Chennai Flood: சென்னையில் பருவ மழை காலத்தில் வெள்ள நீரை வடிக்க ஆயிரம் பம்புகள் தயார் செய்யப்பட்டு வருகின்றனவாம்.

மழை வெள்ள பாதிப்பு - 219 இடங்களில் மார்க்

வடகிழக்கு பருவமழை நெருங்கிக் கொண்டுள்ளது. இதனிடையே, கால நிலை மாற்றத்தால் தமிழ்நாட்டில் இந்த முறை கடும் மழைக்கு வாய்ப்புள்ளதாக வல்லுநர்கள் குழு எச்சரித்துள்ளது. இதனை கருத்தில் கொண்டு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவது தொடர்பாக முதலமைச்சர் விஜயும் அவ்வப்போது அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி வருகிறார். ஒவ்வொரு ஆண்டும் பருவமழையால் கடுமையாக பாதிக்கப்படும் மாவட்டங்களில் சென்னை கட்டாயம் இடம்பெற்று விடுகிறது. இந்நிலையில், 2015, 2021 மற்றும் 2023 ஆகிய ஆண்டுகளில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்பு தொடர்பான தரவுகளின் அடிப்படையில், சென்னையில் ஈசிஆர் மற்றும் ஓஎம்ஆர் உட்பட 219 இடங்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட வாய்ப்புள்ள பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளனவாம்.

மழை வெள்ளம் ஏற்படுவதை தடுக்க புதிய திட்டம்..!

இதுதொடர்பாக பேசியுள்ள சென்னை மாநகராட்சி ஆணையர் சமீரன், “தாழ்வான பகுதிகள் மற்றும் மெட்ரோ ரயில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வரும் இடங்கள் ஆகியவை பாதிக்கப்படக்கூடிய இடங்களில் அடங்கும் இந்த இடங்களில் நீரேற்றுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கட்டுமானத் தளங்களில், குறிப்பாக நிலத்தடி மெட்ரோ பணிகள் நடைபெறும் இடங்களில் உள்ள பூமிக்கு அடியிலான பகுதிகளை, கனமழையின் போது தற்காலிக நிலத்தடி நீர்த்தேக்கங்களாகப் பயன்படுத்தலாம் என்று மெட்ரோ அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளோம். அவ்வாறு தேங்கிய நீரை உடனடியாக வடிகால்களில் பம்ப் செய்வதற்குப் பதிலாக, மழை குறைந்த பிறகு படிப்படியாக வெளியேற்றலாம்.

ஐஐடி மெட்ராஸ், அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் OMR சாலையோர ஐடி வளாகங்கள் உள்ளிட்ட பெரிய நிறுவனங்கள் மற்றும் வளாகங்கள், தங்களது வளாகங்களிலிருந்து மழைநீரை உடனடியாக OMR அல்லது ECR-இல் வெளியேற்ற வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளோம். பம்புகள் மற்றும் நீர்த்தேக்கத் தொட்டிகளுக்கு ஏற்பாடு செய்து, சிறிது நேரத்திற்குப் பிறகு படிப்படியாகத் தண்ணீரை வெளியேற்றுமாறு வலியுறுத்தியுள்ளோம்” என தெரிவித்துள்ளார்.

வெள்ள பாதிப்பு - முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்:

மாநகராட்சி தரப்பில் இருந்து வெளியாகியுள்ள தகவலின்படி, மழை வெள்ளத்தால் பாதிக்கப்படக்கூடிய மற்றும் தாழ்வான பகுதிகளில் மொத்தம் 1,320 மோட்டார் பம்புகள் அமைக்கப்பட்டுள்ளன. 36 காற்றடைக்கப்பட்ட படகுகளும், 36 கண்ணாடியிழை வலுவூட்டப்பட்ட நெகிழிப் படகுகளும் தயார்படுத்தப்பட்டுள்ளன. பருவமழைக்கு முன்னதாக 215 நிவாரண மையங்கள் தயார் செய்யப்பட்டுள்ளன. வெள்ளம் போன்ற சூழ்நிலைகளின் போதும், அதற்கான ஆயத்த நடவடிக்கைகளுக்காகவும் சுமார் 3,500 தன்னார்வலர்கள் சென்னை பெருநகராட்சியிடம் முன்பதிவு செய்துள்ளன. சென்னையின் 1,683 கி.மீ நீளமுள்ள மழைநீர் வடிகால் அமைப்பில் ஆயிரத்து 102 கி.மீ தூரத்திற்குத் தூர்வாரும் பணி நிறைவடைந்துள்ளது. நகரம் முழுவதும் உள்ள 44 கால்வாய்களில் 80 சதவிகிததத்திற்கும் அதிகமான பல்வேறு பணிகள் நிறைவடைந்துள்ளன.

இதையும் படியுங்கள்: Chennai Airport: 6 வழி மேம்பால சாலையுடன், அப்க்ரேடாகும் சென்னை விமான நிலையம் - தயாராகும் DPR,முழு விவரம் இதோ

ரூ.150 கோடியில் சாலை மேம்பாடு:

இதனிடையே சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், 2026-27ஆம் நிதியாண்டில் முதலமைச்சர் சட்டமன்றத்தில் 110 ஆவது விதியின் கீழ் பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 360 கி.மீ நீளமுடைய பேருந்து தட சாலைகள் மற்றும் உட்புறச் சாலைகளில் ரூ.300 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படும் என அறிவித்தார். அதனடிப்படையில், பெருநகர சென்னை மாநகராட்சியில் முதற்கட்டமாக மண்டலம் 1 முதல் 15 வரையில் உள்ள சேதமடைந்த 45.13 கி.மீ. நீளமுள்ள 66 பேருந்து தட சாலைகள் மற்றும் 114.87 கி.மீ. நீளமுள்ள 714 உட்புறச் சாலைகள் என மொத்தம் 160 கி.மீ நீளத்திலான 780 பேருந்து மற்றும் உட்புறச் சாலைகளை ரூ.150 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்துவதற்கு விரிவான திட்ட அறிக்கைகள் தயார் செய்யப்பட்டு நிர்வாக அனுமதிக்காக தமிழ்நாடு அரசிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக, தமிழ்நாடு நகர்ப்புற நிதி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கழகம் (TUFIDCO) மூலமாக விரிவான திட்ட அறிக்கைகளின் மதிப்பீடுகள் ஆய்வு செய்யப்பட்டு, அனுமதி வழங்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக, இப்பணிகளுக்கு உடனடியாக ஒப்பந்தங்கள் கோரப்பட்டு எதிர்வரும் வடகிழக்கு பருவமழைக்கு முன் சாலைகள் மேம்படுத்தும் பணி மேற்கொள்ளப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: Read Full Article