தமிழ்நாட்டில் சுமார் இரண்டரை கோடி பேர் அரிசி ரேஷன் அட்டை வைத்திருக்கிறார்கள். அவர்களில் பெரும்பாலோனோர் ரேஷன் கடைகளில் விநியோகிக்கப்படும் அரிசியை மட்டுமே நம்பி, தங்கள் குடும்பத்தை நடத்தி வருகிறார்கள். இந்நிலையில், விவசாயிகளிடமிருந்து போதிய அளவில் நெல்லை கொள்முதல் செய்யாததால், பொதுவிநியோகத் திட்டம் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக எச்சரிக்கிறார்கள் உணவுத் துறையை சேர்ந்தவர்கள்.

நெல் கொள்முதலில் மெத்தனம் – அரிசி தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு

விவசாயிகளிடமிருந்து நெல்லை கொள்முதல் செய்து, அதனை அரவைக்கு அனுப்பி, அதன் மூலம் கிடைக்கும் அரிசியைதான் ரேஷன் கடைகள் மூலம் உணவுத்துறை மக்களுக்கு இலவசமாக கொடுத்து வருகிறது. ஆனால், கடந்த சில மாதங்களாக விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்வது பெருமளவில் தேங்கம் அடைந்திருக்கிறது. பல இடங்களில் விவசாயிகளே தங்களது நெல்லை அரசு கொள்முதல் செய்யவில்லை என போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அமுதா ஐ.ஏ.எஸ்-ஐ கைகாட்டும் அதிகாரிகள்

இது தொடர்பாக உணவுத் துறை அதிகாரிகளிடம் விசாரித்தால், அவர்கள் அத்தனை பேரும் கைகாட்டும் ஒரே அதிகாரியாக இருக்கிறார் உணவுத் துறை செயலாளர் அமுதா ஐ.ஏ.எஸ். டெல்டா உள்ளிட்ட பல மாவட்டங்களில் போதிய தண்ணீர் இல்லாததால் இந்த ஆண்டும் நெல் உற்பத்தி பெருமளவு பாதிக்கப்பட்டிருக்கிறது. இந்த சூழலில் இருக்கும் நெல்லை கூட விவசாயிகளிடமிருந்து உணவுத் துறையினரால் உடனுக்குடன் கொள்முதல் செய்யமுடியாத அளவுக்கு விதிமுறைகளை அமுதா வகுத்திருப்பதாகவும், கள எதார்த்தம் தெரியாமல் ரூல்ஸ் ராமானுஜமாக அவர் செயல்படுவதாலேயேயும்-தான் இந்த தேக்கம் என்றும் புலம்பித் தவிக்கிறார்கள். அமுதா ஐ.ஏ.எஸ் சொல்வதை ஏற்காமல் செயல்பட்டால், அவர் தங்கள் மீது நடவடிக்கை எடுத்துவிடுவார்களோ என பயந்து மெல்லவும் முடியாமல், விழுக்கவும் முடியாமல் நேரடி நெல் கொள்முதல் மையத்தின் ஊழியர்கள் தவித்து கிடப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

நெல் கொள்முதலில் மேலும் சிக்கல் – விதிகளை வகுத்த அமுதா ஐ.ஏ.எஸ்

விவசாயிகளிடமிருந்து நேரடி நெல் கொள்முதல் செய்யும் மையங்களில் (DPC) மூட்டைக்கு 10 ரூபாய் கமிஷன் கேட்பதாக கடந்த ஆட்சியில் தொடர் புகார் எழுந்தது. அதை சரி செய்வதாக நினைத்து, அமுதா ஐ.ஏ.எஸ் போட்ட அதிரடி உத்தரவுகளால் மொத்த நெல்லையுமே கொள்முதல் செய்யமுடியாத நிலை ஏற்பட்டிருப்பதாக வேதனையுடன் பேசுகிறார்கள் மாவட்ட அதிகாரிகள்.

குறிப்பாக, செப்டம்பர் 15ஆம் தேதி SOP எனப்படும் நெல் கொள்முதல் செய்யப்படும்போது பின்பற்ற வேண்டிய விதிகள் என்ற பெயரில் உடனடியாக செயல்படுத்த முடியாத பல விதிகளை அமுதா ஐ.ஏ.எஸ் வகுத்துள்ளதாகவும், இது நெல் கொள்முதல் செய்வதில் கூடுதல் சிக்கல்களை ஏற்படுத்தி, விவசாயிகளிடமிருந்து நெல்லையே கொள்முதல் செய்யமுடியாத அளவிற்கு சென்றுள்ளதாகவும் புகார் எழுந்திருக்கிறது.

உடனே நடைமுறைப்படுத்த முடியாத விதிகளை உருவாக்கிய அமுதா ஐ.ஏ.எஸ்

கிட்டத்தட்ட 20 பக்கங்களுக்கு அமுதா ஐ.ஏ.எஸ் வகுத்த விதிகளை வெளிப்படையாக பார்க்கும்போது, சிறப்பாக இருப்பதாக அனைவருக்கும் தோன்றும். ஆனால், நடைமுறையில் இதனை உடனடியாக செயல்படுத்த முடியுமா? என்றால் அத்தனை பேரும் ’முடியாது’ என்ற வார்த்தையைதான் ஒரே குரலில் சொல்கிறார்கள். நடைமுறை எதார்த்தத்தை புரிந்துகொள்ளாத வகையில் உணவுத் துறை செயலாளர் அமுதா, நூறுக்கும் மேற்பட்ட விதிகளை உருவாக்கி, நெல் கொள்முதலை மேலும் அவர் சிக்கலுக்கு உள்ளாக்கியிருக்கிறார் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

விதிகளில் சில…

குறிப்பாக,

கொள்முதல் செய்யப்பட்ட ஒவ்வொரு நெல் முட்டையையும் முறையாக ஸ்டென்சில் செய்வதை பருவகால உதவியாளர் ஆய்வு செய்யவேண்டும்.

மூட்டையை பரிந்துரைக்கப்பட்ட நிறத்தில் உள்ள சணலை பயன்படுத்தி 14 தையல்கள் போடுவதை உறுதிப்படுத்த வேண்டும்.

நெல் கொள்முதல் மையங்களில் ஏற்படும் எதிர்பாராத அசாம்பாவிதங்களுக்கு கொள்முதல் அலுவலரே பொறுப்பேற்க வேண்டும்.

நெல்லை கொண்டுவருபவர்கள் உண்மையான விவசாயிதானா? என்பதை வருவாய் அலுவலரை வைத்து சரிபார்த்து அவர்களிடம் சான்றிதழ் பெற வேண்டும்.

பரிந்துரைக்கப்பட்ட மகசூல் வரம்பை தாண்டி விவசாயிகளிடமிருந்து கூடுதலாக நெல்லை கொள்முதல் செய்யக்கூடாது.

ஆதார் அடிப்படையிலான அங்கீகாரம் மேற்கொள்ளப்பட்ட பின்னரே கொள்முதல் செயலியில் விவசாயிகள் பதிவு செய்யப்பட வேண்டும்.

விவசாயிகளால் வழங்கப்படும் நில விவரங்கள் தொடர்புடைய கிராம நிர்வாக அலுவலரால் இணையதளம் வாயிலாக சரிபார்க்கப்பட்டு அங்கீகரிக்கப்பட வேண்டும்.

உள்ளிட்ட பல விதிகள் நடைமுறைக்கு உடனே ஒத்துவராத வகையில் அமுதா-வால் வகுக்கப்பட்டுள்ளன. சாதாரணமாக ஒரு இருப்பிட சான்று கேட்டுச் சென்றால் கூட, இன்றுபோய் நாளை வா, என 10 முறைக்கு மேல் அலைக்கழிக்கும் பல வி.ஏ.ஓக்கள் இருக்கும் நிலையில், அப்படியானவர்களிடமிருந்து எப்படி சாதாரண விவசாயிகள், தொட்டதெற்கெல்லாம் சான்றிதழ் வாங்கி வருவார்கள்? என்ற கேள்வியும் வேதனையும் விவசாயிகள் மத்தியில் எழுந்திருக்கிறது. இதனால் நெல் கொள்முதல் செய்வது பெருமளவு தடைப்பட்டு வருகிறது.

அரசுக்கு பெரும் ஆபத்து

இந்த நெல் கொள்முதல் தொடர்ந்து இப்படியே தடைப்பட்டால், பொதுவிநியோக திட்டம் விரைவில் பாதிக்கப்படும். இதனால், ரேஷன் கடைகளில் அரிசி கிடைப்பது குதிரை கொம்பாக மாறிப்போகும் அபாயம் இருக்கிறது. அப்படி ரேஷன் கடைகளில் அரிசி தட்டுப்பாடு ஏற்பட்டால் மக்கள் கோபம் முதல்வர் விஜய் அரசு மீது திரும்பி, பெரும் விளைவுகளை ஏற்படுத்தும் என்கிறார்கள் அரசியல் ஆய்வாளர்கள்.

அமைச்சர் சொல்வதை கேட்காத அதிகாரி அமுதா

விவசாயிகள், கொள்முதல் நிலைய அதிகாரிகள் என பலரும் இந்த சிக்கல்கள் குறித்து, உணவுத்துறை அமைச்சர் வெங்கடரமணினிடம் சொன்ன குறைகளை, அவர் அமுதா ஐ.ஏ.எஸ் கவனத்திற்கு கொண்டுச் சென்றும், அதில் எந்த மாற்றமும் நடக்கவில்லையென்றும், அமைச்சர் சொல்வதை கூட கேட்டு செயல்படும் மனநிலையில் அவர் இல்லை என்றும் சொல்கிறார்கள் தலைமைச் செயலக அதிகாரிகள்.

என்ன சொல்கிறார் பி.ஆர்.பாண்டியன்

இந்த விவகாரம் தொடர்பாக அனைத்து விவசாய சங்க ஒருங்கிணப்புக் குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியனிடம் கேட்டபோது, ’தண்ணீர் இன்றி குறுவை சாகுபடி பெருமளவு பாதிக்கப்பட்டிருக்கிறது. அதே நேரத்தில் சம்பா சாகுபடி எந்த அளவுக்கு கைகொடுக்கும் என்றும் தெரியவில்லை. கிடைத்த நெல்லை விவசாயிகள் அரசிடம் கொண்டுச் சென்றாலும் அது உடனடியாக கொள்முதல் செய்யப்படுவதில்லை. பல இடங்களில் நெல் கொள்முதலில் தேக்கம் ஏற்பட்டு, விளைந்த நெற்மணிகள் வீணாய் போகிறது. இதனை உடனடியாக கருத்தில்கொண்டு அரசு நெல்லை விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்து, அரவைக்கு அனுப்ப வேண்டும். இல்லையென்றால், அரசுக்குதான் மிகப்பெரிய கெட்ட பெயர் ஏற்படும்’ என்றார்.

Source: Read Full Article