தமிழ்நாட்டில் மொத்தம் காலியாக உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளில் நாளை மறுநாள் தாராபுரம் மற்றும் மதுராந்தகம் ஆகிய இரு தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

ஓய்ந்தது பரப்புரை:

தமிழ்நாட்டில் தனிப்பெரும்பான்மை இல்லாமல் தவெக ஆட்சி நடத்தி வரும் நிலையில், இந்த இடைத்தேர்தலின் வெற்றி தமிழக அரசியல் களத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது.

இடைத்தேர்தலுக்காக ஒவ்வொரு கட்சியினரும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வந்த நிலையில், தேர்தல் பரப்புரை ஓய்ந்துள்ளது. இந்த இடைத்தேர்தலுக்காக முதலமைச்சர் விஜய், முன்னாள் முதலமைச்சர்கள் மு.க.ஸ்டாலின் மற்றும் எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி, சீமான் என அரசியல் தலைவர்கள் அனைவரும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டனர்.

போட்டி போட்டு பரப்புரை:

கடைசி நாளான இன்று தாராபுரம் தொகுதியில் முதலமைச்சர் விஜய் தீவிர பரப்புரையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவர் அந்த தொகுதிக்குட்பட்ட அனைத்து கிராமங்கள் தோறும் சாலை வலம் சென்றார். மேலும், மூலவனூர் அம்மன் கோயிலில் வழிபட்டார். நேற்று முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுராந்தகத்தில் பரப்புரையில் ஈடுபட்டார். முதலமைச்சர் விஜய்க்கு இந்த இரு தொகுதியிலும் சற்று சவால் இருப்பதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், அவர் டீ குடித்து, முருங்கைக்காய் பறித்து, வீதி வீதியாக சென்றும் வாக்கு சேகரித்தார்.

இந்த இடைத்தேர்தலில் ஆளுங்கட்சியான தவெக - எதிர்க்கட்சியான திமுக - முன்னாள் ஆளுங்கட்சியான அதிமுக - நாம் தமிழர் - தவெக அரசுக்கு ஆதரவு தரும் இந்திய கம்யூனிஸ்ட் என 5 முனைப்போட்டி நிலவி வருகிறது.

வேட்பாளர்கள்:

தவெக சார்பில் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டு வந்த மரகதம் மற்றும் சத்தியபாமா முறையே மதுராந்தகம் மற்றும் தாராபுரத்தில் போட்டியிடுகின்றனர். திமுக சார்பில் மதுராந்தகத்தில் பரந்தாமனும், தாராபுரத்தில் சுகன்யாவும் போட்டியிடுகின்றனர். அதிமுக சார்பில் தாராபுரத்தில் பானுமதியும், மதுராந்தகத்தில் முன்னாள் எம்எல்ஏ கணிதா சம்பத்தும் போட்டியிடுகின்றனர்.

இந்த இடைத்தேர்தலின் பரப்புரை ஓய்ந்துள்ள நிலையில், தேர்தல் பணிகளுக்காக அரசியல் கட்சியினரால் வெளியூரில் இருந்து அழைத்து வரப்பட்டவர்கள் அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றனர். மேலும், வாக்குச்சாவடி அமைக்கப்பட உள்ள பள்ளிகள், கல்லூரிகளில் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு தற்போது முதலே தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.

தீவிர கண்காணிப்பு:

இடைத்தேர்தல் நாளை மறுநாள் நடைபெற உள்ள நிலையில், இந்த இரு தொகுதிகள் முழுவதும் காவல்துறையினர் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டு வருகிறது. இடைத்தேர்தலுக்கு எந்தவித இடையூறும் ஏற்படுத்தாத வகையில் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை காவல்துறையினர் எடுத்து வருகின்றனர்.

தேர்தல் அதிகாரிகளும் தற்போது இந்த இரு தொகுதிகளுக்கான வாக்குப்பதிவிற்காக தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

Source: Read Full Article