தமிழ்நாட்டைப் பொறுத்தமட்டில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல் பல மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. இந்த தேர்தலைப் பொறுத்தமட்டில் பலமிகுந்த திமுக, அதிமுக கட்சிகளை வீழ்த்தி முதல் தேர்தலிலே தவெக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது.

காத்திருக்கும் இடைத்தேர்தல்:

இந்த தேர்தல் முடிவுகளுக்கு பிறகு திமுக - அதிமுக கூட்டணி அமைக்க முயற்சித்ததாக பல தரப்பினரும் குற்றம் சாட்டினர். ஆனால், அப்படி நடக்கவில்லை என்று திமுக மறுப்பு தெரிவித்தது. இந்த சூழலில், தமிழ்நாட்டில் விரைவில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. திராவிட கட்சிகள் தங்களுக்கு புதிய எதிரியாக உருவெடுத்துள்ள தவெக-வை இந்த இடைத்தேர்தலில் வீழ்த்த வேண்டும் என்று திட்டவட்டமாக உள்ளனர்.

பங்காளிகள்:

இந்த சூழலில், திமுக-வின் மூத்த தலைவரான ஆர்எஸ் பாரதி, திமுக-வில் இருந்து பிரிந்ததுதான் அதிமுக. அதிமுக தங்களுக்கு பகையாளிகள் அல்ல, பங்காளிகள்தான். திமுக-வும், அதிமுக-வும் கூட்டணி வைத்தால் ஒன்றும் தவறு அல்ல என்று பேசியுள்ளார். இது திமுக-அதிமுக கூட்டணி வைக்க முயற்சித்ததற்கான சந்தேகத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளது.

அதேசமயம், வரும் இடைத்தேர்தலில் திமுக - அதிமுக இணைந்து களமிறங்க இருப்பதையும் இது ஏறத்தாழ உறுதி செய்துள்ளது. தாராபுரம், திருச்சி கிழக்கு, அம்பாசமுத்திரம், பெருந்துறை, விராலிமலை மற்றும் மதுராந்தகம் ஆகிய 6 தொகுதிகளில் சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

திமுக - அதிமுக கூட்டணி உறுதியா?

இந்த இடைத்தேர்தலில் திமுக - அதிமுக ஆகிய கட்சிகள் இணைந்து பொது வேட்பாளர்களை இறக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. இந்த சூழலில் ஆர்எஸ் பாரதியின் பேட்டி இந்த கூட்டணி உறுதியாக இருப்பதையே மறைமுகமாக உணர்த்துகிறது.

இந்த இடைத்தேர்தலில் திமுக - அதிமுக - நாம் தமிழர் ஆகிய 3 கட்சிகளும் இணைந்து 3 +2 +1 என்ற கணக்கில் களமிறங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதேசமயம், ஆளுங்கட்சி என்ற அந்தஸ்துடன் களமிறங்க உள்ள தவெக 6 தொகுதிகளையும் கைப்பற்றும் முனைப்பில் களமிறங்கும். இதனால், வரும் இடைத்தேர்தல் தமிழ்நாட்டில் மிகவும் பரபரப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த தேர்தலில் தங்களிடம் இருந்து பறிபோன 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளதாலும், அதிமுக-வின் மிகவும் முக்கியமான நிர்வாகிகள் தற்போது தவெக பக்கம் தாவி இருப்பதாலும் அதிமுக தவெக-வை வீழ்த்தியே ஆக வேண்டும் என்று வைராக்கியமாக உள்ளனர்.

Source: Read Full Article