VCK Thirumavalavan: ஆட்சி அதிகாரத்தில் திமுக பங்களிக்காவிட்டாலும் எங்கள் கூட்டணியே வெல்ல வேண்டும் என விரும்பினோம் என, விசிக தலைவர் திருமாவளவன் பேசியுள்ளார்.

தவெக வேட்பாளருக்கு ஆதரவாக திருமாவளவன் வாக்கு சேகரிப்பு:

தவெக தலைமையிலான கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டம் மதுராந்தகத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்று வைகோ, மாணிக்கம் தாக்கூர் உள்ளிட்டோர் aஅளுங்கட்சி வேட்பாளர் மரகதம் குமரவேலுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தனர். அந்த வகையில் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், தேர்தலுக்கு முன்பு தவெக குறித்து தான் கொண்டிருந்த தனிப்பட்ட எண்ணத்தை வெளிப்படுத்தினார். அந்த வகையில், “தமிழ்நாட்டில் திமுக மற்றும் அதிமுக என இருதுருவ போட்டி நிலவியது. ஆனால் அந்த நிலை மாறி 2026ம் ஆண்டு தேர்தலில் மும்முனை அரசியலாக மாறி இருக்கிறது. ஒருபுறம் ஆண்ட கட்சி அதிமுக, மறுபுறம் ஆளுங்கட்சி திமுக, இன்னொருபுறம் இந்த இரண்டு கட்சிகளையும் சவால்விட்டு களம் காண்கிற புதிய கட்சி தமிழக வெற்றிக் கழகம். இந்த கட்சியை நாம் குறைத்து மதிப்பிட்டு விட்டோம் என்பதை விட குறுகிய எண்ணத்தோடு அணுகிவிட்டோம் என்பது தான் உண்மை.

தவெக வெல்லக்கூடாது என நினைத்தேன் - திருமா

அது என்ன குறுகிய புத்தி என்றால் அவர்கள் வெற்றி பெற்றுவிடக்கூடாது, ஆட்சி அமைத்திட கூடாது என்கிற எண்ணம் தான் மேலோங்கி இருந்தது. ஒப்புக்கொள்கிறேன், ஒப்புதல் வாக்குமூலம் தருகிறேன். ஏனென்றால் நாங்கள் இடம்பெறுள்ள அணி இடம்பெற வேண்டும். எங்கள் அணி ஆட்சிக்கு வரவேண்டும். அந்த கூட்டணிக்கு தலைமை தாங்கிய கட்சி ஆட்சி அதிகாரத்தை பகிர தயாராக இல்லை என்றாலும் கூட சாதிய மதவாத சக்திகள் தலைதூக்காமல் இருக்க இந்த கூட்டணி வலுவோடு இருக்க வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்தை தவற வேறு ஒன்றுமில்லை.

வரலாறு பாடம் கற்றுக் கொடுக்கிறது - திருமா

தனிப்பட்ட முறையில் தவெக மீது நமக்கு எந்த காழ்ப்புணர்வும் இல்லை. ஆனால், வரலாறு நமக்கு பாடம் கற்பிக்கிறது. உங்களை எல்லாம் தாண்டி மக்கள் வேறு கணக்கு போடுகிறார்கள். காலம் இன்னொரு கணக்கை போடுகிறது. என்ன செய்ய முடியும்? என்ற கசப்பான உண்மையை நமக்கு பாடமாக கற்பிக்கிறது. 20-க்கும் மேற்பட்ட கட்சிகளுக்கு 126, ஒரே ஒரு கட்சிக்கு 108 இடம் என்கிற போது 58 விழுக்காட்டிற்கு மேல் வெற்றி வாய்ப்பை தமிழ்நாட்டு மக்கள் எந்த நம்பிக்கையின் அடிப்படையில் தந்து இருக்கிறார்கள். இதை எப்படி புறந்தள்ளிவிட முடியும்? இதை எப்படி குறைத்து மதிப்பிட்டு விடமுடியும்? எனக்கு பிடிக்காமல் இருக்கலாம்? கசப்பாக இருக்கலாம்? ஒவ்வாமையாக இருக்கலாம்? உடன்பாடு இல்லாமல் இருக்கலாம்? எரிச்சலாக இருக்கலாம்? ஆனால் ஜனநாயகத்தில் மக்களின் தீர்ப்பை மதிப்பவனாக இருக்க வேண்டும். அவன் தான் உண்மையான ஜனநாயக சிந்தனைவாதியாக இருக்க முடியும்” என திருமாவளவன் பேசியுள்ளார்.

இதையும் படியுங்கள்: TN Weather News: தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழை பொழியும்? சென்னை? வானிலை அறிக்கை

ஆதவ் அர்ஜுனா ப்ளான்

முன்னதாக புதிய கூட்டணி குறித்து பேசிய திருமாவளவன், ”விசிகவில் ஆதவ் அர்ஜுனா இருக்கும் போது பாஜக இல்லாத அணியை என்னால் உருவாக்க முடியும் நீங்கள் தலையசைத்தால் போதும் என்று என்னை எவ்வளவோ அசைத்துப் பார்த்தார். அவர் அசைத்துப் பார்த்தும் என் தலை அசையவில்லை. அப்போதும் நான் திமுக கூட்டணியிலே தொடர்ந்தேன். வேண்டாம் அர்ஜுன், நாம் இடம்பெற்றிருக்கிற இந்த கூட்டணி மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி, இந்த அணியில் காங்கிரஸ் இருக்கிறார்கள். இடதுசாரிகள் இருக்கிறார்கள், இந்த அணியில்தான் நான் தொடர விரும்புகிறேன் என்றேன். பதவிக்காக ஒரு அணியை உடைத்தான் திருமாவளவன் என்ற களங்கம் என் வாழ்க்கையில் வரக்கூடாது. டெல்லிக்கே வந்து 2 மணி நேரம் என்னை brainwash பண்ணினார் ஆதவ் அர்ஜுனா. அதிகார ஆசை வார்த்தை ஊட்டிப்பார்த்தார். துணை முதலமைச்சர் ஆக முடியும் என்று சொன்னார். முக்கியமான தலைவர்களோடு இணைப்பு தந்து பேச வைத்தார். அதற்கு நான் உடன்பட மாட்டேன் சாரி அர்ஜுன் என்று சொல்லிவிட்டேன்” என விளக்கமளித்துள்ளார்.

Source: Read Full Article