயிக்கும் திரும்பி வரவில்லை.

கொரியர் நிறுவனம் மீது வழக்கு

இந்நிலையில், தான் கொரியர் அனுப்பிய நிறுவனத்திற்கு நேரடியாக சென்று தன்னுடைய கொரியர் தொடர்பான விவரங்களை ரஜினிகுமார் கேட்டதற்கு அங்கிருந்த ஊழியர்கள் சரியாக பதில் சொல்லவில்லை. அதனையடுத்து, காப்பீட்டு நிறுவனத்திற்கு சென்று இது குறித்து கேட்டதற்கு அவர்கள் நக்கலும், நய்யாண்டியுமாக பேசியதுடன், அவரை எருமைமாட்டுடன் ஒப்பிட்டு கேவலமாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் கடும் கோபமும் அதிருப்தியும் அடைந்த விவசாயி ரஜினிகுமார், காப்பீட்டு நிறுவனம் மீது வாரங்கல் மாவட்ட நுகர்வோர் குறைதீர்ப்பு ஆணையத்தை நாடினார்.

உத்தரவு பிறப்பித்த ஆணையம்

இந்த வழக்கை விசாரித்த ஆணையம் விவசாயிக்கு சேர வேண்டிய காப்பீட்டு தொகையான 60 ஆயிரத்தை வட்டியோடு செலுத்த உத்தரவிட்டது. ஆனால், இந்த உத்தரவை எதிர்த்து காப்பீட்டு நிறுவனம், மாநில நுகர்வோர் நீதிமன்றத்தை நாடியது. இந்த விசாரணையின் முடிவில், விவசாயி கொரியர் செய்ததற்கான அனைத்து ஆதாரங்களை வழங்கியிருக்கிறார். ஆனால், கொரியர் நிறுவனத்தை வந்து சேரவில்லை. இதற்கு விவசாயியை பொறுப்பாக்கி அவருக்கான இழப்பீட்டை மறுக்க கூடாது என்று கூறி, எருமை மாட்டை இழந்த விவசாயிக்கு சேர வேண்டிய 60 ஆயிரம் ரூபாயை வட்டியுடன் சேர்த்து 80 ஆயிரம் ரூபாயை உடனடியாக வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் தன்னுடைய பத்து வருட போராட்டத்திற்கு தீர்வு கண்டிருக்கிறார் அந்த ஏழை விவசாயி.

Source: Read Full Article