Besant Nagar Beach Upgrade: பெசன்ட் நகர் கடற்கரையில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

பெசன்ட் நகர் பீச்சில் நிரம்பி வழியும் ஆக்கிரமிப்புகள்:

சென்னையில் மெரினாவை தொடர்ந்து அதிகளவில் மக்கள் கூடும் கடற்கரை பகுதியாக பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை உள்ளது. ஆனால், இங்கு அத்துமீறி அமைக்கப்பட்டு வரும் ஆக்கிரமிப்பு கடைகலால் கடற்கரையின் இயற்கை அழகை மக்களால் ரசிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. புள்ளிவிவரங்களின்படி, 2013ம் ஆண்டில் வெறும் 245 கடைகள் மட்டுமே இருந்த நிலையில் கடந்த 2021ம் ஆண்டு அந்த எண்ணிக்கை 645 ஆக உயர்ந்து இருந்தது. 7 ஆண்டுகளுக்குப்ப் பின் 2022ம் ஆண்டில் நடந்த கணக்கெடுப்பில் கடைகளின் எண்ணிக்கை சுமார் ஆயிரத்து 100 ஆக உயர்ந்தது. அரசியல்வாதிகள் மற்றும் உள்ளூர் மக்கள் பிரதிநிதிகளின் தாராள மனப்பான்மையால் அதிகரித்து வரும் ஆக்கிரமிப்பு கடைகளால், சில ஆண்டுகளுக்கு முன்பு சாலையில் இருந்தே பார்க்க முடிந்த கடல் நீரும், கடற்கரையும் இப்போது முழுமையாக மறைக்கப்பட்டுள்ளன. கடற்கரை மணலில் அமர்ந்து பேச கூட இடநெருக்கடி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இங்கு ஆக்கிரமிப்புகளை அகற்றி, கடைகளை ஒழுங்குபடுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

பெசன்ட் நகர் பீச் அப்க்ரேட் - ரூ.10 கோடியில் திட்டம்

இந்நிலையில் பெசன்ட் நகர் கடற்கரையை 10 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்த மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மெரினாவிற்காக வாங்கிய ஸ்மார்ட் கடைகளை பெசன்ட் நகர் கடற்கரையில் அமைக்க கடந்த ஆட்சியிலேயே அதிகாரிகள் முயன்றதாகவும், அரசியல்வாதிகள் மற்றும் வியாபாரிகளின் எதிர்ப்பால் அந்த முடிவு கைவிடப்பட்டதாகவும் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஆனால், ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதால் தற்போது அரசியல் தலையீடு இன்றி ஆக்கிரமிப்புகளை அகற்றி கடைகளை ஒழுங்குபடுத்தும் பணிகளை மேற்கொள்வதில் எந்த சிக்கலும் இருக்காது எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

கடைகளை அமைப்பதில் முறைகேடு..

கடற்கரையை ஒட்டியுள்ள மூன்று குப்பங்களை சேர்ந்தவர்களில், வீட்டுக்கு ஒருவர் கடை நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் சிலர் வெளிமாவட்டங்கள், வெளிமாநிலங்களை சேர்ந்தோரின் பெயரில் கடைகளை வாங்கியுள்ளது விசாரணையில் அம்பலமாகியுள்ளதாம். அவற்றின் மீது நடவடிக்கை எடுத்து, ஆக்கிரமிப்புகளை அகற்றி, முறையான அனுமதி பெற்ற கடைகளை ஒழுங்கமைப்பதன் மூலம் பெசன்ட் நகர் கடற்கரை மேம்படுத்தப்பட உள்ளதாம். இந்த மறுசீரமைப்பு நடவடிக்கைக்கு வியாபாரிகள் ஒத்துழைத்தால், அவர்களுக்கு முறைப்படி கடைகள் ஒதுக்கப்படும் எனவும் அதிகாரிகள் தரப்பினர் குறிப்பிடுகின்றனர்.

இதையும் படியுங்கள்: Strike At Wedding: திருமண வீட்டில் திடீர் தாக்குதல்..! குழந்தை உட்பட 5 பேர் மரணம், 50 பேர் காயம் - நடந்தது என்ன?

பெசன்ட் நகர் பீச்சில் வரப்போகும் மாற்றங்கள் என்ன?

கடற்கரையில் உள்ள கடைகள் முறைப்படுத்தப்படுவதோடு, அருகில் குத்தகைக்கு விடப்பட்டுள்ள நிலமும் மீட்கப்பட்டு அங்கு கடைகள் மாற்றப்பட உள்ளதாம்

ஆல்காட்குப்பம், ஊரூர்குப்பம், ஓடைக்குப்பம் ஆகிய மூன்று குப்பங்களில் உள்ள வீடுகள், அங்கு வசிப்போர் குறித்து கணக்கெடுத்து, உண்மையான பயனாளிகளுக்கு கடைகள் ஒதுக்கப்படும்

டஉணவு பாதுகாப்புத் துறை, சுகாதாரத் துறை சான்றிதழ்களுடன் தினசரி ஆய்வு மேற்கொண்டு கடைகள் செயல்பட வழிவகை செய்யப்படும்

கடற்கரையை ஒட்டிய பிரதான சாலை, வாகனங்கள் செல்லாத பகுதியாக மாற்றப்பட்டு, பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடு செய்யப்படும்

தற்போதைய கடைகள் அமைந்துள்ள பகுதி முழுதும் மணல் பரப்பாக மாற்றப்பட்டு, பொதுமக்கள் இயற்கையை ரசிக்க வழிவகை செய்யப்படும்

உணவு சாப்பிட விரும்புவோர் அதற்கென ஒதுக்கப்பட்ட இடத்தை பயன்படுத்த ஏதுவாக வசதிகள் மேற்கொள்ளப்படும்

நடைபயிற்சி பாதை, யோகா, சிரிப்பு பயிற்சி, மன அழுத்தத்தை குறைக்கும் பயிற்சி உள்ளிட்ட வாழ்வியல் சாந்த கட்டமைப்புகள் ஏற்படுத்தப்படும்

மணலில் குப்பை கொட்டுவோருக்கு அபராதம் விதிக்கப்படும்

விழிப்புணர்வு ஏற்படுத்த ரோந்து குழுவினர் கண்காணிப்பில் ஈடுபடுவர்

சிறுவர் - சிறுமியர் விளையாடுவதற்கான உபகரணங்கள் அமைக்கப்படும்

கடற்கரைக்கு வரும் வாகனங்களை நிறுத்த, அருகிலுள்ள அரசு காலி இடம் வாகன நிறுத்தமாக மாற்றுவது உள்ளிட்ட வசதிகளை மேம்படுத்த, மாநகராட்சி திட்டமிட்டுள்ளதாம்

Source: Read Full Article