“தமிழ்நாட்டில் நிதிநிலை கடுமையாக இருக்கிற நிலையில் முதலமைச்சர் எந்த மாவட்டத்தில் இடைத்தேர்தல் நடக்கிறதோ அங்கே சென்றுகொண்டு இருக்கிறார்” என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநரை சந்தித்தார். சந்திப்பிற்கு பின் செய்தியாளர்களை சந்தித்து அவர் அளித்த பேட்டியில்,
தமிழ்நாடு ஆளுநராக இவரை அறிவித்த பின் முதல்முறையாக ஆளுநரை மரியாதை நிமித்தமாகதான் சந்தித்தேன். அப்போது ஏற்கனவே கொடுக்கப்பட்ட புகாரை பற்றி பேசியபோது, கொடுத்த புகாரின் மீது நடவடிக்கை எடுப்பேன் என்று கூறியிருக்கிறார்.

அமைச்சர் ராஜ்மோகன் என்னிடம் லஞ்சம் கொடுக்க முயன்றனர் என்று பேசியது குறித்த கேள்விக்கு,

"அரிச்சந்திரன் வீட்டிற்கு அடுத்த வீட்டுக்காரர் மாதிரி யாரோ ஒருவர் ஐந்து கோடி கொடுக்கிறார்கள் என்று சொல்கிறார். தமிழ்நாட்டு மக்களை சினிமா கவர்ச்சியை காமித்து ஏமாற்றியது போல திராவிட ஆட்சிக்கு மாற்றாக நாங்கள் வருவோம் என தேர்தல் வாக்குறுதி கொடுத்து பல்வேறு மாற்றங்களை உருவாக்கப்படும் என சொல்லிவிட்டு தமிழ்நாடு வீழ்ச்சிக்கு செல்லும் மாற்றத்தை தான் கொடுத்திருக்கிறார்கள்.

கூத்தடிக்கும் போலீஸ்

போதை மருந்து வியாபாரம் தமிழக வெற்றி கழகத்தில் இருந்து செய்கிறார்கள். தமிழ்நாடு காவல்துறை சிறந்த காவல்துறையாக செயல்பட்டு கொண்டிருந்த நிலை இந்த கூத்தாடிகள் பேச்சைக் கேட்டு கூத்தடித்துக் கொண்டிருக்கின்றனர். தமிழ்நாட்டில் மற்ற மாநிலங்களை விட அரிசி விலை அதிகமாக இருக்கிறது. 50 சதவீதம் அதிகமாக இருக்கிறது, பருப்பு உட்பட அனைத்து அத்தியாவசிய பொருட்களும் விலை உயர்ந்திருக்கிறது. இந்த ஆட்சியில் விலைவாசி விண்ணை முட்டுகின்ற அளவில் உயர்ந்திருக்கிறது.

இளைஞர்களுக்கு தேர்தல் வாக்குறுதியில் ஒப்பந்த அடிப்படையில் வேலை தர மாட்டோம் நிரந்தரம் செய்வோம் எனக் கூறினார்கள். அதேபோல காலிப் பணியிடங்களை தேர்வு மூலம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்போம் என கூறிவிட்டு தமிழ்நாட்டை தற்போது தனியார் மயமாக்குகிறார்கள். இதனை இவர்களுக்கு வாக்களித்தவர்கள் உணர்ந்து வருகிறார்கள்.

கடந்த ஆட்சியில் அனைத்து வயது பெண்களுக்கும் பாதுகாப்பு இல்லை என கூறினோம். அதைவிட தமிழ்நாட்டில் அதிகமாக பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் இருக்கிறது. காவல்துறை ஏவல் துறையாக பயன்படுத்தப்படுகிறது. கலையரசன் கைது செய்தது சட்டத்துக்கு புறமானது. அதற்கு நாங்கள் கண்டனம் தெரிவித்தோம். தமிழ்நாடு முழுவதும் சிறுமிகள் காணாமல் போவது அச்சத்தை ஏற்படுகிறது.

வீழ்ச்சியை நோக்கி செல்லும் தமிழ்நாடு

எம்ஜிஆர், ஜெயலலிதா ஏற்கனவே சினிமாவில் இருந்தவர்கள். மேலும், அவர்கள் அறிவு ரீதியாக தயாராக இருந்தார்கள். ஆனால் இவர்கள் சினிமாவில் இருந்து மட்டுமே வந்திருக்கின்றனர். தமிழ்நாடு வீழ்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. தமிழ்நாடு முதலமைச்சர் உணர்ந்து கொள்ள வேண்டும். நிதிநிலை கடுமையாக இருக்கிறது. ஆனால் இவர் எந்த மாவட்டத்தில் இடைத்தேர்தல் நடக்கிறதோ அங்கே செல்கிறார். ஜோசியர் சொல்வது போல பட்டு வேட்டி பட்டு சட்டை உடுத்திக் கொள்கிறார். நாம் 23ஆம் புலிகேசி படத்தில் பார்த்தது போல நேரில் நடக்கிறது.

குதிரை பேரம் தொடர்பாக ஆளுநரிடம் கேட்டபோது நடவடிக்கை எடுப்போம் என கூறியிருக்கிறார். மேலும் இந்த ஆட்சி போகிற வேகத்தை பார்த்தால் சீக்கிரமாக வீழ்ந்துவிடும். நிர்வாகத்திறமை என எதுவுமே இல்லை. அனைத்து இடங்களிலும் ஊழல் குறைந்தபாடில்லை. யாரெல்லாம் என்னென்ன சொத்து சேர்க்கிறார்கள் என்று பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். சினிமா போல நடித்து கொண்டு இருக்கிறார்கள்.

மாயவலையில் தமிழ்நாடு

அமைச்சர் ராஜ்மோகன் பேசுவது சிறுபிள்ளைத்தனமாகத்தான் இருக்கிறது. அனைத்தும் சினிமா டயலாக் தான். தவறு செய்தவர்களின் கோப்புகள் இருந்தால் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டியதுதானே. அமைச்சர் மரிய வில்சன் பணம் கொடுத்ததாக கூறியிருக்கிறார். அதன் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. அதேபோல ராஜ்மோகன் இடம் பேரம் பேசியதாக வெளிப்படையாக கூறியிருக்கிறார்கள். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆறு மாதம் நேரம் கொடுக்கப்பட்டது. ஆனால் தமிழ்நாடு எங்கே செல்கிறது என்று நன்றாக தெரியும். நல்ல அதிகாரிகள் அனைவரும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மாட்டிக் கொள்ளப் போகிறார்கள்.

நான் அன்றைக்கு தாராபுரத்தில் மாட்டுவார்கள் என எதிர்பார்த்து இருந்தேன். இந்த ஆட்சி தமிழ்நாட்டிற்கு பிடித்த சாபக்கேடு, ஒரு மாயவலையில் தமிழ்நாடு சிக்கிக் கொண்டிருக்கிறது, விரைவில் அந்த மாயவலையில் இருந்து தமிழ்நாடு வெளிவரும்” என்று கூறினார்.

Source: Read Full Article