தமிழகத்தில் லஞ்சம் இருக்க கூடாது

தமிழகத்தில் கடந்த 50 ஆண்டுகாலமாக திமுக- அதிமுக என்ற இரு கட்சிகள் மட்டுமே மாறி மாறி ஆட்சி அமைத்து வந்த நிலையில், 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது தவெக, இதனையடுத்து திமுக கூட்டணியில் இருந்த கட்சிகளின் ஆதரவோடு ஆட்சி அமைத்துள்ளது தவெக, இந்த நிலையில் தமிழகத்தில் லஞ்சம் இல்லாத ஆட்சி அமைக்கப்படும் என முதலமைச்சர் விஜய் உறுதி அளித்திருந்தார்.

அந்த வகையில் தனது கட்சிக்காரர்களாக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதற்கு ஏற்ப கடந்த மாதம் தவெகவின் செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட இணை செயலாளராக பதவி வகித்து வந்த வீரா [எ] வீராசாமி என்ற நபர் சாலை ஒப்பந்த பணிகளுக்காக ரூ.1.30 லட்சம் லஞ்சம் வாங்கியதாக வீடியோ ஒன்று சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலானது.

லஞ்சம் வாங்கிய தவெக நிர்வாகி

இது மட்டுமில்லாமல் லஞ்சம் வாங்கிய பணம் தொடர்பான ஸ்க்ரீன்ஷாட்டும் வெளியிடப்பட்டது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேடையில் லஞ்சத்தை ஒழிப்பேன் என தவெக தலைவர் விஜய் சொல்கிறார். நிஜத்தில் நிர்வாகியே லஞ்சம் பெறுகிறார் என எதிர்க்கட்சிகள் சரமாரியாக கேள்வி எழுப்பியது. இதனையடுத்து தவெக செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட இணை செயலாளர் பதவியில் இருந்து வீரா [எ] வீராசாமி நீக்கப்பட்டார்.

மேலும் தாழம்பூர் காவல் நிலையத்தில் சாலை ஒப்பந்ததாரர் நவீன் வீராசாமி தன்னை மிரட்டி ரூ.1.30 லட்சம் பணம் பெற்றதாக புகார் தெரிவித்ததன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் வீராசாமியை கைது செய்து செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். இதில் 15 நாட்கள் ரிமாண்ட் செய்யப்பட்டார். இந்த சம்பவத்தால் முதலமைச்சர் விஜய்யின் நடவடிக்கையை அனைத்து தரப்பும் பாராட்டி இருந்தனர்.

தவெக நிர்வாகியின் மனைவிக்கு பொறுப்பு

இந்த நிலையில் கடந்த 2 தினங்களுக்கு முன்பாக தவெகவில் இணைந்த நிர்வாகிகளுக்கு புதிய பொறுப்புகள் வழங்கப்பட்டது. அந்த வகையில் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்டரவர்களுக்கு மாவட்ட செயலாளர் மற்றும் அமைப்பு செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. இதே போல பலருக்கும் பதவி வழங்கப்பட்ட நிலையில், லஞ்சம் வாங்கிய புகாரில் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட இணை செயலாளர் வீரா [எ] வீராசாமியின் மனைவிக்கும் அதே பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தவெக தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், செங்கல்பட்டு மாவட்ட இணை செயலாளராக ஹேமாவதி நியமிக்கப்படுவதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிண்டல் செய்யும் நெட்டிசன்கள்

இந்த அறிவிப்பு தவெகவினரை மட்டுமல்ல பல்வேறு தரப்பினரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. வீரா [எ] வீராசாமி பணம் பெற்ற வீடியோவில் அருகில் இருந்த பணத்தை பெறுபவர்கள் தான் ஹேமாவதி என கூறப்படுகிறது. எனவே வீரா [எ] வீராசாமிக்கு உடந்தையாக இருந்தவருக்கு தவெகவில் பதவி வழங்கப்பட்டிருப்பதை நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகிறார்கள். மாற்றம் என கூறும் தவெகவினர் இதைத்தான் மாற்றமா என்கிறார்களா.? என கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

Source: Read Full Article