தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் ரேவதி வழிகாட்டுதலின்படி, தஞ்சாவூர் சுற்றுலா வளர்ச்சிக் குழுமம் சார்பில் மாதந்தோறும் நடத்தப்பட்டு வரும் பாரம்பரியச் சொற்பொழிவு நிகழ்வுகளின் ஒரு பகுதியாக, தஞ்சாவூர் அருங்காட்சியகத்தில் “தஞ்சாவூரும் வேளாண்மையும்” என்ற தலைப்பில் சிறப்புச் சொற்பொழிவு நடைபெற்றது.

நிகழ்ச்சியில் தஞ்சாவூரைச் சேர்ந்த பாரம்பரிய இயற்கை மருத்துவரும், இயற்கை விவசாய நிபுணருமான கோ. சித்தர் சிறப்புரையாற்றினார். கடந்த 1994-ம் ஆண்டு முதல் மாப்பிள்ளைச் சம்பா, கருங்குறுவை உள்ளிட்ட பாரம்பரிய நெல் ரகங்களை பாதுகாத்து, இயற்கை முறையில் பயிரிட்டு வரும் கோ. சித்தர், மூலிகைகள் மற்றும் இயற்கை மருத்துவப் பொருட்கள் தொடர்பான பணிகளிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.

தனது நீண்டகால அனுபவங்களின் அடிப்படையில் தஞ்சாவூரின் வேளாண்மை மற்றும் அதன் பாரம்பரிய முக்கியத்துவம் குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.

தமிழகத்தின் நெற்களஞ்சியமாக தஞ்சாவூர்

தஞ்சாவூர் தமிழகத்தின் “நெற்களஞ்சியம்” எனப் போற்றப்படுவதற்கு வளமான மண், காவிரி நீர்வளம் மற்றும் பல நூற்றாண்டுகளாக தொடர்ந்து வரும் வேளாண் பாரம்பரியம் முக்கிய காரணங்களாகும் என்று கோ. சித்தர் குறிப்பிட்டார். சோழர் காலம் முதல் சோழமண்டலப் பகுதிகள் வேளாண்மையை மையமாகக் கொண்ட வாழ்வியலை பேணி வந்துள்ளன. இன்றளவும் தஞ்சாவூர் மாவட்டம் தமிழகத்தின் முக்கிய வேளாண் மண்டலமாக விளங்கி வருகிறது.

மன்னர் ஆட்சிக் காலங்களில் நீர்நிலைகளுக்கு ஊறு விளைவிப்பவர்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்பட்டதையும், நீர் ஆதாரங்களையும் வேளாண் மண்டலங்களையும் பாதுகாப்பதற்கு அக்காலத்தில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளையும் அவர் சுட்டிக்காட்டினார்.

விதைகளை மட்டுமல்ல... வாழ்வியலை காப்போம்!

பாரம்பரிய நெல் ரகங்களை பாதுகாப்பது என்பது விதைகளை மட்டும் பாதுகாப்பதல்ல. அது நமது மண், நீர், உணவு, உடல்நலம், பண்பாடு மற்றும் தலைமுறைகளின் வாழ்வியலை பாதுகாப்பதாகும் என்று கோ. சித்தர் வலியுறுத்தினார்.

இயற்கை விவசாயம் மண் வளத்தை பாதுகாப்பதோடு மட்டுமல்லாமல், சுற்றுச்சூழல் சமநிலை, உயிரினப் பன்மை மற்றும் மனித உடல்நலத்தையும் பாதுகாக்கிறது. வேளாண் நிலங்கள், நீர்நிலைகள், மேய்ச்சல் நிலங்கள், கால்நடைகள் மற்றும் பல்வேறு உயிரினங்கள் ஒன்றோடொன்று தொடர்புடைய இயற்கைச் சூழல் அமைப்பின் அங்கங்களாக உள்ளன. எனவே, விவசாயத்தை தனித்துறையாக பார்க்காமல், இயற்கைச் சூழலின் ஒரு முக்கிய அங்கமாக பார்க்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

மண் வளம்... உணவின் தரம்... உடல்நலம்!

நாம் உண்ணும் உணவின் தரம் நமது உடல்நலத்தை நிர்ணயிக்கிறது. எனவே, “மண் வளத்தைப் பாதுகாப்பது – உணவின் தரத்தைப் பாதுகாப்பது – மனித உடல்நலத்தைப் பாதுகாப்பது” என்ற தொடர் புரிதல் இன்றைய தலைமுறையினரிடம் உருவாக வேண்டும் என்று கோ. சித்தர் வலியுறுத்தினார்.

தற்போதைய தலைமுறையினர் பாரம்பரிய வேளாண்மையின் மதிப்பையும் விவசாயிகளின் பங்களிப்பையும் உணர வேண்டும். உள்ளூர் மற்றும் பாரம்பரிய உணவுப் பொருட்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். இயற்கை விவசாயத்திற்கும் பாரம்பரிய நெல் ரகங்களின் பாதுகாப்பிற்கும் குரல் கொடுக்கும் தலைமுறையாக இளைஞர்கள் உருவாக வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

தமிழர் வாழ்வின் அடித்தளம் வேளாண்மை

வேளாண்மை என்பது உணவு உற்பத்தி செய்யும் தொழில் மட்டுமல்ல. அது தமிழர் பண்பாடு, பாரம்பரியம், பொருளாதாரம் மற்றும் சமூக வாழ்வின் அடித்தளம் என்றும் கோ. சித்தர் குறிப்பிட்டார். வேளாண் வளர்ச்சி நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும், தொழில் வளர்ச்சிக்கும் முக்கிய பங்காற்றுகிறது. விவசாயத்தை பாதுகாப்பது என்பது விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மட்டும் பாதுகாப்பது அல்ல; ஒட்டுமொத்த சமூகத்தின் எதிர்காலத்தையும் பாதுகாப்பதாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் மாவட்ட உதவி சுற்றுலா அலுவலர் கோபிநாத், கட்டிடப் பொறியாளர் ராஜேந்திரன், தஞ்சாவூர் சுற்றுலா வளர்ச்சிக் குழும ஒருங்கிணைப்பாளர் பொறியாளர் எஸ்.முத்துக்குமார், இயற்கை ஆர்வலர்கள், மாணவர்கள், ஆய்வாளர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்புரையை கேட்டறிந்தனர்.

தஞ்சாவூரின் வேளாண் பாரம்பரியம், பாரம்பரிய நெல் ரகங்கள், இயற்கை விவசாயம் மற்றும் ஆரோக்கியமான உணவுமுறை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த நிகழ்ச்சி அமைந்தது.

Source: Read Full Article