முதலமைச்சர் லண்டன் பயணம்- வீட்டில் உட்கார்ந்து கொண்டு விமர்சனம்

விநாயகர் சதுர்த்தியையொட்டி அமைச்சர் ரமேஷ் இன்று மலைக்கோட்டை உச்சி பிள்ளையார் கோவிலுக்கு வருகை தந்தார்.மாணிக்க விநாயகர் சன்னதி மற்றும் தாயுமானவர் சன்னதி சென்று சாமி தரிசனம் செய்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ரமேஷ், முதல்வரின் லண்டன் பயணம் குறித்து எதிர்க்கட்சிகள் வைக்கும் விமர்சனம் குறித்த கேள்விக்கு பதில் அளிக்கையில், அரசியல் ரீதியாக கருத்தியல் ரீதியாக கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் சொல்லலாம்.

வீட்டில் உட்கார்ந்து கொண்டு தமிழ்நாட்டில் ஏதாவது ஒரு அரசியல் செய்ய வேண்டும் என்று நினைத்து கூறுபவர்களுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என தெரிவித்தார். மேலும் அனைவரும் பாராட்டக் கூடிய வகையில் தமிழக முதல்வர் தெளிவான ஒரு ஆட்சியை நடத்தி வருகிறார். உலக அளவில் தமிழ்நாடு விளையாட்டை கொண்டு செல்லும் அளவிற்கு முதல்வர் விஜய் முயற்சித்து கொண்டிருக்கிறார் எனவும் தெரிவித்தார்.

திரை உலக நடிகரும், அவருடைய நெருங்கிய நண்பருமான அஜித் அவர்கள் கலந்து கொள்ளும் ரேஸ் பந்தயத்தை தொடங்கி வைத்தார். தமிழர்களுடைய பெருமையை உலக அளவில் எடுத்து செல்வதற்கு தமிழக முதல்வர் விஜய் செயல்பட்டு கொண்டிருக்கிறார். எதிர்க்கட்சியினர் விமர்சனத்திற்காக ஏதாவது ஒன்றை கூறி கொண்டிருக்கிறார்கள். அதனால் தான் அவர்கள் எதிர்க்கட்சியாக அமர்ந்திருக்கிறார்கள். இதனைதொடர்ந்து திமுக ஆர்ப்பாட்டத்தில் தமிழக முதல்வரையும் அமைச்சர்களையும் அவதூறாகவும், ஆபாசமாக விமர்சித்தார்கள் என்ற கேள்வி பதில் அளிக்கையில், ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்துவதற்கு அனைவருக்கும் ஜனநாயக உரிமை உள்ளது. அங்கு அவதூறாக பேசுவதும், ஆபாசமாக பேசுவதையும், கீழ்த்தரமாக, பேசுவதை தான் எதிர்க்கிறோம்.

ஆபாசமாக பேசுவது தான் திமுகவின் டி.என்.ஏ

அதை திமுக செய்யவில்லை என்றால் தான் ஆச்சரியமாக இருக்கும். மேலும் ஆபாசமாக, அவதூறுவாக, இழிவாக பேசுவது தான் திமுகவின் உடைய டி.என்.ஏ இப்படி தான் திமுக உடைய அமைச்சர்கள் வளர்ந்திருக்கிறார்கள். அப்படி தான் கொளத்தூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இவர்களை வளர்த்து உள்ளார். குறிப்பாக அவருடைய மகனையும் அப்படி தான் வளர்த்துள்ளார். எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினும் இரட்டை அர்த்தத்தில் பேசுவது, அவதூறாக பேசுவது, ஆபாசமாக பேசுவது, அமைச்சர்களை கொச்சைப்படுத்தி பேசுவது போன்ற வேலையை தான் செய்து வருகிறார் என குறிப்பிட்டார்.

சர்ச்சை பேச்சு தொடர்பாக முன்னாள் அமைச்சர்கள் மீது சட்ட நடவடிக்கை ஏதும் எடுக்க போகிறோமா கேள்வி ? தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர்களை மட்டுமல்ல பொதுமக்கள், பெண்கள் அனைவரையும் இழிவாக பேசினால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும். முன்னாள் அமைச்சர்கள் பொறுப்புணர்வோடு பேச வேண்டும். பேச்சிலேயே ஒரு அறம் இல்லை என்றால் எப்படி நீங்கள் அறநிலையத்துறையை அமைச்சராக இருந்தீர்கள் என சேகர்பாபுவை கடுமையாக விமர்சித்தார்.

இபிஎஸ்யை விமர்சித்த ரமேஷ்

தமிழ்நாட்டில் திறனற்ற ஆட்சி நடைபெறுவதாக எடப்பாடி. பழனிச்சாமி வைத்த குற்றச்சாட்டு குறித்த கேள்வி? கடந்த மூன்று மாதத்தில் மட்டும் இந்த சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படவில்லை.. அனைத்தையும் சரி செய்து வருகிறோம். அனைத்து பிரச்சினைகளையும் சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட வருகிறது. குறிப்பாக தமிழக முதல்வர் சட்ட ஒழுங்கை சீர்படுத்துவதற்காக அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொண்டு வருகிறார். இதுபோன்று குற்றச்சாட்டுகளை முன் வைப்பவர்கள் கடந்த 5 வருடங்களாக செய்தித்தாள்களை படிக்கவில்லை என்று தான் அர்த்தம். ஒரு பழமொழி தான் சொல்லனும் மழை நின்னாலும், தூவானம் விடுவதில்லை என்ற ஒரு வார்த்தை இருக்கிறது.. அதுபோல் கடந்த ஆட்சி காலங்களில் நடந்த சீர்கேடுகளை சரி செய்து வருகிறோம் என அமைச்சர் ரமேஷ் குறிப்பிட்டார்.

Source: Read Full Article