ஆம்பூரில் குடும்பச் சூழ்நிலையைப் பயன்படுத்தி விவாகரத்தான இளம் பெண்ணிடம் தவறான நோக்கில் பேசி, பாலியல் தொழிலுக்கு அழைத்த ஆட்டோ ஓட்டுநரை ஆம்பூர் நகரக் காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பகுதியைச் சேர்ந்த 26 வயது இளம்பெண் ஒருவருக்குத் திருமணமாகி 7 ஆண்டுகள் ஆன நிலையில், குடும்பப் பிரச்சனை காரணமாக கணவரைப் பிரிந்து விவாகரத்து பெற்று வாழ்ந்து வருகிறார். இந்நிலையில், அப்பெண் தனது வீட்டிலிருந்து உமர் சாலையில் உள்ள நியாயவிலைக் கடைக்கு பொருட்கள் வாங்குவதற்காகச் சென்றுள்ளார். அப்போது, அங்கு நின்றுகொண்டிருந்த ஆட்டோ ஓட்டுநரான ஆம்பூர் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியக் குடியிருப்பை சேர்ந்த சரவணன் என்பவருடன் அப்பெண்ணிடம் இயல்பாகப் பேசியுள்ளார்.

ஏழ்மையை தவறாக பயன்படுத்த நினைத்த ஆட்டோ ஓட்டுநர்

அப்போது தனது குடும்ப வறுமை நிலை குறித்தும், விவாகரத்து ஆனது குறித்தும் அப்பெண் சரவணனிடம் தெரிவித்துள்ளார். பெண்ணின் தனிமை மற்றும் ஏழ்மை நிலையைத் தவறாகப் பயன்படுத்த எண்ணிய ஆட்டோ ஓட்டுநர் சரவணன், “நீ பார்ப்பதற்கு அழகாக இருக்கிறாய்; நான் சொல்வதைக் கேட்டு நடந்தால் உனக்குப் பணம் சம்பாதித்துத் தருகிறேன்” என்று கூறி பாலியல் தொழிலுக்கு அழைக்கும் வகையில் மறைமுகமாகவும் ஆபாசமாகவும் பேசியுள்ளார். இதனால் கடும் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண், உடனடியாக வீட்டிற்குச் சென்று நடந்த விபரங்களைத் தனது தந்தையிடம் கூறி அழுதுள்ளார்.

இதையடுத்து, பாதிக்கப்பட்ட இளம்பெண் ஆம்பூர் நகரக் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தார். இதன் பேரில், வழக்குப் பதிவு செய்த ஆம்பூர் நகரக் காவல் துறையினர், தீவிர விசாரணை நடத்தி ஆட்டோ ஓட்டுநர் சரவணனைக் கைது செய்து, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, ஆம்பூர் கிளைச் சிறையில் அடைத்தனர்.

Source: Read Full Article