தமிழ்நாட்டில் ஆட்சியை இழந்துள்ள திமுகவிற்கு, முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு தொடர்ச்சியாக குடைச்சல் கொடுத்து வருகிறது. குறிப்பாக, திமுகவின் முக்கியமான தளகர்த்தகர்களான கே.என்.நேரு, ஏ.வ.வேலு உள்ளிட்டோர் மீது ஊழல் வழக்கு பதிவு செய்தும், அவர்கள் வீடுகளில் சோதனை நடத்தியும் நெருக்கடி கொடுத்தது. இதனையடுத்து, திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதியின் நெருங்கிய நண்பரும், முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேசையே, ஊழல் வழக்கில் கைது செய்து சிறையிலும் அடைத்திருக்கிறது.

உஷ்ணமான மு.க.ஸ்டாலின் – எடுக்கப்போகும் முடிவு என்ன ?

இது, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை கடும் உஷ்ணமாக்கியிருக்கிறது. குறிப்பாக, உதயநிதியை வீடு புகுந்து காவல்துறை கைது செய்ததை, மு.க.ஸ்டாலின் குடும்பத்தினரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அதற்கு முதல்வர் விஜய்க்கு பதிலடி கொடுத்தே ஆகவேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டிருந்தனர். இந்நிலையில், யாரும் எதிர்பாராத வகையில், அன்பில் மகேஷை கைது செய்து, சிறையில் அடைத்திருப்பது திமுக தலைமையை மேலும் சூடாக்கியிருக்கிறது. தவெக அரசின் இப்படியான பழிவாங்கும் நடவடிக்கைகளை எதிர்கொள்ள, எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், முக்கிய தளபதிகளுடன் அவசர ஆலோசனை ஒன்றை நடத்தி முடித்திருக்கிறார்.

மத்திய அமைச்சரவையில் திமுக – தவெக அரசே தேடி வர வேண்டிய நிலை ஏற்படும்

அதில், தமிழ்நாட்டில் நாம் ஆட்சியை இழந்துள்ள நிலையில், மத்தியில் ஆட்சியில் இருக்கும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான, தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவளித்து, மத்திய அமைச்சரவையில் திமுகவினர் இடம்பெற்றால், தவெக அரசே நம்மை தேடித் தான் வரவேண்டும் என்ற யோசனை முன் வைக்கப்பட்டிருக்கிறது.

திமுக-வை கூட்டணிக்குள் கொண்டுவர பாஜக தீவிர முயற்சி

ஏற்கனவே பாஜக தலைமையின் முக்கிய முகங்கள், திமுகவை தங்கள் கூட்டணிக்குள் கொண்டுவர பல்வேறு கட்ட முயற்சிகளை எடுத்திருந்தனர். திரைமறைவில் நடைபெற்ற அந்த ஆலோசனையிலும், திமுகவின் முக்கிய புள்ளிகள் பங்கேற்றனர். இதுவரை எந்த முடிவும் எடுக்காமல் அமைதியாக இருந்தது திமுக. ஆனால், அன்பில் மகேஷின் கைது உள்ளிட்ட தவெக அரசின் தீவிர நடவடிக்கைகள், திமுக தலைமையை மத்திய பாஜக அமைச்சரவையில் இணையும் முடிவிற்கு தற்போது கொண்டுவந்திருப்பதாக கூறப்படுகிறது.

2029லேயே சட்டமன்றத் தேர்தல்

பாசிச பாஜக என ஆட்சியில் இருக்கும்போதும், தேர்தலின்போதும் மூச்சுக்கு முன்னூறு முறை சொல்லி பிரச்சாரம் செய்த நாம், அதையெல்லாம் ஒதுக்கித் தள்ளிவிட்டு, இப்போது பாஜக அமைச்சரவையில் இடம்பெற்றால், அது 2029ல் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் திமுகவை மொத்தமாக பாதிக்குமே? என்ற கேள்விகளும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நடத்திய ஆலோசனையில் எழுந்திருக்கின்றன.

இது பற்றி பாஜக தரப்பிடம் திமுக சார்பில் பேசப்பட்டது என்றும், அதற்கு அவர்கள் தொகுதி மறுவரையறை மசோதாவை மட்டும் நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற உதவினால், 2029 நாடாளுமன்ற தேர்தலோடு சேர்த்து ‘ஒரே நாடு ; ஒரே தேர்தல்’ என்ற அடிப்படையில் தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலையும் நடத்தவிடுவோம் என்ற வகையில் வாக்குறுதி தரப்பட்டது என நமக்கு கிடைத்த தகவல்கள் சொல்கின்றன.

ஐந்து வருடம் காத்திருக்க வேண்டுமா?

இதை பரிசீலித்த திமுக, அடுத்த சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஐந்து வருடங்கள் காத்திருக்காமல், 2029லேயே தேர்தல் நடத்தப்பட்டால், அதில் நிச்சயம் திமுக வெற்றி பெறும் என்றும், இந்த தேர்தலில் விஜயின் திரைக் கவர்ச்சிக்கு கிடைத்த வாக்குகள், அதே மாதிரி அடுத்த தேர்தலில் கிடைக்காது எனவும், அதற்கு சான்றாக தாராபுரம், மதுராந்தகம் இடைத் தேர்தலில் பெரிய கட்சிகளுடான கூட்டணி இன்றியே, திமுக 2வது இடத்திற்கு வந்துள்ளதையும் கவனித்து, பாஜகவுடன் இணையும் முடிவை எடுக்கலாம் என்ற இடத்திற்கு திமுக வந்துவிட்டதாக தெரிகிறது.

கூட்டணி இல்லை ஆதரவு - CMP

அதே நேரத்தில், பாஜகவுடன் நேரடி கூட்டணி என்று சொல்லாமல், தமிழக நலனுக்காக, மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு ஆதரவு தெரிவித்து, மத்திய அமைச்சரவையில் இணையலாம் என்ற கருத்துகளும் முன் வைக்கப்பட்டிருக்கின்றன. இதற்காக, முன்னாள் முதல்வர் கருணாநிதி, பாஜகவுடன் கூட்டணி வைக்கும்போது முன் வைத்த CMP (Common Minimum Programme) என்ற குறைந்தப்பட்ச செயல்திட்ட நிபந்தனைகளை முன் வைத்து, மத்திய அமைச்சரவையில் இணையலாம் என்ற குரல்களும் அந்த கட்சியில் எழுந்திருக்கின்றன.

என்ன முடிவு எடுக்கப்போகிறது திமுக ?

ஆனால், இன்னும் திமுக-வில் இந்த ஆலோசனைகள் உள்ளார்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கின்றனவே தவிர, இதுவரை இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை. ஆனால், முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசின், திமுக மீதான கடுமையான எதிர் நடவடிக்கைகளை எதிர்கொள்ள, பாஜகவுடன் திமுக கூட்டணியே வைக்காது என்றும் அறுதியிட்டு சொல்லிவிடமுடியாது. ஆனால், 2029ஆம் ஆண்டு ஒரே நாடு ; ஒரே தேர்தல் நடைமுறையை மத்திய பாஜக அரசால் சாத்தியப்படுத்த முடியுமா? என்பதும் மிகப்பெரிய சந்தேகம்தான் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள். அதே நேரத்தில், மத்திய அமைச்சரவையில் இணைந்தால், திமுகவிற்கு புதிய தெம்பு கிடைக்கும் என்பது மட்டும் உறுதி என்பதும் விமர்சகர்களின் கருத்து.

குடியரசுத் தலைவருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

அதே நேரத்தில், இன்று குடியரசுத் தலைவருக்கு நீண்ட கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். அதில், தமிழ்நாட்டில் SIR நடவடிக்கையின்போது 97,37,832 வாக்காளர்களின் பெயர்கள் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெறாமல் போனது சட்டப்பூர்வமானதா என்பது குறித்து அரசியலமைப்பு சட்டப் பிரிவு 143-இன்படி உச்சநீதிமன்றத்தின் கருத்தைப் பெற வேண்டும் என்ற நோக்கத்தை மையப்படுத்தியும், இந்த விவகாரம் தொடர்பாக இந்தியா கூட்டணி கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குடியரசுத் தலைவர் மாளிகை நோக்கி பேரணி சென்றுள்ளதையும் குறிப்பிட்டிருக்கிறார்.

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஸ்குமாரை பாஜக பாதுகாத்து வருவதாக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் குற்றஞ்சாட்டியுள்ள நிலையில், அவர்களுக்கு ஆதரவாக மு.க.ஸ்டாலினின் இந்த கடிதம் அமைந்துள்ளது. குறிப்பாக, அவர் இந்த கடிதத்தில் இந்தியா கூட்டணியை குறிப்பிட்டிருக்கிறார். இதனடிப்படையில் பார்த்தால், பாஜகவுடன் எந்த உறவையும் வைத்துக்கொள்ள திமுக இப்போதும் தயாராக இல்லை என்பதையே இது காட்டுகிறது.

ஆனால், எதிரிக்கு எதிரி நண்பன் என்பதுபோல, அரசியலில் எது வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம்.

திமுக தரப்பு விளக்கம் என்ன ?

இது தொடர்பாக திமுக அமைப்புச் செயலாளரும் மூத்த தலைவருமான ஆர்.எஸ்.பாரதியிடம் கேட்டோம். அதற்கு அவர் ‘பாஜக கூட்டணியில் திமுக சேர்கிறது என்பதும், மத்திய அமைச்சரவையில் திமுக இடம்பெறவுள்ளது என்பதும் வெறும் வதந்தி’ என்று குறிப்பிட்டார். பாஜகவின் 2029 தேர்தல் ஆஃபர் பற்றிய கேள்விக்கு, ’ஏசியங்களுக்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது’ என்று முடித்துக்கொண்டார்.

Source: Read Full Article