திமுக விவசாய அணி வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் கூறியிருப்பதாவது,

தமிழ்நாட்டில் விவசாய புரட்சியை ஏற்படுத்திய திமுக ஆட்சியில் ஆண்டுதோறும் ஜூன் 12 ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டு, விவசாயத்தை மேம்படுத்திய அந்த நடைமுறையை கூட இந்த நீர்மேலாண்மையிலும் அனுபவமில்லாத அரசு கடைபிடிக்கமுடியாமல் தோற்றுப்போயிருக்கும் நிலையிலும், வேளாண்மைக்கு என தனி பட்ஜெட் அறிவித்த திராவிட மாடல் அரசின் பிதாமகர் மு.க.ஸ்டாலின் வேளாண்மை திட்டங்களை போல அல்லாமல், தற்போது வெற்று அறிவிப்பாக ரீல்ஸ் மாடல் அரசு வெளியீட்டிருக்கும் குறுவை தொகுப்பு மற்றும் மும்முனை மின்சார அறிவிப்பு என்பது அடுப்பை பற்றவைக்காமலேயே சமைப்பது போல உள்ளது.

விவசாய புரட்சி:

தமிழ்நாட்டின் விவசாயப்புரட்சி என்பதும் விவசாயிகளின் பொற்காலம் என்பதும் திமுக ஆட்சிகாலம்தான் என்பது மறைக்க முடியாத உண்மை, எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்த அதிமுக காலகட்டத்தில், விவசாய பயன்பாட்டிற்கான மின்சாரக் கட்டணம் 13 பைசாவிலிருந்து 14 பைசாவாக உயர்த்தப்பட்டதை எதிர்த்து நாராயணசாமி தலைமையிலான விவசாயிகள் சங்கம் கடுமையான போராட்டங்களை முன்னெடுத்தது.

மின்சார கட்டணம் ரத்து:

1980-ஆம் ஆண்டு டிசம்பர் 31-ஆம் தேதி நடைபெற்ற கடையடைப்புப் போராட்டத்தின் போது திருநெல்வேலி மாவட்டம் குருஞ்சாக்குளம் கிராமத்தில் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 8 விவசாயிகள் பலியாகினர். அதனை தொடர்ந்து 1989-ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற முத்தமிழ் அறிஞர், ஒருபைசா குறைக்க போராடிய விவசாயிகள் இனி விவசாயிகள் வேளாண்மைக்கு பயன்படும் மின்சாரத்திற்கு ஒரு பைசா கூட கட்டணம் கட்டவேண்டாம் என இலவச மின்சாரம் தந்தது கழக அரசு.

கூட்டுறவு கடன் தள்ளுபடி:

2006ம் ஆண்டு கருணாநிதி ஆட்யில்தான் 22.4 லட்ச விவசாயக் குடும்பங்களுக்கு ரூ 7000 கோடி கூட்டுறவுக் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டு, அவர்களின் பொருளாதாரச் சுமையைக் குறைத்து, அது விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், விவசாயத்தைத் தொடரவும் உதவியது. அவரது முன்முயற்சியான அணுகுமுறை, தமிழகத்தில் விவசாயிகளின் நலன் மற்றும் விவசாய மேம்பாட்டிற்கான அவரது அர்ப்பணிப்பை வெளிப்படுத்தியது.

தமிழ்நாட்டின் அனைத்து விவசாயம் சார்ந்த மாவட்டங்களிலும் விவசாயிகள் , விவசாய தொழிலாளர்கள், விவசாய சங்க பிரதிநிதிகள் சந்திப்பு கூட்டங்கள் , காவிரி மீட்பு பேரணி இப்படி பல விவசாயம் சார்ந்த நடவடிக்கைகளை எதிர்க்கட்சியாக இருந்தபோதும் திமுக செய்ததை தற்போதைய ஆட்சியாளர்கள் நினைவில் கொள்ளவேண்டும்.

மேட்டூர் அணை திறப்பு:

இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக ஒவ்வொரு ஆண்டும் சரியாக ஜூன் 12 மேட்டூர் அணைதிறப்பு, சோழர்கள் ஆட்சிக்கு பின்னர் அனைத்து நீர்நிலைகளும் தூர்வாரும் பணிகள், கடைமடை பகுதிவரியிலான நீர் பாசனம், வேளாண் மையங்களில் ஈடுபொருட்களும், விதை உரம் உள்ளிட்ட விவசாய உற்பத்தி பொருட்கள் போதுமான அளவு இருப்பு, அதிக நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள், அங்கு பணிபுரியும் சுமைப்பணி தொழிலாளர்களுக்கும் ஊதிய உயர்வு இப்படி இவைகளெல்லாம் வேளாண் வளர்ச்சியை நாட்டிலேயே உயர்ந்த மாநிலமாக தமிழ்நாட்டை உயர்த்திக்காட்டியது திராவிட மாடல் அரசு.

குறுவைத் தொகுப்பு, மும்முனை மின்சாரம்:

தமிழ்நாட்டில் இந்த புரட்சிகளெல்லாம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது குளிரூரட்டப்பட்ட கேரவனுக்குள் படப்பிடிப்பு தளத்தில் இருந்தவர்கள், தற்போது விவசாயிகளுக்கு என்ன தேவை? என்பதை கூட அறியாமல் குறுவை தொகுப்பு திட்டத்தையும் , மும்முனை மின்சாரத்தையும் அறிவிப்பாக வெளியிட்டிருக்கிறார்கள்.

விவசாய கடன் தள்ளுபடி:

தேர்தல் நேரத்தில் யாரோ எழுதிக்கொடுத்த விவசாய கடன் தள்ளுபடி வாக்குறுதியை படித்து விவசாயிகளை ஏமாற்றி வாக்கு சேகரித்த அவர்கள் தற்போது , அதைக்கூட நிறைவேற்ற வக்கின்றி குறுவை தொகுப்பு திட்டத்தை அறிவித்து இருக்கிறார்கள்.

மு.க.ஸ்டாலின் ஆட்சியில் கொடுத்த வாக்குறுதியின்படி திமுக அரசு 2021-ஆம் ஆண்டு பொறுப்பேற்றவுடன், கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற ரூ.12,110 கோடி மதிப்பிலான பயிர்க்கடன் மற்றும் நகைக்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்தார். ஐந்து சவரனுக்கு உட்பட்டு விவசாய நகைக்கடன் முழுவதும் எந்த நிபந்தனைகள் இல்லாமல் தள்ளுபடி செய்யப்பட்டது.

ரீல்ஸ் மாடல் ஆட்சி:

இப்படி விவசாயம் பற்றியும் ,விவசாயிகளின் பிரச்சனை குறித்த புரிதல் இன்றியும், டெல்டா விவசாயத்தின் உயிர்நாடி மேட்டூர் அணை திறப்பு குறித்த அக்கறை இன்றியும் குறுவை திட்ட சாகுபடி தொகுப்பு திட்டத்தை அறிவித்து இருக்கிறது ரீல்ஸ் மாடல் அரசு.

கர்நாடகத்தில் மேக தாதுவில் அணை கட்ட எல்லா முயற்சியை எடுக்கும் காங்கிரஸ் அரசுக்கு எதிராக , தனது ஆட்சி கவிழ்ந்து விட கூடாது என்கிற பயத்தில் மேகதாது அணை பிரச்சினையில் வாய்திறக்கவே இந்த அரசு பயப்படுகிறது.

தமிழ்நாட்டில் புதிதாக ஆட்சிப்பொறுப்புக்கு வந்திருக்கும் இந்த ரீல்ஸ் மாடல் அரசு, மாநிலம் முழுவதும் தங்களது அனுபவமற்ற நிர்வாக திறனால் ஏற்பட்டிருக்கும் மின் தடையை போக்க நடவடிக்கை எடுக்காமல் , அதை திசைதிருப்பி மடைமாற்றம் செய்திட காரணம் தேடிக்கொண்டிருக்கும் அமைச்சர்களை கொண்டிருக்கும் நிலையில், விவசாயிகளுக்கான குறுவை தொகுத்திட்டம் வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவாதாகவே அமைந்திருக்கிறது.

விவசாய மேம்பாடு:

திராவிட மாடல் ஆட்சியில் அனைத்து துறைகளுமே விவசாய மேம்பாட்டை மையப்படுத்தி செயல்பட்டதால்தான், நெல் உற்பத்தி பல புதிய உச்சங்களை எட்டியது. தமிழ்நாட்டில் ஒட்டுமொத்த நெல் உற்பத்தி 120 லட்சம் டன் என்ற அளவைத் தாண்டியது. அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் 4 ஆண்டுகளில் 42 லட்சத்திற்கும் அதிகமான மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. விவசாயிகளின் நலனைக் காக்க, ஒன்றிய அரசின் ஆதார விலையுடன் மாநில அரசின் சார்பில் கூடுதல் ஊக்கத்தொகையும் வழங்கப்பட்டது.

காவிரி நீர் பெற வேண்டும்:

அண்டை மாநிலமான கர்நாடகாவில் தனது ஆட்சி நடக்க தமிழ்நாட்டில் முட்டுக்கொடுக்கும் காங்கிரஸ் கட்சி ஆள்வதால், அவர்களிடம் இணக்கமாக பேசி காவிரிநீரை பெறவேண்டும் , மேகதாது அணை கட்டுவதை எதிர்த்து பேசவேண்டும், அனைத்து கட்சி கூட்டத்தை நடத்தி வேளாண்மை கொள்கைகள் திட்டங்களை விவாதித்து கலந்து ஆலோசிக்க வேண்டும். விவசாய அமைப்பு பிரதிகளை அழைத்து பேசவேண்டும்.
விவசாயிகளுக்கும் , விவசாய தொழிலாளர்களுக்கும் ,வேளாண் வளர்ச்சிக்கும் திமுகவின் அறிய திட்டங்களில் சிலவற்றையாவது கொஞ்சம் படித்துப் பார்க்க வேண்டும். செய்வார்களா?

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: Read Full Article