சூடு பிடிக்கும் இடைத்தேர்தல்

தமிழகத்தில் காலியாக உள்ள தாராபுரம், மதுராந்தகம் தொகுதியில் சட்டமன்ற இடைத்தேர்தல் வருகிற அக்டோபர் 6 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த 2 தொகுதியையும் கைப்பற்ற வேண்டும் என ஆளுங்கட்சியும், விடவே கூடாது என திமுகவும், அதிமுகவும் போட்டி போட்டு களத்தில் உள்ளது. அந்த வகையில் 4 மாத கால தவெக ஆட்சியை எடை போடுகிற தேர்தலாக இந்த இடைத்தேர்தல் உள்ளது. இந்த நிலையில் இந்த தேர்தல் பிரச்சாரத்தில் கலந்து கொள்வதற்காக முதலமைச்சர் விஜய் இன்று தாராபுரம் செல்லவுள்ளார். இதற்காக பல்வேறு போக்குவரத்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பல சாலைகள் ஒரு வழிச்சாலையாக மாற்றப்பட்டுள்ளது. இதனால் கோவையில் இருந்து தாராபுரம் வரை பொதுமக்கள் பெரிய அளவில் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.

தாராபுரம் விஜய் பிரச்சாரம்- போக்குவரத்து கட்டுப்பாடு

இது தொடர்பாக வி தி லீடர்ஸ் அமைப்பின் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள பதிவில், தாராபுரம் தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல் பிரச்சாரம் செய்ய முதலமைச்சர் விஜய் அவர்கள் செல்வதால், நாளை, கோயம்புத்தூர், அவிநாசி, தாராபுரம் என பல பகுதிகளில், நாள் முழுவதும் ஏராளமான போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. ஒரு முதலமைச்சரின் பாதுகாப்பு முக்கியமானது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், அந்தப் பாதுகாப்பு ஏற்பாடுகளின் பெயரில் ஆயிரக்கணக்கான பொதுமக்களின் இயல்பான பயணத்தையும், அன்றாட வாழ்க்கையையும் பாதிக்கும் வகையில், ஒரு நாள் முழுவதும் போக்குவரத்து கட்டுப்பாடுகள் விதிப்பது கடுமையான கண்டனத்துக்குரியது.

எந்த வகையான மக்கள் ஆட்சி?

மருத்துவமனைக்குச் செல்ல வேண்டியவர்கள், வேலைக்குச் செல்ல வேண்டியவர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், வியாபாரிகள் என ஒவ்வொரு நாளும் அந்தச் சாலைகளை நம்பியிருக்கும் மக்கள், முதலமைச்சரின் சில நிமிட தேர்தல் பிரச்சாரத்துக்காகப் பாதிக்கப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. மக்களைச் சந்திப்பதற்காக செல்லும் ஒரு முதலமைச்சரின் பயணம், அதே மக்களுக்கே பல மணி நேர சிரமத்தை ஏற்படுத்துவது எந்த வகையான மக்கள் ஆட்சி?

பொதுமக்களை கட்டுப்படுத்துவதை தவிர்க்க வேண்டும்

மக்களை சந்திக்க வரும் முதலமைச்சர், முதலில் மக்களின் சிரமத்தை புரிந்துகொள்ள வேண்டும். மக்களைப் பாதிக்காத வகையில் நிகழ்ச்சிகளை அமைத்துக் கொள்வதே, நல்ல நிர்வாகத்தின் அடையாளம். தேர்தல் பிரச்சாரத்துக்காக, அரசு நிர்வாகத்தின் முழு இயந்திரமும் பொதுமக்களை கட்டுப்படுத்தும் வகையில் பயன்படுத்தப்படுவது தவிர்க்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துவதாக அண்ணாமலை அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Source: Read Full Article