மல்டி லெவல் கார் பார்க்கிங் - அனுமதி மறுப்பு

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் முன்னாள் அறநிலையத்துறை அமைச்சரும் தி.மு.க சட்டமன்ற உறுப்பினருமான சேகர்பாபு செய்தியாளர்களை சந்தித்தார்.

இந்த சந்திப்பில் , குன்னூர் வினாயகர் கோவில் மல்டி லெவல் கார் பார்க்கிங் விவகாரம் குறித்து விளக்கம் அளித்தார். அப்போது பேசிய அவர் ;

நடந்து முடிந்த சட்டப் பேரவையில் குன்னூர் விநாயகர் கோயிலில் மல்டி லெவல் கார் பார்க்கிங் வரம்புக்கு மீறி கட்டப்பட்டதாக இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். இதற்கு விளக்கம் அளிக்க சட்டப் பேரவையில் எனக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

என்ன தவறு நடந்துள்ளது ?

குன்னூரில் உள்ள விநாயகர் கோவிலுக்கு மல்டி லெவல் கார் பார்க்கிங் தேவை என்று கோரிக்கை வைத்தார்கள். கோரிக்கை வைத்ததற்கு இணங்க கோயிலுக்கு தேவைப்படும் நிதியை மருதமலை கோயிலில் இருந்து , கடனாக பெறுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

அதன்படி மருதமலை கோயிலின் உள்ள அறங்காவலர்கள் சம்மதத்துடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மல்டி லெவல் கார் பார்க்கிங் கட்டப்பட்டது. இதில் என்ன தவறு நடந்துள்ளது. அறநிலையைத்துறை அமைச்சர் ஏன் இதை சுட்டிக் காட்டுகிறார் என்று எனக்குத் தெரியவில்லை.

தொலை நோக்கு பார்வை

கமர்ஸியல் என்பது திருக்கோயிலின் வருமானங்களை ஈட்டுவதற்கான முயற்சி. குன்னூர் சுற்றுலா பகுதி என்பதால் தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் இடமாக உள்ளது அங்கே வாகனங்கள் நிறுத்த முடியாத சூழல் இருப்பதால் , கோவில் பக்தர்கள் மட்டுமல்லாமல் சுற்றுலா பயணிகளும் பயன்படுத்தும் வகையில் மல்டி லெவல் கார் பார்க்கிங் கட்டி கொடுக்கப்பட்டது.

அதில் வரும் கட்டணத்தை வைத்து , ஊட்டியில் இருக்கும் 52 திருக்கோயில்களில் நழிவடைந்த திருக்கோயில்களுக்கு தேவையான அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதற்கான தொலை நோக்கு போர்வையாகத் தான் அது செயல்படுத்தப்பட்டது.

இதை முழுமையாக உணராமலும் புரியாமலும் ஒரு அமைச்சர் அவசரகதியில் பேசுகிறார். இனி மேலாவது அந்தத் திட்டம் ஏன் செயல்படுத்தப்பட்டது என்ற உண்மை நிலையை அமைச்சர் உணர வேண்டும். இதுவரையில் அத்திட்டத்திற்கு உண்டான அனுமதி ரத்து செய்யப்படவில்லை. பக்தர்கள் மட்டுமல்லாது சுற்றுலா பயணிகளுக்கும் சேர்த்துத் தான் கார் பார்க்கிங் ஏற்படுத்தப்பட்டதே தவிர வெறும் திருக்கோவிலுக்கு மட்டுமான பயன்பாட்டிற்கு மல்டி லெவல் கார் பார்க்கிங் கட்டப்படவில்லை.

அறிவார்ந்த அனைவரும் ஏற்பார்கள்

நலிவடைந்த திருக் கோயில்களின் நிலையை மேம்படுத்துவதும், வருகின்ற பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்வதற்கு உண்டான வருவாயை உயர்த்துவதற்காகத் தான் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அறிவார்ந்த அனைவரும் இதனை வரவேற்பார்கள்.

பேரவையில் அமைச்சர்கள் கூறிய கருத்திற்கு எதிர் தரப்பினர் சரியான வாதத்தை தெரிவித்தார்கள் என்றால் அதற்கான அனுமதியை எப்போதும் தர மாட்டார்கள். அனுமதி மறுப்பார்கள் அது தான் நேற்றைக்கும் முழுமையாக நடைபெற்றது. அடிக்க அடிக்க உயரும் பந்து போல் , திமுக மேலும் மேலும் நிமிர்ந்து திமிரி நிற்கும் உருட்டல் மிரட்டலுக்கெல்லாம் அஞ்சுகின்ற இயக்கம் திமுக அல்ல என தெரிவித்தார்.

Source: Read Full Article