தமிழ்நாட்டில் காலியாக உள்ள 7 தொகுதிகளில் தாராபுரம் மற்றும் மதுராந்தகம் ஆகிய இரு தொகுதிகளுக்கும் வரும் அக்டோபர் 6ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

5 முனைப்போட்டி:

இந்த இரு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் போட்டி மிகவும் வலுவாக அமைந்துள்ளது. ஆளுங்கட்சியான தவெக - எதிர்க்கட்சியான திமுக - முன்னாள் ஆளுங்கட்சியான அதிமுக - நாம் தமிழர் - தவெக அரசுக்கு ஆதரவாக உள்ள கம்யூனிஸ்ட் என 5 முனைப் போட்டி நிலவி வருகிறது.

தாராபுரத்தில் இன்று பரப்புரை:

இந்த சூழலில், தவெக வேட்பாளர் சத்தியபாமாவிற்கு ஆதரவாக இன்று முதலமைச்சரும், தவெக தலைவருமான விஜய் பரப்புரையில் ஈடுபடுகிறார். இதற்காக அவர் இன்று சென்னையில் இருந்து விமானம் மூலமாக கோவை செல்கிறார். அங்கிருந்து சாலை வழியாக தாராபுரம் செல்கிறார்.

தாராபுரத்தில் இன்று பிற்பகல் 3 மணிக்கு அவர் பரப்புரையில் ஈடுபடுகிறார். இதற்காக 34 ஏக்கர் பரப்பளவில் நிலம் தயார் செய்யப்பட்டுள்ளது. விஜய்யின் இந்த பரப்புரையில் பங்கேற்க சுமார் 5 ஆயிரம் பேர் வரை அனுமதிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் விஜய் இன்று தாராபுரத்தில் பரப்புரையில் ஈடுபடுவதால் கோவை விமான நிலையம் முதல் தாராபுரம் பரப்புரை பகுதி வரை பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு:

இதற்காக சுமார் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். விஜய்யின் பரப்புரை காரணமாக தாராபுரத்தில் பரப்புரை நடைபெறும் பகுதி மற்றும் விஜய் வந்து செல்லும் நேரங்களில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ஆளுங்கட்சியாக தனிப்பெரும்பான்மை இல்லாமல் ஆட்சியை நடத்தும் தவெக-விற்கு இந்த இரு தொகுதிகளின் வெற்றி மிகவும் அவசியமானதாக உள்ளது. தற்போதைய ஆட்சி காங்கிரஸ், விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் நடைபெற்று வருவதால் தவெக இந்த இரு தொகுதிகளின் வெற்றிக்காக தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகிறது.

எதிர்ப்பும், நெருக்கடியும்:

ஆளுங்கட்சி என்ற அந்தஸ்துடன் தவெக இந்த இடைத்தேர்தலை எதிர்கொண்டாலும், அதிமுக சார்பில் வெற்றி பெற்ற எம்எல்ஏ-க்களை தங்கள் பக்கம் ஈர்த்து அவர்களையே தவெக வேட்பாளர்களாக விஜய் களமிறக்கியிருப்பது அவருக்கு சற்று பின்னடைவையே அளித்துள்ளது. குறிப்பாக, தாராபுரத்தில் தவெக-விற்கு எதிர்ப்பு சற்று அதிகளவில் இருப்பதாக கூறப்படுகிறது.

தற்போதைய கள நிலவரப்படி, மதுராந்தகம் தொகுதியில் தவெக-விற்கு வெற்றி வாய்ப்புகள் அதிகளவு உள்ளதாக கூறப்படும் நிலையில், தவெக-விற்கு தாராபுரத்தில் எதிர்ப்புகள் அதிகளவு இருப்பதாகவே கூறப்படுகிறது. கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக வேட்பாளராக களமிறங்கி வெற்றி பெற்று, 3 மாதங்களிலே தவெக வேட்பாளராக களமிறங்கியுள்ள சத்தியபாமா-விற்கு பல இடங்களில் மக்கள் கேள்விக்கணைகளை தொடுத்து வருகின்றனர்.

Source: Read Full Article