இயந்திரத்தின் மூலம் சங்கேத எண்ணைப் பெற முதலில் ரயில்வே கேட்டை மூட வேண்டும்.

மதுரை கோட்டத்தில் ரயில்வே கேட்டுகளில் கண்காணிப்பு காமிரா

பாதுகாப்பான ரயில் பயணத்தை உறுதி செய்ய மதுரை கோட்டத்தில் சிக்னல் கட்டுப்பாடு இல்லாத 99 ரயில்வே கேட்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. ரயில் வருகை பற்றி நிலைய அதிகாரி ரயில்வே கேட் ஊழியரிடம் தெரிவித்துவிட்டார் என்பதை உறுதி செய்ய இருவரும் தங்களுக்கு வழங்கப்பட்ட சிறு புத்தகத்திலிருந்து சங்கேத எண்களை பரிமாறிக் கொள்வது வழக்கம். தற்போது இந்த சங்கேத எண்ணைப் பெற சங்கேத எண்கள் அச்சிடப்பட்ட சிறு புத்தகத்திற்கு பதிலாக ரயில்வே கேட்டுகளில் சிறப்பு இயந்திரம் நிறுவப்பட்டுள்ளது. இந்த இயந்திரத்தின் மூலம் சங்கேத எண்ணைப் பெற முதலில் ரயில்வே கேட்டை மூட வேண்டும்.

கண்காணிப்பு கேமரா வசதி உதவும்.

கேட் மூடினால் தான் சங்கேத எண்ணை இயந்திரம் வெளியிடும். இந்த முயற்சி ரயில்கள் விபத்து இல்லாமல் ரயில்வே கேட்டுகளை கடக்க உதவும். இந்த நடவடிக்கைகளை எல்லாம் கண்காணிப்பு கேமராவும் கண்காணிக்கும். கண்காணிப்பு கேமரா பதிவுகள் நிலைய அதிகாரி மற்றும் மதுரை ரயில் கட்டுப்பாட்டு அலுவலராலும் தொடர்ந்து கண்காணிக்கப்படும். இந்த சிறப்பு ஏற்பாடுகள் மூலம் ரயில் விபத்துக்கள் முழுமையாக தவிர்க்கப்படும். மேலும் ரயில்வே கேட்களை திறக்க சொல்லி ஊழியர்களை நிர்ப்பந்தப்படுத்தி சமூக விரோதிகள் தாக்குவது போன்ற நிகழ்வுகளில் குற்றவாளிகளை பிடிக்கவும் கண்காணிப்பு கேமரா வசதி உதவும்.

கண்காணிப்பு கேமரா மட்டும் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த புதிய வசதிகள் திருநெல்வேலி - தென்காசி பிரிவில் 18 இடங்களிலும், மானாமதுரை - விருதுநகர் பிரிவில் 4 இடங்களிலும், விருதுநகர் - செங்கோட்டை - புனலூர் பிரிவில் 18 இடங்களிலும், திருநெல்வேலி - திருச்செந்தூர் பிரிவில் 7 இடங்களிலும், மானாமதுரை - ராமேஸ்வரம் பிரிவில் 18 இடங்களிலும், மானாமதுரை - திருச்சி பிரிவில் 14 இடங்களிலும், மானாமதுரை - மதுரை பிரிவில் 7 இடங்களிலும் திண்டுக்கல் - பொள்ளாச்சி பிரிவில் 12 இடங்களிலும், வாஞ்சி மணியாச்சி - தூத்துக்குடி பிரிவில் ஒரு இடத்திலும் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் இதே பிரிவில் ஒரு இடத்தில் கண்காணிப்பு கேமரா மட்டும் பொருத்தப்பட்டுள்ளது.

Source: Read Full Article