நண்பனின் தங்கையுடன் காதல்

கோயம்புத்தூர் மாவட்டம் காரமடை அருகே உள்ள மருதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணன். எலக்ட்ரீசியனாக பணியாற்றி வந்த இவரும் அதே பகுதியைச் சேர்ந்த பாரதிராஜா என்பவரும் நெருங்கிய நண்பராக பழகி வந்ததாக கூறப்படுகிறது. எனவே பாரதிராஜா வீட்டிற்கு கண்ணன் அடிக்கடி சென்று வந்த நிலையில் பாரதிராஜாவின் தங்கைக்கும் கண்ணனுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இருவரும் தொடர்ந்து பழகி வந்த நிலையில் நாளடைவில் அந்த பழக்கம் காதலாக மாறியுள்ளது. இதனை அறிந்த பாரதிராஜா கண்ணன் மீது கடும் ஆத்திரமடைந்திருக்கிறார். எனவே காதலை கைவிடுமாறு பலமுறை எச்சரித்தும் கண்ணன் அதற்கு சம்மதிக்கவில்லை என தெரிகிறது.

நண்பனை கொலை செய்ய முடிவு

இதனால் நண்பர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு நீடித்து வந்துள்ளது. நாளடைவில் கண்ணனை தீர்த்துக் கட்ட முடிவு செய்த பாரதிராஜா, தனது பிற நண்பர்களான வசந்தகுமார் மற்றும் மணிகண்டன் ஆகியோரின் உதவியுடன் அவரை தனியாக வரவழைக்க திட்டமிட்டுள்ளார்.

அதன்படி வசந்த குமாரும், மணிகண்டனும் சேர்ந்து கடந்த (ஜூன் 11) ஆம் தேதி நியூ அம்மன் நகர் பகுதியில் உள்ள ஐயர் தோட்டத்து வீட்டுக்கு வருமாறு கூறி கண்ணனை அழைத்துச் சென்றிருக்கின்றனர். அங்கு பாரதிராஜாவுடன் ஏற்கனவே அவரது நண்பர்களான ருத்தீஷ் நசீர் உசேன் உள்ளிட்டோர் இருந்ததாக கூறப்படுகிறது.

" நீ எப்படி என் தங்கச்சிய லவ் பண்ணுவ "

கண்ணனிடம் காதல் தொடர்பாக 'பஞ்சாயத்து' பேசிய அவர்கள், நீ எப்படி என் தங்கச்சிய லவ் பண்ணுவ என பாரதிராஜாவின் தங்கையுடனான உறவை கை விடுமாறு வலியுறுத்தியுள்ளனர். ஆனால் கண்ணன் அதற்கு மறுப்பு தெரிவித்து அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த பாரதிராஜா மற்றும் அவரது நண்பர்கள் கண்ணனை சரமாரியாக தாக்கிய நிலையில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். பின்னர் கொலையை மறைக்க முயன்ற குற்றவாளிகள், அவரது உடலை அருகில் இருந்த தோட்டக் கிணற்றில் வீசி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

அழுகிய நிலையில் சடலம்

இந்த நிலையில், கடந்த (ஜூன் 13) ஆம் தேதி மேட்டுப்பாளையம் மணி நகர் அருகே உள்ள தனியார் தோட்டக் கிணற்றில் இளைஞர் ஒருவரின் சடலம் மிதப்பதாக கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் , மிகவும் அழுகிய நிலையில் இருந்த உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் , உயிரிழந்தவர் மருதூர் கிராமத்தைச் சேர்ந்த எலக்ட்ரிசியன் கண்ணன் என்பது உறுதி செய்யப்பட்டது.

மேலும் அவர் கடைசியாக வசந்தகுமார் மற்றும் மணிகண்டன் ஆகியோருடன் சென்றதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். அதில், நண்பனின் தங்கையைக் காதலித்த விவகாரத்தில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக கண்ணன் அடித்துக் கொலை செய்யப்பட்டதும், பின்னர் அவரது உடல் கிணற்றில் வீசப்பட்டதும் தெரிய வந்தது.

இதையடுத்து இந்த வழக்கில் தொடர்புடைய பாரதிராஜா, ருத்தீஷ், வசந்தகுமார் மற்றும் நசீர் உசேன் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள மணிகண்டனை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

Source: Read Full Article