பெண்கள் பாதுகாப்பை முதன்மையாக வலியுறுத்தி தான் சந்தித்த முதல் தேர்தலிலே வெற்றி பெற்றவர் தவெக தலைவர் விஜய். முதலமைச்சராக பொறுப்பேற்ற விஜய் பெண்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு சிங்கப்பெண் சிறப்பு படை என்ற அதிரடி படையைத் தொடங்கியுள்ளார்.

பாலியல் வன்கொடுமை:

இந்த சூழலில், ஆலந்தூரில் தவெக வடக்கு பகுதி கழகச் செயலாளர் வேம்புலி மீது பாலியல் வன்கொடுமை புகார் எழுந்துள்ளது. அதாவது, கணவரை இழந்து வசிக்கும் பெண்ணின் வீட்டின் உள்ளே புகுந்து அந்த பெண்ணிற்கு பாலியல் தொல்லை அளித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக அரசியல் தலைவர்கள் விஜய் என்ன நடவடிக்கை எடுப்பார்? என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

கட்சி நிர்வாகிகளுக்கு சொல்லித் தருவது எப்போது?

அமமுக பொதுச்செயலாளர் தினகரன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, சென்னை ஆலந்தூர் பகுதியில் கணவனை இழந்து தனியாக வசித்து வரும் பெண் ஒருவரின் வீட்டிற்குள் இரவு நேரத்தில் நுழைந்து பாலியல் ரீதியாகத் தொல்லை கொடுத்ததாக தவெக நிர்வாகி வேம்புலி மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்திருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

கடந்த சில தினங்களுக்கு முன்பாக சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப்படையைத் தொடங்கி வைத்து தனி மனித மற்றும் சமூக ஒழுக்கம் குறித்து மேடையில் பாடமெடுத்த முதலமைச்சர் ஜோசப் விஜய், தனது கட்சி நிர்வாகிகளுக்கு எப்போது தனிமனித ஒழுக்கத்தை சொல்லித் தருவார் ? அவர்களிடம் இருந்து எப்படி பெண்களைப் பாதுகாக்கப் போகிறார் ? என்ற கேள்வி அனைவரின் மத்தியிலும் எழுந்துள்ளது.

பாடமாக இருக்க வேண்டும்:

வழக்குப்பதிவு செய்யவும், விசாரணை நடத்தவும் அதிகாரம் இல்லாத வகையில் அமைக்கப்பட்டிருக்கும் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையால் பொதுமக்கள் அதிகளவு கூடும் இடங்களில் விழிப்புணர்வு எனும் பெயரில் ரீல்ஸ் போட முடியுமே தவிர, குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களை அடியோடு தடுக்க முடியாது என்ற விமர்சனங்களும் எழத் தொடங்கியிருக்கிறது.

எனவே, ஆலந்தூர் பகுதியில் பெண்ணின் வீடு புகுந்து பாலியல் ரீதியாகத் தொல்லை கொடுத்த தவெக நிர்வாகி மீது எடுக்கப்படவுள்ள நடவடிக்கை அத்துமீறல்களில் ஈடுபடும் தவெகவினர் மட்டுமின்றி பெண்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருக்கும் அனைவருக்கும் பாடமாக அமைய வேண்டும் என முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களை வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக, தமிழக பாஜக-வின் முன்னாள் தலைவரான அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில், தவெக ஆலந்தூர் வடக்கு பகுதிச் செயலாளர் வேம்புலி என்ற நபர், கணவரை இழந்து தனியே வசிக்கும் பெண்ணின் வீடு புகுந்து, பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ள செய்தி, மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது.

எங்கிருந்து தைரியம்?

பெண்களின் பாதுகாப்பு குறித்து தவெக தலைவர் முதலமைச்சர் விஜய் கூறிவரும் வாக்குறுதிகளுக்கு நேர்மாறாக உண்மை நிலை இருப்பது, மிகுந்த ஏமாற்றமளிக்கிறது.

திமுக ஆட்சியில் நடைபெற்ற பெண்களுக்கு எதிரான குற்றங்கள், தற்போதைய ஆட்சியிலும் குறையவில்லை. இது போன்ற கடுமையான குற்றங்களில் ஈடுபடும் தைரியம், இவர்களுக்கு எங்கிருந்து வருகிறது?

சமூக விரோதச் செயல்பாடுகளுக்கு, அரசியல் அடையாளம் பாதுகாப்பாக இருக்கக்கூடாது என்பதை, முதலமைச்சர் உறுதி செய்யவேண்டும். குற்றவாளி மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

அரசியல் தலைவர்கள் அடுத்தடுத்து அழுத்தம் தரத்தொடங்கியுள்ள நிலையில், ஆலந்தூர் தவெக நிர்வாகி வேம்புலி மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Source: Read Full Article