தவெக அரசின் தேர்தல் வாக்குறுதி

தமிழகத்தில் திமுக- அதிமுக ஆகிய திராவிட கட்சிகளுக்கு மாற்றாக நடிகர் விஜய் தலைமையிலான தவெக ஆட்சியை கைப்பற்றியுள்ளது. இதனையடுத்து தங்களது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றிடும் வகையில் பல்வேறு திட்டங்கள் தொடர்பான அறிவிப்பை முதலமைச்சர் விஜய் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் பெண்கள் பாதுகாப்பிற்கான சிங்கப்பெண் திட்டம், பள்ளி, கோயில்கள், பேருந்து நிலையங்களுக்கு அருகே உள்ள டாஸ்மாக் கடைகள் மூடல், விவசாயிகள் கடன் தள்ளுபடி என திட்டங்களை அறிவித்து வருகிறார். அந்த வகையில் தாய் மாமன் சீர் திட்டமான பிறந்த குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும் என்ற அறிவிப்பை நேற்று வெளியிட்டிருந்தார்.

ஜூன் 22ஆம் தேதி முதல் தங்க மோதிரம்

அந்த வகையில் தமிழர் பாரம்பரியத்தில், "தாய்மாமன் சீர்" என்ற மரபின்படி, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தாயின் சகோதரர் புதிதாகப் பிறந்த குழந்தையை வரவேற்று வாழ்த்தும் வகையில் தங்கம் உள்ளிட்ட பரிசுகளை வழங்கும் விதமாகவும், தமிழர் பண்பாட்டு மரபை பிரதிபலிக்கும் வகையிலும், அரசு ஒவ்வொரு குழந்தைக்கும் தாய்மாமனின் பங்கை ஏற்று, அன்பும் அக்கறையும் நிறைந்த வரவேற்பின் அடையாளமாக ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்தின் கீழ், 22 ஜூன் 2026 முதல் அரசு மருத்துவ மனைகளில் பிறக்கும் குழந்தைகள் பயன் பெறுவார்கள். "தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்" பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளான செப்டம்பர் 15, 2026 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் துவக்கி வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

அரசு மருத்துவமனையில் 53% பிரசவம்

இந்த நிலையில் யார் யாருக்கு இந்த திட்டத்தின் மூலம் பயன் அடைய முடியும் என வழிகாட்டுதல் வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில், தமிழகத்தில் ஆண்டுதோறும் சுமார் 7.8 லட்சம் பிரசவங்கள் நடைபெறுகின்றன. மொத்தப் பிறப்புகளில் 99.9% மருத்துவமனைகளில் நடைபெறும் பிரசவங்களாக உள்ளன. இதில், அரசு சுகாதார நிலையங்கள் ஏறக்குறைய 4.2 லட்சம் (53%) பிரசவங்களை மேற்கொள்கின்றன. தனியார் மருத்துவமனைகளில் ஒரு பிரசவத்திற்கு ஆகும் சராசரி செலவு ரூ.63,473/- ஆக உள்ள நிலையில், அரசு மருத்துவமனைகளில் அது வெறும் ரூ.1,364/- மட்டுமே என்று தேசிய மாதிரி ஆய்வு மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி திட்டத்திற்கான தகுதியானவர்கள் மற்றும் தேவையான அடிப்படை ஆவணங்கள் குறித்தான விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது

தகுதியானவர்கள் யார்.?

1.தமிழ்நாட்டில் வசிப்பவர்கள் இத்திட்டத்திற்குத் தகுதியானவர்கள்.

2. அரசு மருத்துவமனைகளில் பிரசவிக்கும் அனைத்து கர்ப்பிணித் தாய்மார்களும்.

3. தாய், RCH ID உடன் PICME-இல் பதிவு செய்திருக்க வேண்டும்.

4. பச்சிளம் குழந்தைகளைக் கொண்ட தாய்மார்கள் இத்திட்டத்தின் கீழ் தகுதியானவர்கள்.

தாய் மாமன் தங்க மோதிர திட்டம்- தேவைப்படும் ஆவணங்கள்

(i) குடும்ப அட்டை (Ration Card); (ii) வாக்காளர் அடையாள அட்டை; (iii) ஆதார் அட்டை; (iv) தொழிலாளர் நல வாரியங்களால் வழங்கப்பட்ட அடையாள அட்டை; (v) அஞ்சல் துறையால் வழங்கப்பட்ட "முகவரிச் சான்று அட்டை" (Proof of Address Card); (அல்லது) (vi) பிறப்பிடச் சான்றிதழ்.

"ஒரு கிராம் தங்க மோதிரம்" கொள்முதல் செய்யும் பணி தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் (TNMSC) மூலம் மேற்கொள்ளப்படும். 'தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்' செயல்படுத்தவும், கண்காணிக்கவும் மற்றும் நிர்வகிக்கவும் ஒரு பிரத்யேக நிர்வாக அமைப்பான 'மாநிலத் திட்ட மேலாண்மைப் பிரிவு' (SPMU) அமைக்கப்படும் என அராசணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: Read Full Article