தஞ்சாவூர்: நீர்நிலைகளில் தண்ணீர் குறைந்து, அங்கு கிடைத்து வந்த இயற்கை உணவுகளும் இல்லாத நிலையால், உணவு தேடி பறவைகள் வயல்வெளிகளை நோக்கி படையெடுத்து வருகின்றன. பசுமை போர்த்திய வயல்களில் கூட்டமாக சுற்றித்திரியும் பறவைகள், வயல்வெளியின் அழகை அதிகரிப்பதுடன், நீர்நிலைகளில் ஏற்பட்டுள்ள மாற்றத்தையும் வெளிப்படுத்தும் இயற்கைக் காட்சியாக அமைந்துள்ளன.

காவிரி டெல்டா உள்ளிட்ட விவசாய பகுதிகளில் வயல்வெளிகளும், நீர்நிலைகளும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்த இயற்கைச் சூழலை கொண்டுள்ளன. ஆறுகள், குளங்கள், ஏரிகள், வாய்க்கால்கள் உள்ளிட்ட நீர்நிலைகளில் தண்ணீர் தேங்கியிருக்கும் காலங்களில் பல்வேறு வகையான பறவைகள் அப்பகுதிகளை வாழ்விடமாகவும், உணவு தேடும் இடமாகவும் பயன்படுத்துவது வழக்கம். வெளிநாட்டு பறவைகளும் அதிகம் வந்து குவியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக நீர்நிலைகளைச் சுற்றியுள்ள ஈரமான நிலப்பரப்புகளில் சிறு உயிரினங்கள், பூச்சிகள் உள்ளிட்ட உணவுகள் கிடைப்பதால் பறவைகளுக்கு அவை முக்கியமான பகுதிகளாக விளங்குகின்றன. ஆனால் பருவநிலை மாற்றங்கள், மழைப்பொழிவு குறைவு, நீர்நிலைகளில் நீர் இருப்பு குறைதல் போன்ற காரணங்களால் சில காலங்களில் பறவைகளுக்கு வழக்கமாக கிடைக்கும் உணவு வளம் குறைந்து விடுகிறது. இதனால் அவை தங்களது உணவுத் தேவையை பூர்த்தி செய்வதற்காக வேறு பகுதிகளை நோக்கிச் செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது.

அந்த வகையில் ஆற்றில் தண்ணீர் வராதது, மழைப்பொழிவு குறைவு, வெப்பம் அதிகரிப்பு போன்றவற்றால் தஞ்சாவூர் மாவட்டத்தில் நீர்நிலைகள் கிடுகிடுவன்று வறண்டு வருகிறது. ஒரு பக்கம் குறுவை சாகுபடி பரப்பளவு குறைந்தாலும், பம்ப்செட் வாயிலாக சாகுபடி பணிகளை பலபகுதிகளிலும் விவசாயிகள் மேற்கொண்டுள்ளனர். அதனால் தற்போது பசுமையாக காட்சியளிக்கும் வயல்வெளிகளில் பறவைகள் கூட்டமாக இறங்கி உணவு தேடுவது இயற்கையின் இயல்பான மாற்றங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

வயலில் மெதுவாக நடந்து சென்று, தங்களது நீண்ட அலகுகளால் மண்ணையும் புல்வெளியையும் கிளறி உணவு தேடும் காட்சி பார்ப்பவர்களின் கவனத்தை ஈர்க்கிறது. வயல்வெளிகளை சுற்றி பயிர்கள் வளர்ந்து நிற்கும் காலங்களில் அவற்றைச் சுற்றியுள்ள சூழலில் பல்வேறு சிறு உயிரினங்கள் காணப்படுகின்றன. வயல்களில் நிலவும் ஈரப்பதம் மற்றும் உயிரியல் சூழலும் பறவைகளுக்கு உணவு தேடும் வாய்ப்பை வழங்குகின்றன. இதனால் நீர்நிலைகளில் உணவு கிடைப்பது குறையும் நேரங்களில் பறவைகளுக்கு விவசாய நிலங்கள் அவற்றுக்கு மாற்று உணவுத் தேடும் பகுதிகளாக அமைந்துள்ளது.

பறவைகள் வயல்வெளிகளில் கூட்டமாக வந்து உணவு தேடும் காட்சி விவசாயிகளுக்கும், இயற்கை ஆர்வலர்களுக்கும் மகிழ்ச்சியை அளிக்கிறது. ஒருபுறம் பசுமையான பயிர்கள், மறுபுறம் அவற்றுக்கு நடுவே வெள்ளை நிறத்தில் காட்சியளிக்கும் பறவைகள் என வயல்வெளி முழுவதும் இயற்கையின் ஓவியம் போல் காட்சியளிக்கிறது. பறவைகளின் இந்த வருகையை வெறும் அழகான இயற்கைக் காட்சியாக மட்டும் பார்க்க முடியாது என இயற்கை ஆர்வலர்கள் கூறுகின்றனர். நீர்நிலைகளில் தண்ணீர் மற்றும் உணவு வளம் குறையும்போது, அங்கு வாழும் அல்லது உணவு தேடும் பறவைகள் மாற்று இடங்களை நாடுவது சுற்றுச்சூழலில் ஏற்படும் மாற்றத்தின் ஒரு அறிகுறியாகும்.

“நீர்நிலைகள் வறண்டாலும் பறவைகளின் பசி வறண்டு போவதில்லை. உணவு இருக்கும் இடத்தை நோக்கி அவற்றின் சிறகுகள் தொடர்ந்து பயணிக்கும்” என்ற இயற்கையின் உண்மையை இந்தக் காட்சி உணர்த்துகிறது.

நீர்நிலைகளை பாதுகாப்பது மனிதர்களின் குடிநீர் மற்றும் விவசாயத் தேவைகளுக்காக மட்டுமல்லாமல், பறவைகள் உள்ளிட்ட ஏராளமான உயிரினங்களின் வாழ்வாதாரத்திற்கும் அவசியமானதாகும். குளங்கள், ஏரிகள் மற்றும் பாரம்பரிய நீர்நிலைகளை முறையாக பராமரித்து, அவற்றில் தண்ணீர் தேங்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டால், பறவைகளுக்கும் இயற்கைச் சூழலுக்கும் அது பெரும் பாதுகாப்பாக அமையும்.

பசுமை வயலில் உணவு தேடி நிற்கும் இந்தப் பறவைக் கூட்டம், இயற்கையின் அழகை ரசிக்க வைக்கும் அதே நேரத்தில், “நீர்நிலைகளை காப்போம்; உயிர்களின் வாழ்விடங்களை பாதுகாப்போம்” என்ற மௌனச் செய்தியையும் மனிதர்களுக்கு எடுத்துச் சொல்வதாக அமைந்துள்ளது.

Source: Read Full Article