கோவை பெரியார் அறிவுலகத்தில் புத்தகம் வாங்கியதில் ஊழல் நடைபெற்றதாக கடந்த திமுக ஆட்சி மீது தவெக குற்றம் சாட்டியுள்ள நிலையில், திமுக அதற்கு விளக்கம் அளித்தது. இந்த நிலையில், தவெக தரப்பில் புத்தகங்கள் கொள்முதல் செய்ய கடந்த ஆட்சியில் பிறப்பித்த உத்தரவை வெளியிட்டனர். மேலும், அவர்கள் பதிவிட்டுள்ளதாவது,

தரமற்ற நூலகங்கள்:

"புதிய நூலகங்களுக்குப் புத்தகங்கள் கொள்முதல் செய்வதற்கான குழு,நூல்களைப் பரிந்துரைக்கும் குழு, நூல்களைத் தேர்வு செய்யும் குழுவுக்கான ஆணை கடந்த 2025 ஆம் ஆண்டு நவம்பர் 5ஆம் தேதி அன்று வெளியிடப்பட்டது.

நூல்கள் கொள்முதலில் ஊழல் நடந்துள்ளதாகப் பேராசிரியர் பெருமாள் முருகன் பகிரங்கமாகக் கட்டுரை வெளியிட்டார். அதிலும் மோசடியான தரமற்ற தகவல்களைக் கொண்ட நூல்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாகவும் அது சம்பந்தமானப் பதிப்பகங்களையும் அவற்றின் பெயர்களையும் குறிப்பிட்டிருந்தார். அது அதிர்ச்சிக்குரியதுதான் என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை.

ஊழல் உலகம்:

ஆனால், அறிவுலகத்தையே ஊழல் உலகமாக மாற்றிய தீயசக்தி தி.மு.க. வசமாகச் சிக்கிக் கொண்டதால் வழக்கம்போல அவதூறு தகவல்களைப் பரப்பத் தொடங்கி உள்ளது. அதில் அடிப்படை உண்மை என்பதே எப்போதும் இருக்காது என்பது உலகறிந்த ரகசியம்.

அசிங்கமான மோசடி:

இருந்தாலும் தி.மு.க., தன் அறிவுமிகுதியால் ஒரு காமெடி செய்துள்ளதுதான் அசிங்கமான மோசடி. புத்தக மோசடியில் புழுக்கள் நெளியும் அளவிலான மகா மோசடி. அகல்விளக்குப் பதிப்பகம் மற்றும் ஃபீனிக்ஸ் பதிப்பகம் எல்லாம் தங்களுக்குத் தெரியவே தெரியாது என்றும் தங்கள் ஆட்சியில் அவற்றிற்கு கொள்முதல் ஆணை தரப்படவே இல்லை என்றும் முரசொலி செய்தி போல முற்றிலும் பொய்யான தகவலை வெளியிட்டுள்ளது.

கொள்முதல் ஆணை:

அகல்விளக்கு என்ற பதிப்பகத்திற்கு கொள்முதல் ஆணை வழங்கப்பட்ட தேதி 2026 ஆம் ஆண்டு பிப்ரவரி 14. அந்த அரசாணை எண் ந.க.எண் : 7781/எ1/2025. அதேபோல ஃபீனிக்ஸ் பதிப்பகத்திற்கு கொள்முதல் ஆணை வழங்கப்பட்ட நாள் 2026ஆம் ஆண்டு பிப்ரவரி 13. அதற்குரிய அரசாணை எண் ந.க.எண் : 7781/எ1/2025.

இதில் மிகப்பெரிய காமெடி என்னவென்றால் இரண்டு பதிப்பகங்களும் ஒரே ஊர். ஆணையில் குறிப்பிட்டுள்ளது போல கொடவாசல். இரண்டுமே திருவாரூர் மாவட்டம். திருவாரூர் என்றதும் மக்களுக்கு வேறு ஏதேனும் நினைவுக்கு வந்தால் நிர்வாகம் பொறுப்பன்று. இன்னும் மேலே சென்றால், இரண்டு பதிப்பகங்களின் முழு விலாசமும் இடம்பெறவே இல்லை. அதைவிட இன்னொரு காமெடி பேராசிரியர் பெருமாள் முருகன வெளியிட்ட ஆதாரத்தில் அகல்விளக்கு பதிப்பகம் சென்னை மடிப்பாக்கம் முகவரியில் உள்ளது.

ஆட்சியில் இருந்தது யார்?

புதிய நூலகங்களுக்குப் புத்தகங்கள் கொள்முதல் குழு, நூல்கள் பரிந்துரைக் குழு, நூல்கள் தேர்வுக்குழு அமைக்கப்பட்டது கடந்த 2025ஆம் ஆண்டு நவம்பர் மாதம். அகல்விளக்கு மற்றும் ஃபீனிக்ஸ் பதிப்பகங்களுக்கு கொள்முதல் ஆணை வழங்கப்பட்டது 2026ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம்.

தமிழகத்தில் இந்தக் காலத்தில் ஆட்சியில் இருந்தது யார்? என்று மக்களுக்குத் தெரியும். ஆனால், ஊழல் செய்து விட்டு அந்த மயக்கத்தில் கவிழ்ந்து கிடக்கும் தீயசக்தி திமுக வேண்டுமானால் தனக்கு தெரியாமல் இருப்பதுபோல நடிக்கலாம்.

இதைவிட மோசடிக் கொடுமை ஒன்றையும் திமுகவின் கொத்தடிமைக் கூட்டம் செய்து வருகிறது. மார்ச் மாத சீல் இருப்பதாக எந்தப் புத்தகத்தை வெளியிட்டதோ அந்தப் புத்தகத்தின் மொழிபெயர்ப்பாளர் பெயருக்கு பின்னால் இருக்கும் கல்வியைக் குறிப்பிடும் போது முன் அட்டையில் எம்.ஏ., பி.ஈ. என்றும் புத்தகத்திற்கு உள்ளே எம்.ஏ. பி.எட்., என்றும் இருப்பதும் அம்பலமாகி உள்ளது. சீல் வைக்கப்பட்டதைப் பார்த்த கொத்தடிமைக் கூட்டம் கல்விக் குளறுபடியைப் பார்க்கவில்லை.இவர்கள் எதைச் செய்தாலும் அது லாஜிக் மீறியதாகவே இருக்கிறது.

திமுக அச்சம்:

ஆட்சி அதிகாரம் போய் விட்டது. மக்கள் வேறு தீயசக்தி திமுக என்றாலே வெறுத்து ஒதுக்குகின்றனர். போதாக்குறைக்கு கடந்த 2021-26 ஆட்சிக் காலத்தில் நடந்த ஊழல்கள் ஒவ்வொன்றாக வெளிவரத் தொடங்கி விட்டன. எங்கே திமுகவை மக்கள் மொத்தமாக முடித்து விடுவார்களோ என்ற அச்சத்தில் ஏகத்துக்கும் லாஜிக் இல்லாமல் அவர்களாகவே உளறி அவர்களாகவே சிக்கி வருகின்றனர். கொள்கை கொள்கை என்று பேசும் தி.மு.கழகம் இப்போது குளறுபடி கழகமாக மாறி வருகிறது என்பதே இந்தச் சிக்கல்கள் சிக்னல் கொடுக்கின்றன.

பெரியார் அறிவுலகத்தையே ஊழல் உலகமாக மாற்றிவிட்டு இதில் பெருமைப் பேச்சு வேறு பேசுகிறார் திமுக தலைவர். அவர் பேசிய பேச்சு மறைவதற்குள்ளாகவே அறிவுலகத்தில் நடந்த ஊழல்கள் அம்பலமாகத் தொடங்கிவிட்டன. சிறைக்கதவுகள் திறக்கத் தொடங்கிய சத்தம் கேட்டதுபோல திணறி வருகின்றனர்.

மதிகெட்ட தீயசக்தி திமுகவிற்கான முடிவுரையை மக்கள் எழுதவே தேவை இல்லை. தானாக திமுகவே எழுதிக் கொள்ளும்."

இவ்வாறு அதில் பதிவிடப்பட்டுள்ளது.

Source: Read Full Article