புதுச்சேரி: புதுச்சேரியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு தற்போது வழங்கப்படும் அரிசியின் அளவை மாற்றியமைத்து, அரிசியுடன் கோதுமை மாவு, துவரம் பருப்பு, கேழ்வரகு மாவு, சர்க்கரை, நெய் உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்படும் என்று முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

புதுச்சேரி சட்டப்பேரவையில் ரூ.14,300 கோடிக்கான வரியில்லா பட்ஜெட்டை முதல்வர் ரங்கசாமி தாக்கல் செய்து உரையாற்றினார். இதில் பால் உற்பத்தியாளர்கள் மற்றும் குடும்ப அட்டைதாரர்களுக்காக பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.

பால் உற்பத்தியாளர்களுக்கு சலுகைகள்

தரமான பால் உற்பத்தியை அதிகரிக்கவும், பால் கறப்பதில் நிலவும் ஆள்பற்றாக்குறையை குறைக்கவும் ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் 150 பயனாளிகளுக்கு நவீன பால் கறக்கும் இயந்திரங்கள் 100 சதவீத மானியத்தில் வழங்கப்படும்.

பால் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினராக இல்லாத கால்நடை விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்தில் 3,450 கறவைப் பசுக்கள் வழங்கப்படும். மேலும், மாட்டுத் தீவனம் மற்றும் 4 ஆயிரம் கன்றுகளுக்கு கன்றுத் தீவனமும் வழங்கப்படும்.

குடும்ப அட்டைதாரர்களுக்கு உணவுப் பொருட்கள் தொகுப்பு

புதுச்சேரி மக்களின் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் அரிசியுடன் அத்தியாவசிய உணவுப் பொருட்களை தொகுப்பாக வழங்க அரசு உத்தேசித்துள்ளது.

இந்த தொகுப்பில் கோதுமை மாவு, துவரம் பருப்பு, கேழ்வரகு மாவு, சர்க்கரை, நெய் உள்ளிட்ட பொருட்கள் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பாண்லே நிறுவனத்தில் புதிய பால் பண்ணை

தேசிய பால்வள மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், பாண்லே நிறுவனத்தில் முழுமையான தானியங்கி வசதியுடன் தினமும் 2 லட்சம் லிட்டர் பாலை சுத்திகரித்து பேக்கிங் செய்யும் திறன் கொண்ட புதிய பால் பண்ணை அமைக்கவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.

மேலும், புதுச்சேரி அரசு கூட்டுறவு நிறுவனமான பாண்லே மூலம் கொள்முதல் செய்யப்படும் பாலின் விலை, பாலின் தரத்தின் அடிப்படையில் உயர்த்தப்படும். அதிகபட்சமாக ஊக்கத்தொகை உட்பட லிட்டருக்கு ரூ.41 வரை வழங்கப்படும்.

நியாய விலைக் கடைகளில் அத்தியாவசிய பொருட்கள்

புதுச்சேரி நியாய விலைக் கடைகள் மூலம் துவரம் பருப்பு, உளுந்து, சமையல் எண்ணெய், சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை அடக்க விலையில் விற்பனை செய்யவும் அரசு திட்டமிட்டுள்ளது.

மேலும், புதுச்சேரியின் முக்கியமான 10 இடங்களில் சிறிய அளவிலான அடக்க விலைக் கடைகள் அமைக்கப்படும் என்றும் பட்ஜெட்டில் முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

Source: Read Full Article