தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு கேள்விக்குறியாக உள்ளது; விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று முன்னாள் மத்திய இணை அமைச்சர் எல். முருகன் கூறியுள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம், சிறுவாபுரியில் உள்ள புகழ்பெற்ற அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் முன்னாள் மத்திய இணை அமைச்சர் எல். முருகன் சாமி தரிசனம் செய்தார். கோயிலுக்கு வந்த அவர், உள்பிரகாரங்களைச் சுற்றி வந்து முருகப்பெருமானை வழிபட்டார். தொடர்ந்து, கொடிமரம் முன்பு கண்களை மூடி சிறிது நேரம் அமர்ந்து மனமுருக வேண்டிக் கொண்டார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த எல். முருகன் பேசுகையில்,

கடந்த 2020-ஆம் ஆண்டு நவம்பர் 6-ஆம் தேதி, பாஜக மாநிலத் தலைவராக இருந்தபோது திருத்தணியில் இருந்து வெற்றிவேல் யாத்திரையைத் தொடங்கினேன். இந்த யாத்திரை ஒரு மாத காலம் நடைபெற்றது. அதே ஆண்டு டிசம்பர் 6-ஆம் தேதி கந்த சஷ்டி கவசம் அவமதிக்கப்பட்ட சம்பவம் நடைபெற்றது. அதற்கு பொதுமக்களின் ஆதரவுடன் உரிய பதிலடி கொடுத்தோம். விரைவில் கந்த சஷ்டி விழா வரவுள்ள நிலையில், முருகப்பெருமானை தரிசிக்க வந்ததாகத் தெரிவித்தார்.

மேலும், தமிழகத்தில் தற்போது சட்டம் – ஒழுங்கு என்பது கேள்விக்குறியாக உள்ளது. குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. தீபாவளி பண்டிகை நேரத்தில்கூட விலைவாசி உயர்வால் நடுத்தரக் குடும்பத்தினர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக அரிசி விலையைப் பார்த்து மக்கள் அதிர்ச்சியடையும் நிலை உள்ளது. எனவே, விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

திரையரங்குகளில் காலை 6 மணி காட்சிக்கு அனுமதி அளிக்கப்பட்டது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு, இது வரவேற்கத்தக்க முடிவு என்றும், பண்டிகை நாட்களில் அதிக கூட்டத்துடன் திரைப்படம் பார்ப்பதைவிட, காட்சிகளுக்கு இடையே நேர இடைவெளி ஏற்படுவது பயனுள்ளதாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.

ஆட்சியைக் கலைக்க எதிர்க்கட்சிகள் முயற்சி செய்து வருவதாக அமைச்சர் கூறியிருப்பது குறித்த கேள்விக்கு, யாரும் அதுபோன்ற செயல்களில் ஈடுபடவில்லை எனப் பதிலளித்தார்.

தீபாவளி கொண்டாட்டத்திற்கு நேரக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது குறித்த கேள்விக்கு, தீபாவளி என்பது அனைத்து தமிழர்களும் தங்களது மரபுப்படி கொண்டாட வேண்டிய பண்டிகை என்றும், கொண்டாட்டங்களுக்கு யாரும் கட்டுப்பாடுகள் விதிக்கக் கூடாது என்றும் தனது கருத்தைத் தெரிவித்தார்.

இவ்வாறு செய்தியாளர்களிடம் முன்னாள் மத்திய இணை அமைச்சர் எல். முருகன் தெரிவித்தார்.

Source: Read Full Article