செஞ்சி அருகே காணாமல்போன சிறுமியை நாமக்கல் அருகே முருகன் கோயிலில் பார்த்ததாக அங்கன்வாடி சமையலர் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிபிசிஐடி போலீசார் விசாரணை என்ற பெயரில் தன்னை அவமானம் படுத்துகின்றதாக சிறுமியை பார்த்ததாக கூறும் அங்கன்வாடி சமையலர் வேதனையுடன் பேட்டி அளித்தார்.

சிறுமியை எங்கு பார்த்தார்?

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே ஆலம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த 7 வயது சிறுமி ஹேமலதா கடந்த அக்டோபர் 12-ம் தேதி அதிகாலையில் திடீரென காணாமல் போனது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், நாமக்கல் எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்த பவானி ( வயது 35), கோனானூரில் உள்ள அங்கன்வாடி மையத்தில் சமையலராக இருந்து வருகின்றார். இவர் கடந்த அக்டோபர் 29ஆம் தேதி நாமக்கல் அடுத்த சேந்தமங்கலம் அருகே உள்ள தத்தகிரி முருகன் கோயிலில் வயதான தம்பதியிருடன் சிறுமி ஹேமலதாவை பார்த்ததாக அவசர புகார் எண் 100 க்கு அழைத்து போலீஸிடம் சிறுமி குறித்த தகவலை கூறியுள்ளார்.

போலீசாரின் விசாரணை வேதனை தருகிறது

இதனையடுத்து, நாமக்கல் சிபிசிஐடி போலீசார் பவானியிடம் விசாரணை மேற்கொண்ட நிலையில், விழுப்புரம் மாவட்ட சிபிசிஐடி போலீசார் நேரடியாக நாமக்கல் வந்து பவானியிடம் துருவி துருவி பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தியுள்ளனர். நாமக்கல் மாவட்ட சிபிசிஐடி போலீசார் மற்றும் விழுப்புரம் சிபிசிஐடி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதால் தனக்கு மன உளைச்சல் ஏற்படுவதாகவும் மேலும், வேலை செய்யும் இடத்தில் தனது குடும்பத்தையும், தன் ஒழுக்கம் குறித்து விசாரித்து உள்ளனர். மனிதாபிமானத்தின் அடிப்படையில் தான் பார்த்த விசயத்தை கூறினேன். ஆனால் போலீசார் தொடர்ந்து விசாரணை என்ற பெயரில் குடும்பம், தன்னுடைய சுய ஒழுக்கம், குடும்ப பின்னணி குறித்து விசாரித்து வருவது மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்துகிறது. எதற்காக சிறுமி குறித்த தகவலை கூறினோம் என கஷ்டமாக உள்ளது என பவானி வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

Source: Read Full Article