மயிலாடுதுறை | ஆகஸ்ட் 29, 2026: தமிழ்நாட்டின் சுற்றுலாத் துறையை சர்வதேச அளவில் உயர்த்தவும், சுற்றுலா சார்ந்த பல்வேறு சேவைகளில் சிறந்து விளங்கும் தொழில்முனைவோர்கள், முகவர்கள் மற்றும் சேவை அமைப்புகளைக் கெளரவிக்கும் விதமாகவும் தமிழ்நாடு அரசு சார்பில் ஆண்டுதோறும் "தமிழ்நாடு சுற்றுலா விருதுகள்" வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், 2026-ஆம் ஆண்டிற்கான விருதுகளுக்குத் தகுதியான நபர்கள் மற்றும் நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக சுற்றுலாத்துறை இயக்குநர் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வமான செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சரின் வழிகாட்டலும் சுற்றுலாத்துறை வளர்ச்சியும்

தமிழ்நாடு முதலமைச்சரின் வழிகாட்டலின்படி, மாநிலத்தில் சுற்றுலாத்துறையின் உட்கட்டமைப்பை மேம்படுத்தவும், புதிய சுற்றுலா தலங்களை உலகிற்கு அறிமுகப்படுத்தவும் பல்வேறு புதிய தொலைநோக்கு நடவடிக்கைகள் தொடர்ச்சியாக எடுக்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டின் பாரம்பரியம், கலாச்சாரம் மற்றும் இயற்கை வளங்களைப் பறைசாற்றும் வகையில் சுற்றுலாத்துறைப் பணிகளை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் செல்வதில் தனியார் சுற்றுலா அமைப்புகள், உணவகங்கள் மற்றும் தங்குமிட உரிமையாளர்களின் பங்கு மிக முக்கியமானது என்பதை அரசு முழுமையாக உணர்ந்து செயல்பட்டு வருகிறது.

தமிழ்நாடு சுற்றுலா விருதுகளின் பின்னணி

சுற்றுலாத் துறையில் ஈடுபாட்டுடன் செயல்பட்டு வரும் அனைத்து வகைச் சுற்றுலா ஏற்பாட்டாளர்கள், சுற்றுலாத் துறை சார்ந்த தொழில்முனைவோர்கள், விடுதி மேலாளர்கள் மற்றும் ஓட்டல் முகவர்களின் சிறந்த சேவைகளை அங்கீகரிக்கும் உயரிய நோக்கில் கடந்த 2022-ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு சுற்றுலாத் துறையின் மூலம் இந்தத் தமிழ்நாடு சுற்றுலா விருதுகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன. இந்த விருதுகள் மூலம் சுற்றுலாத் துறையினரிடையே ஆரோக்கியமான போட்டியும், சேவையின் தரத்தை உயர்த்தும் ஆர்வமும் பெருமளவில் அதிகரித்துள்ளது.

13 பிரிவுகளின் கீழ் வழங்கப்படும் உயரிய விருதுகள்

இந்த ஆண்டிற்கான தமிழ்நாடு சுற்றுலா விருதுகள் மொத்தம் 13 பல்வேறு பிரிவுகளின் கீழ் வழங்கப்பட உள்ளன.

1.முதலாவதாக, சர்வதேச அளவில் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் சிறந்த சுற்றுலா ஏற்பாட்டாளருக்கான விருதும் (Best Inbound Tour Operator)

2.இரண்டாவதாக உள்நாட்டுச் சுற்றுலா பயணிகளுக்குச் சிறந்த சேவை வழங்கும் சுற்றுலா ஏற்பாட்டாளருக்கான விருதும் (Best Domestic Tour Operator) வழங்கப்படுகின்றன.

3.மூன்றாவதாகப் பாரம்பரியம், கிராமப்புறச் சுற்றுலா, பண்ணைச் சுற்றுலா மற்றும் சாகசச் சுற்றுலாவில் சிறந்து விளங்கும் சிறந்த பயணப் பங்குதாரருக்கான விருதும் (Best Travel Partner - Heritage, Village, Farm & Adventure Tourism)

4.நான்காவதாகச் சிறந்த தங்குமிட வசதிகளை வழங்கும் நிறுவனத்திற்கான விருதும் (Best Accommodation) வழங்கப்படுகின்றன.

5.ஐந்தாவதாகச் சுவையான மற்றும் சுகாதாரமான உணவுச் சேவைகளை வழங்கும் சிறந்த உணவகத்திற்கான விருதும் (Best Restaurant)

6. ஆறாவதாகத் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் சிறந்த தங்குமிடம் மற்றும் படகு இல்லப் செயல்திறனுக்கான விருதும் (Tamil Nadu Tourism Development Corporation Star Performer) அறிவிக்கப்பட்டுள்ளன.

7. ஏழாவதாகச் சுற்றுலாவைச் சிறப்பாக ஊக்குவிக்கும் மாவட்டத்திற்கான விருதும் (Tourism Promotion Award - Best District)

8. எட்டாவதாகச் சுகாதாரத்தைப் பேணிப் பராமரிக்கும் சுத்தமான சுற்றுலாத் தலத்திற்கான விருதும் (Cleanest Tourism Destination) வழங்கப்பட உள்ளன.

9. ஒன்பதாவதாகப் பல்வேறு சிறப்புச் சுற்றுலாப் பிரிவுகளின் சிறந்த ஏற்பாட்டாளருக்கான விருதும் (Best Niche Tourism Operator)

10. பத்தாவதாகச் சிறந்த சிறப்புச் சுற்றுலா நிறுவனங்களில் ஒன்றான சிறந்த மருத்துவ மற்றும் ஆரோக்கிய சுற்றுலா நிறுவனத்திற்கான விருதும் (Best Medical and Wellness Tourism Establishment) இடம்பெற்றுள்ளன.

11.பதினொன்றாவதாகச் சிறந்த சாகச மற்றும் தங்கு முகாம்கள் அமைத்துத் தரும் சுற்றுலா ஏற்பாட்டாளருக்கான விருதும் (Best Adventure Tourism & Camping Site Operator)

12. பன்னிரண்டாவதாகச் சுற்றுலாப் பயணிகளுக்கு வழிகாட்டும் சிறந்த சுற்றுலா வழிகாட்டிக்கான விருதும் (Best Tourist Guide)

13. பதின்மூன்றாவதாகச் சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறையில் சிறந்த கல்விச் சேவையாற்றும் நிறுவனத்திற்கான விருதும் (Best Educational Institution for Tourism & Hospitality) வழங்கப்பட உள்ளன.

விண்ணப்பிக்கும் முறை மற்றும் கடைசி நாள்

மேற்குறிப்பிடப்பட்ட 13 வகையான விருதுகளுக்கான தகுதியான விண்ணப்பதாரர்கள் www.tntourismawards.com என்ற அதிகாரப்பூர்வ இணையதள முகவரியின் வாயிலாக மட்டுமே தங்களுடைய விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். இணையதளம் மூலம் பெறப்படும் விண்ணப்பங்கள் அனைத்தும் நடுவர் குழுவால் முறையாகப் பரிசீலிக்கப்பட்டு, சிறந்த சேவை மற்றும் தகுதியின் அடிப்படையில் வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விருதுகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அனைவரும் வருகின்ற 30.09.2026-க்குள் தங்களது முழுமையான விவரங்களுடன் www.tntourismawards.com இணையதளத்தில் தவறாது விண்ணப்பிக்குமாறு சுற்றுலாத்துறை இயக்குநர் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், கேட்டுக் கொண்டுள்ளார்.

Source: Read Full Article