தமிழக வெற்றிக் கழகத்திற்கு எதிர்க்கட்சி எம்.எல்.ஏ. ஒருவரின் மகள் வாக்களித்த சம்பவத்தை அமைச்சர் ஆனந்த் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளது பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.

சட்டசபையில் உண்மையை வெளிப்படுத்திய ஆனந்த்

சட்டமன்றத்தில் பேசிய அவர், “எங்க தலைவர் தளபதி விஜயை மக்கள் எந்தளவுக்கு நேசித்தார் என்பதற்கான ஒரு சின்ன விஷயத்தையும் நான் சொல்கிறேன். அவர் தேர்தல் வாக்குறுதியில் சொன்ன திட்டங்கள் எல்லாம் செயல்படுத்தப்படும். 2016ம் ஆண்டு ஒரு சட்டமன்ற உறுப்பினராக இருந்த ஒருவர் மீண்டும் தேர்தலில் நின்றார். அவர் ஜெயிக்கவில்லை. இதனால் அவரின் மகள் 2 நாட்களாக சாப்பிடாமல் வருத்தப்பட்டுள்ளார். மக்கள் நமக்கு ஓட்டு போடவில்லையே என புலம்பியுள்ளார்.

2026ம் ஆண்டு தேர்தலில் அந்த நபர் மீண்டும் தேர்தலில் நின்றார். அதற்குள் அந்த பெண் திருமணமாகி ஹைதராபாத்தில் குடிபெயர்ந்து விட்டார். வாக்குப்பதிவு முன்னாடியே வந்து விடுமாறு அப்பா சொல்ல மகளும் சரி என சொல்லி விட்டார். இப்போது அந்த நபர் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். வாக்குப்பதிவு நாளன்று பணி எல்லாம் முடிந்து இரவு 9 மணிக்கு வீட்டுக்குச் சென்று மகளிடம் என்னமா எத்தனை மணிக்கு ஓட்டு போட்டாய் என கேட்டுள்ளார். அதற்கு அந்த பெண் காலையில் 7 மணிக்கே நான் ஓட்டு போட்டு விட்டேன். என் அண்ணனின் விசில் சின்னத்திற்கு போட்டேன் என கூறியுள்ளார்.

இதனைக் கேட்ட அந்த சட்டமன்ற உறுப்பினருக்கு ஒன்றும் புரியவில்லை. அம்மா என்னம்மா சொல்ற.. திரும்ப சொல்லு என கேட்க, அவரது மகளும், அப்பா உனக்கு நான் ஓட்டு போடவில்லை. நீ எப்படியும் ஜெயித்து விடுவாய். ஆனால் என் அண்ணன் எப்படியாவது முதலமைச்சராக வேண்டி நான் விசில் சின்னத்திற்கு ஓட்டு போட்டேன். கோபித்து கொள்ளாதே என தெரிவித்திருக்கிறார். அந்த அளவுக்கு மக்கள் முதலமைச்சர் விஜய் மீதும், தவெக மீதும் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். அதற்கேற்றாற்போல நாங்கள் நடந்துக் கொள்வோம்” என தெரிவித்தார்.

யார் அந்த பெண்?

அவ்வளவு தான். இணையதளம் முழுவதும் தவெகவுக்கு ஓட்டு போட்ட எதிர்க்கட்சி எம்.எல்.ஏ. மகள் யார் என பலரும் தேடி வருகின்றனர். அமைச்சர் ஆனந்த் அரசியல் நாகரிகம் மற்றும் தனிநபர் ரகசியத்தன்மை காரணமாக எதிர்க்கட்சி எம்.எல்.ஏ மற்றும் அவரது மகளின் பெயர் விவரங்களை வெளியிடவில்லை. இருந்தாலும் பலருக்கும் யார் அந்த பெண் என்பதை அறிவதில் அதீத ஆர்வம் ஏற்பட்டுள்ளது.

உண்மையில் சட்டமன்ற தேர்தலில் தவெக ஜெயிக்கவும், முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்கவும், எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த நபர்களின் குடும்பத்தினரும் ஒரு காரணமாக அமைந்தனர். இதனை பலரும் வெளிப்படையாகவே தெரிவித்துள்ளனர். பரம்பரை பரம்பரையாக திமுக, அதிமுக, பாமக, விசிக என பல கட்சிகளுக்கு ஓட்டு போட்டவர்கள் கூட தவெகவுக்கு இம்முறை வாக்களித்ததாக கூறியிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Source: Read Full Article