தமிழ்நாட்டில் நிலவும் மின் பற்றாக்குறையை சமாளிக்க மின் பரமாரிப்பு நாளில் 8 மணி நேரமாக மின் தடையை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக வெளியான தகவலுக்கு தமிழ்நாடு மின்சார வாரியம் மறுப்பு தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் மின் பற்றாக்குறை

தமிழ்நாட்டில் தமிழக வெற்றிக் கழக அரசு பொறுப்பேற்றப் பிறகு மின் பற்றாக்குறை பிரச்னை தலைதூக்கியுள்ளது. அரசும் இந்த பிரச்னை இருப்பதை மறுக்காத நிலையில் நிலைமையை சமாளிக்க தேவையான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதாக அந்த துறை அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் தெரிவித்திருந்தார். இதனிடையே கடந்த மாதம் சென்னையில் உள்ள மின்சார வாரியம் தலைமை அலுவலகத்தில் முதலமைச்சர் விஜய் நேரில் ஆய்வு மேற்கொண்டு மின் பற்றாக்குறை, பொதுமக்களின் புகார், எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

இதனிடையே ஒவ்வொரு மாதமும் தமிழ்நாடு மின்சார வாரியத்தால் மின் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அன்றைய நாளில் காலை 9 மணி முதல் 2 மணி வரையும், சில மாவட்டங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையும் மின் தடை செய்யப்படுவது வழக்கம். இது காலம் காலமாக வழக்கத்தில் இருந்து வருகிறது. அதேநேரம் சமூக வலைத்தளங்கள் மூலம் மின் பராமரிப்பு பணி மேற்கொள்ளும் இடங்கள், மின் தடை நீட்டிக்கப்பட்டால் அதற்கான காரணங்கள் போன்றவை தெரிவிக்கப்பட்டும் வருகிறது.

இந்நிலையில் மின் பராமரிப்பு நாளில் நிறுத்தி வைக்கப்படும் 5 மணி நேரம் மின் விநியோகத்தை 8 மணி நேரமாக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக ஊடகங்களில் நேற்று தகவல் வெளியானது. இந்த தகவலை மின் வாரியம் மறுத்துள்ளது.

மின்சார வாரியம் விளக்கம்

இதுதொடர்பாக எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் அளித்த விளக்கத்தில், “மேற்கண்ட செய்தி குறிப்பில் உள்ள தகவல் முற்றிலும் தவறானது. தமிழ்நாடு மின்வாரியம் பராமரிப்பு பணிகளுக்கான மின் நிறுத்தத்தை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே நிர்ணயித்துள்ளது. இந்தக் கால அளவை கண்டிப்பாக பின்பற்றுமாறு அனைத்து அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒரு சில இடங்களில் பராமரிப்பு பணியின் போது வேறு பழுதுகள் ஏதேனும் கண்டறியப்பட்டால் அதை சரி செய்ய சிறிதளவு கால அவகாசம் கூடுதலாக எடுக்கப்பட்டது.

மேலும் பராமரிப்பு பணிகளுக்காக மின் நிறுத்தம் செய்யும்போது, முன்னதாகவே பாதிக்கப்படும் மின் நுகர்வோர்களுக்கு செய்தி குறிப்புகள், குறுஞ்செய்தி மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் முன்னறிவிப்பு செய்த பின்பே பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. மேலும் பகல் நேரங்களில் மின் தேவையை விட மின் இருப்பு உபரியாகவே உள்ளது.

முன்கூட்டியே திட்டமிடப்பட்ட மாதந்திர பராமரிப்பு பணிகள் தற்பொழுது முழு வேகத்தில் நடைபெற்று வருகின்றன. எனவே மின்சாரப் பற்றாக்குறையை சமாளிக்க பராமரிப்பு பணி என்ற பெயரில் மின் தடை அதிகரிக்கப்படுவதாக சொல்லப்படும் இந்தக் குற்றச்சாட்டு முற்றிலும் தவறானது.

மாதந்திர பராமரிப்புப் பணிகள் செய்யப்படும் போது பாதிக்கப்படும் மின் நுகர்வோருக்கு முன்னறிவிப்பு செய்யப்பட்ட பிறகே பணிகள் தொடங்கப்படுகின்றன. மேலும் இது போன்ற சந்தேகங்கள் மற்றும் விளக்கங்களுக்கு மின்னகம் அல்லது எங்களது அதிகாரப்பூர்வ சமூக ஊடகப் பக்கங்களை அணுகவும். இது போன்ற வதந்திகளை பொதுமக்களும், மின் நுகர்வோரும் நம்ப வேண்டாம் என கேட்டுக்கொள்கிறோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: Read Full Article