பள்ளிகளில் சாதி, மத அடையாளங்களுக்கு அனுமதியில்லை என்னும் அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பு குறித்து பாஜக எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறும்போது, ’’மாணவர்களின் கலாச்சார உரிமைகளையும் அவர்களின் வழிபாட்டு சுதந்திரத்தையும் தவெக அரசு நசுக்க நினைக்கிறது.

கல்வி வளாகங்களுக்குள் மதம் சார்ந்த அடையாளங்களோடு யாரும் வரக்கூடாது என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் கூறியிருப்பது, தமிழகத்தின் பாரம்பரியக் கலாச்சாரத்தின் மீதும், பண்பாட்டு விழுமியங்கள் மீதும் தொடுக்கப்பட்ட நேரடித் தாக்குதலாகும்.

சுய அடையாளங்களை அழிக்கும் கூடாரமா

இந்திய அரசியலமைப்புச் சட்டம் (பிரிவு 25) ஒவ்வொரு குடிமகனுக்கும் வழங்கியுள்ள வழிபாட்டுச் சுதந்திரம் மற்றும் மதச் சுதந்திரத்தை முற்றிலும் பறிக்கும் இத்தகைய அறிவிப்பை வன்மையாகக் கண்டிக்கிறேன். பள்ளி என்பது பன்முகத்தன்மையை மதிக்கும் இடமாக இருக்க வேண்டுமே தவிர, மாணவர்களின் சுய அடையாளங்களை அழிக்கும் கூடாரமாக மாறக்கூடாது.

ஆனால், தனது அதிகார மமதையை வெளிப்படுத்தத் தொடங்கியுள்ள தவெக அரசு, முற்போக்கு என்ற போர்வையில் காலாவதியான நாத்திகக் கொள்கைகளை இறக்குமதி செய்து, தமிழக மக்களின் ஆன்மிக வாழ்வியலோடு விளையாட வேண்டாம் என எச்சரிக்கிறேன்.

இதையும் வாசிக்கலாம்: Minister Raj mohan: பள்ளிகளில் சாதி, மத அடையாளங்களுக்கு நோ; தனியார் பள்ளி கல்விக்கட்டணம்- அமைச்சர் ராஜ்மோகன் பேட்டி

எனவே, மக்களின் உணர்வுகளைக் காயப்படுத்தும் இந்த அறிவிப்பைத் தவெக அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். இல்லையெனில், தமிழக மக்கள் தங்களது கலாசாரத்தைக் காக்க ஜனநாயக ரீதியில் திரண்டெழுவார்கள்’’ என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

இந்து அடையாளங்களை மட்டும் அழிக்கும் நோக்கமா?

இதுகுறித்து எச்.ராஜா வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், மதம் சம்பந்தப்பட்ட அடையாளங்களோடு கல்வி வளாகத்துக்குள்ள வரக்கூடாது என்று சொல்லும் அமைச்சர் ராஜ்மோகன் அவர்களே இது அனைத்து மதங்களுக்கும் பொருந்துமா? அல்லது இந்து அடையாளங்களை மட்டும் அழிக்கும் நோக்கமா?

மக்களின் மதநம்பிக்கையோடு விளையாடாமல் ஆக்கப்பூர்வமான வேலைகளில் தவெக அரசு கவனம் செலுத்த வேண்டும்!!

மத அடையாளங்களைப் புறக்கணிப்போம் என்று மேடையில் முழங்கிவிட்டு, பின்புறமாக, விபூதி பூசுவது, சாமி கயிறு கட்டுவது போன்ற இந்து மக்களின் உரிமையை மட்டும் ஒடுக்கத்தான் இந்த அறிவிப்போ என்ற சந்தேகம் எழுகிறது! ஏற்கனவே இந்து விரோத திமுக ஆட்சியில் நடைமுறைப்படுத்த நினைத்த சதித்திட்டத்தையே தற்போது வேறு வார்த்தைகளில் தவெக அமைச்சர் உரைத்திருப்பது தவெகவுக்கும் திமுகவுக்கும் ஒரு வித்தியாசமும் இல்லை என்பதை உணர்த்துகிறது.

நாத்திக திமுகவின் நாற்றமடித்த கொள்கைகள்

ஆம், திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபமேற்ற விடாமல் தடுப்போம் என்று கூறியதில் தொடங்கி, தற்போது மத அடையாளங்கள் கூடாது என்று சொல்வது வரை நாத்திக திமுகவின் நாற்றமடித்த கொள்கைகளையே தூக்கிப்பிடிப்பது தான் மாற்று சக்தியின் லட்சணமா? ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி, உங்களின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை பள்ளிக்குழந்தைகள் மீது திணித்து தனிமனித வழிபாட்டு உரிமையைப் பறிப்பது தான் தூய சக்தியா?

அரசுப்பள்ளிகளை மேம்படுத்துவதிலும், காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்புவதிலும் தலைமையிலான தவெக அரசு கவனம் செலுத்த வேண்டுமே தவிர மதச்சார்பற்ற அரசு என்ற போர்வையில் தேவையற்ற மேனாமினுக்கு வேலைகளில் ஈடுபடக்கூடாது என்று எச்.ராஜா தெரிவித்துள்ளார்.

Source: Read Full Article