திமுகவில் உட்கட்சி அமைப்புகளை மறுசீரமைக்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளன. இதற்காக 38 வருவாய் மாவட்டங்களுக்குத் தலா இருவர் வீதம், மொத்தம் 76 தலைமைக்கழகப் பிரதிநிதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த நியமனப் பட்டியலை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், இளைஞரணிச் செயலாளர் உதயநிதி, துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி மற்றும் சபரீசன் ஆகியோர் அடங்கிய 'நால்வர் அணி' தேர்வு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக சென்னை அறிவாலயத்தில் ஆகஸ்ட் 22-ஆம் தேதி நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் எடுத்த முடிவின்படி, அமைப்பு ரீதியாக இருந்த 77 மாவட்டங்கள் 110 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது குறிப்பிடத்தக்கது.

பரிந்துரை வழிகாட்டுதல்கள்

நியமிக்கப்பட்டுள்ள 76 பிரதிநிதிகளும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வருவாய் மாவட்டங்களுக்கு உட்பட்டப் பகுதிகளில் கட்சிப் பணிகளை மேற்கொள்ள உள்ளனர். அவர்கள் அந்தந்த மாவட்டச் செயலாளர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களுடன் இணைந்து ஆலோசனைக் கூட்டங்களை நடத்த வேண்டும். வரும் 15 நாட்களுக்குள் தொகுதிவாரியாக நகரம், ஒன்றியம், பேரூர், வட்ட மற்றும் கிளை அமைப்புகளைப் பிரிப்பதற்கானப் பரிந்துரைகளைத் தலைமைக்கு வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து விவாதிக்கவும் ஆலோசிக்கவும் ஸ்டாலின் தலைமையில் 76 பிரதிநிதிகள் பங்கேற்கும் 'வீடியோ கான்ஃபரன்ஸ்' ஆலோசனைக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாவட்ட வாரியாகத் திருவள்ளூர் மாவட்டத்திற்கு விவசாய தொழிலாளர்கள் அணிச் செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான அன்னியூர் சிவா, இளைஞரணி மாநில துணைச்செயலாளர் அப்துல் மாலிக் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை மாவட்டத்திற்கு ராஜ்யசபா எம்.பி. கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், எம்.எல்.ஏ. ஆஸ்டின் ஆகியோரும், செங்கல்பட்டு மாவட்டத்திற்குத் திருவண்ணாமலை எம்.பி. அண்ணாதுரை, கோவி.லெனின் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு மருத்துவர் கணேஷ், ராணி ரவிச்சந்திரன் ஆகியோர் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

கட்சி நலன் சார்ந்த நடவடிக்கை

புதிதாக நியமிக்கப்பட்ட 76 பிரதிநிதிகளின் பட்டியலில் 6 தற்போதைய எம்.பி.க்கள், 5 முன்னாள் எம்.பி.க்கள், 9 தற்போதைய எம்.எல்.ஏ.க்கள், 11 முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும் மகளிர் அணியைச் சேர்ந்த 6 பேர் மற்றும் இளைஞரணியைச் சேர்ந்த 5 பேர் என கட்சியின் அனைத்து சார்பு அணிகளின் மாநில நிர்வாகிகளுக்கும் இந்த மறுசீரமைப்புப் பணியில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு இடம் வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் முற்றிலும் கட்சி நலனைக் கருத்தில் கொண்டு செயல்படுவார்கள் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் 'நால்வர் அணி' மூலம் தேர்வு செய்யப்பட்டு நியமிக்கப்பட்டுள்ளதாகக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Source: Read Full Article