" ஒரு தலைபட்சமாக பெண்ணை காதலித்த இளைஞர் "

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே சின்னபுதுக்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி. இவரது உடன் பிறந்த சகோதரியான பாக்கியலெட்சுமியின் மகள் அபிநயாவை , வெள்ளைச் சாமியின் மூத்த மகன் முருகேசனுக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொடுத்திருந்தனர்.

வெள்ளைச்சாமியின் இளைய மகன் சிவபாலன் ( வயது 30 ) சட்டக் கல்லூரியில் 2 - ம் ஆண்டு படித்து வந்தார். அண்ணி அபிநயாவின் உடன் பிறந்த சகோதரியான தாரணியை , சிவபாலன் கடந்த 4 ஆண்டுகளாக ஒரு தலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த மே 19 - ம் தேதி சிவபாலன் , தாரணியை திருமணம் செய்து தருமாறு வற்புறுத்தி அவரது வீட்டில் தகராறு செய்ததாக தெரிகிறது.

" திருமணம் செய்ய கோரி டார்ச்சர் "

இது குறித்து தாரணியின் புகாரின் பேரில் மானாமதுரை மகளிர் போலீசார் வழக்குப் பதிந்து சிவபாலனை கைது செய்தனர். ஜாமீனில் வந்த நிலையில் மீண்டும் தாரணியை திருமணம் செய்து வைக்குமாறு கூறி தொடர்ந்து அவரது குடும்பத்தினரை டார்ச்சர் செய்து வந்துள்ளார்.

கடந்த வாரம் தாரணியின் வீட்டிற்கு சென்ற சிவபாலன் திருமணம் செய்து வைக்குமாறு தகராறில் ஈடுபட்டுள்ளார். இதற்கு தாரணியின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் அரிவாளுடன் தாரணியை தேடி அவரது வீட்டிற்கு வந்துள்ளார்.

தகராறு செய்தவரை தாரணியின் தந்தை முருகேசன் தடுத்துள்ளார். ஆத்திரமடைந்து அவரது கையில் வெட்டிய சிவபாலன் , தடுக்க வந்த தாரணியின் சகோதரர் அருண் ராஜாவையும் வெட்ட முயன்றுள்ளார். இதனால் முருகேசன், அருண்ராஜா ஆகியோர் சேர்ந்து அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் சிவபாலன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தகவலறிந்து மானாமதுரை போலீசார் விரைந்து சென்று சிவபாலன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இக்கொலை தொடர்பாக முருகேசன் ( வயது 50 ), அவரது மகன் அருண்ராஜா ( வயது 19 ) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். காயமடைந்த முருகேசனும், அருண் ராஜாவும் சிவகங்கை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Source: Read Full Article