தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நேற்று ஒரு சில இடங்களில் மழை பெய்துள்ள நிலையில், வடமேற்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 7.6 கிலோமீட்டர் உயரத்தில் காணப்படும் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், அடுத்த 12 மணி நேரத்தில் அதே பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைய அதிக வாய்ப்புள்ளது. இதன் காரணமாக தமிழக கடலோரப் பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்த தாழ்வு பாதை நிலவி வருகிறது.

மாவட்ட வாரியான மழை நிலவரம்

இந்த வளிமண்டல சுழற்சி காரணமாக, நீலகிரி மற்றும் தேனி மாவட்டங்களில் இன்று மற்றும் நாளை ஒரு சில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். மேலும் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகத்தின் மற்ற பகுதிகள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.

நாளை மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், கரூர், நாமக்கல், சேலம், ஈரோடு, கோவை, திருவண்ணாமலை, கடலூர், கள்ளக்குறிச்சி மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. அடுத்தடுத்த நாட்களில் மழை படிப்படியாக குறையும் என்றும் வானிலை மையம் தெரிவிடைத்துள்ளது.

காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட இன்றைய வானிலை நிலவரம்

இன்றைய நிலவரப்படி காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மேகமூட்டமான வானிலையே காணப்படும். பகல் நேரங்களில் அதிகபட்ச வெப்பநிலையாக 35°C முதல் 36°C வரை பதிவாகக்கூடும் என்றாலும், காற்றில் ஈரப்பதம் அதிகரித்து காணப்படுவதால் வெப்பத்தின் தாக்கம் சற்று அதிகமாக உணரப்படும்.

மாலை மற்றும் இரவு நேரங்களில் மாவட்டத்தின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. மணிக்கு 9 மைல் வேகத்தில் மேற்கு திசையில் இருந்து காற்று வீசக்கூடும். பெரிய அளவில் கனமழை எச்சரிக்கை எதுவும் இந்த இரு மாவட்டங்களுக்கும் விடுக்கப்படவில்லை என்றாலும், மிதமான சாரல் மற்றும் மேகமூட்டம் தொடரும்.

Source: Read Full Article