தஞ்சாவூர்: டெல்டா மாவட்டங்களில் இயக்கப்படும் தனியார் பஸ்களிலும் அரசு பஸ்களைப் போன்று தானியங்கி கதவுகள் பொருத்தப்படுமா? என்ற எதிர்பார்ப்பு பயணிகள் மத்தியில் எழுந்துள்ளது. சுற்றுலா, ஆன்மிக பயணம், பள்ளி-கல்லூரி மாணவர்களின் பயணம் என நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் பஸ்களை பயன்படுத்தி வரும் நிலையில், பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அனைத்து பஸ்களிலும் பாதுகாப்பு வசதிகளை உறுதி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

சுற்றுலா மண்டலமாக திகழும் டெல்டா

தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய டெல்டா பகுதி, கோவில், கலை, கலாச்சாரம், ஆன்மிகம், இயற்கை என பல்வேறு சிறப்புகளை ஒருங்கே கொண்ட சுற்றுலா மண்டலமாக விளங்கி வருகிறது.

தஞ்சை பெரிய கோவில், வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயம், நாகூர் தர்கா, கும்பகோணம் மகாமக குளம், நவக்கிரக கோவில்கள், திருவாரூர் தியாகராஜர் கோவில், சிக்கல் சிங்காரவேலர் கோவில் உள்ளிட்ட ஆன்மிக தலங்களும், கல்லணை, மனோரா, முத்துப்பேட்டை அலையாத்திக் காடுகள், கோடியக்கரை உள்ளிட்ட இயற்கை மற்றும் வரலாற்று சிறப்புமிக்க இடங்களும் இப்பகுதியில் உள்ளன.

இதனால் வெளிமாவட்டங்கள் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள், பக்தர்கள் தொடர்ந்து வந்து செல்கின்றனர்.

வார இறுதியில் குவியும் கூட்டம்

கோடை விடுமுறை, பள்ளி மற்றும் கல்லூரி விடுமுறை, பண்டிகை நாட்கள், கோவில் திருவிழாக்கள் மட்டுமின்றி வார இறுதி நாட்களிலும் டெல்டா மாவட்டங்களின் முக்கிய சுற்றுலா மற்றும் ஆன்மிக தலங்களில் மக்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது.

கும்பகோணம் கோட்டத்துக்கு உட்பட்ட திருச்சி, காரைக்குடி, கும்பகோணம், நாகை மண்டலங்களில் 3,500-க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் கும்பகோணம் மற்றும் நாகை மண்டலங்களில் மட்டும் அரசு போக்குவரத்துக் கழகத்தின் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படுகின்றன.

பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அரசு பஸ்களில் படிப்படியாக தானியங்கி கதவுகள் பொருத்தப்பட்டு வருகின்றன. புதிதாக வாங்கப்படும் பஸ்களிலும் இந்த வசதி இடம்பெறுகிறது. குறிப்பாக நகர்ப்புறங்களில் இயக்கப்படும் டவுன் பஸ்களிலும் தானியங்கி கதவுகள் பொருத்தப்பட்டுள்ளன.

80 சதவீத அரசு பஸ்களில் பாதுகாப்பு கதவு

கும்பகோணம் மற்றும் நாகை மண்டலங்களில் இயக்கப்படும் அரசு பஸ்களில் சுமார் 80 சதவீத பஸ்களில் தானியங்கி கதவு வசதி இருப்பதாக கூறப்படுகிறது.

பஸ் புறப்படும்போது கதவு திறந்த நிலையில் பயணிகள் ஆபத்தான முறையில் பயணம் செய்வதை தடுப்பது, படிக்கட்டில் நின்று பயணிப்பதால் ஏற்படும் விபத்துகளை குறைப்பது, திடீர் பிரேக் மற்றும் வளைவுகளில் பயணிகள் நிலைதடுமாறி கீழே விழுவதை தடுப்பது உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த ஏற்பாடு முக்கியத்துவம் பெற்றுள்ளது.

350-க்கும் மேற்பட்ட தனியார் பஸ்கள்

இதற்கு மாறாக டெல்டா மாவட்டங்களில் இயக்கப்படும் பல தனியார் பஸ்களில் தானியங்கி கதவு வசதி இல்லாத நிலை காணப்படுகிறது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் தஞ்சை தாலுகாவில் மட்டும் 84 தனியார் பஸ்கள் உள்பட மாவட்டம் முழுவதும் 169 தனியார் பஸ்கள் இயக்கப்படுகின்றன. திருவாரூர் மாவட்டத்தில் சுமார் 70 பஸ்களும், நாகப்பட்டினம் மாவட்டத்தில் சுமார் 70 பஸ்களும் இயக்கப்படுகின்றன. மயிலாடுதுறை மாவட்டத்திலும் தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இதன்படி டெல்டா மாவட்டங்களில் 350-க்கும் மேற்பட்ட தனியார் பஸ்கள் இயக்கப்படுகின்றன. புதிதாக வாங்கப்படும் சில தனியார் பஸ்களில் மட்டும் தானியங்கி கதவு வசதி இடம்பெற்றுள்ளது.

கூட்ட நெரிசலில் அதிகரிக்கும் விபத்து அபாயம்

பண்டிகை, கோவில் திருவிழா மற்றும் விடுமுறை காலங்களில் தனியார் பஸ்களிலும் பயணிகள் கூட்டம் அதிகரிக்கிறது. சில நேரங்களில் பஸ்சுக்குள் இடம் இல்லாததால் பயணிகள் படிக்கட்டுப் பகுதியில் நின்றபடியே பயணம் செய்ய வேண்டிய சூழல் ஏற்படுகிறது. அப்போது பஸ் வேகமாக செல்லும்போதோ அல்லது திடீரென பிரேக் போடும்போதோ படிக்கட்டில் நிற்கும் பயணி நிலைதடுமாறி சாலையில் விழும் அபாயம் உள்ளது. பின்னால் வரும் வாகனங்களில் சிக்குவதற்கும் வாய்ப்பு ஏற்படுகிறது.

எனவே கதவு என்பது வெறும் வசதிக்கான உபகரணம் அல்ல; அது பயணிகளின் உயிரை பாதுகாக்கும் முக்கிய பாதுகாப்பு ஏற்பாடு என பயணிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

சாலை விபத்துகளும் தொடரும் கவலை

டெல்டா மாவட்டங்களில் பஸ் பயணம் மட்டுமின்றி இருசக்கர வாகனம், கார், லாரி உள்ளிட்ட வாகனங்கள் தொடர்பான சாலை விபத்துகளும் தொடர்ந்து கவலைக்குரியதாக உள்ளன.

தஞ்சாவூர் மாவட்டத்தில் 2023-ம் ஆண்டு 589 சாலை விபத்து வழக்குகளில் 609 பேர் உயிரிழந்தனர். 2024-ம் ஆண்டு 534 விபத்து வழக்குகளில் 558 பேர் உயிரிழந்துள்ளனர். விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் தடுப்புகள், ஒளிரும் எச்சரிக்கை விளக்குகள் உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மயிலாடுதுறை மாவட்டத்தில் 2024-ம் ஆண்டு 155 சாலை விபத்து மரணங்கள் பதிவான நிலையில், 2025-ம் ஆண்டு இந்த எண்ணிக்கை 103 ஆக குறைந்துள்ளது. டெல்டா மாவட்டங்களை பொறுத்தவரை 2024-ம் ஆண்டு 1,032 பேர் சாலை விபத்துகளில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2025-ம் ஆண்டிலும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சாலை விபத்துகளில் பலியாகியுள்ளனர்.

சுற்றுலா வளர்ச்சியுடன் பாதுகாப்பும் அவசியம்

டெல்டா மாவட்டங்களில் சுற்றுலா மற்றும் ஆன்மிக பயணம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அதற்கேற்ப போக்குவரத்து பாதுகாப்பு வசதிகளும் மேம்படுத்தப்பட வேண்டியது அவசியமாகியுள்ளது.

தனியார் பஸ்களில் தானியங்கி கதவுகள் பொருத்துவது தொடர்பாக போக்குவரத்துத்துறை உரிய ஆய்வு மேற்கொண்டு, சாத்தியமான இடங்களில் பாதுகாப்பு விதிமுறைகளை நடைமுறைப்படுத்த வேண்டும். குறிப்பாக புதிதாக இயக்கப்படும் பஸ்களில் பாதுகாப்பு வசதிகளை கட்டாயப்படுத்துவது குறித்தும் பரிசீலிக்க வேண்டும் என்பதே பயணிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது. சுற்றுலா வளர்ச்சி முக்கியம்... அதைவிட பயணிகளின் உயிர் பாதுகாப்பு முக்கியம். அரசு பஸ்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடைமுறைகளை தனியார் பஸ்களிலும் படிப்படியாக கொண்டு வர வேண்டும் என்பதே டெல்டா பயணிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Source: Read Full Article