காரைக்குடி அருகே கோலாகலமாக நடைபெற்ற ஊத்தா மீன்பிடி திருவிழா!

சூரக்குடி கண்மாயில் ஊத்தா மீன்பிடி திருவிழா

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே ஆலங்குடி கிராமத்தில் உள்ள மேலமாகாணம் சூரக்குடி கண்மாயில் ஊத்தா மீன்பிடி திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. கடந்த 3 ஆண்டுகளாக கண்மாயில் மீன்பிடிக்காமல், மீன்கள் வளர்க்கப்பட்டு வந்த நிலையில், இந்த ஆண்டு ஊத்தா மீன்பிடி திருவிழா நடத்த அறிவிக்கப்பட்டது. இதையடுத்து சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், புதுக்கோட்டை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 500-க்கும் மேற்பட்டோர் கையால் முடையப்பட்ட ஊத்தா மீன்பிடிக் கூடைகளுடன் திருவிழாவில் பங்கேற்க வந்திருந்தனர். இந்த ஆண்டு நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டும் என கிராம மக்கள் கிராம தெய்வத்தை வழிபட்டனர். தொடர்ந்து, கண்மாய் பராமரிப்பு நிதிக்காக கட்டணம் வசூலிக்கப்பட்டு, பொதுமக்கள் மீன்பிடிக்க அனுமதி வழங்கப்பட்டது.

ஊத்தா மீன்பிடி திருவிழாவை ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.

அனுமதி கிடைத்ததும் மீன்பிடியாளர்கள் போட்டி போட்டுக்கொண்டு வேகமாக கண்மாய்க்குள் இறங்கி மீன்களைப் பிடிக்கத் தொடங்கினர். இதில் கட்லா, ரோகு, சி.சி. ஜிலேபி கெண்டை, விரால் உள்ளிட்ட வளர்ப்பு மற்றும் நாட்டு வகை மீன்கள் ஏராளமாகக் கிடைத்தன. ஊத்தா கூடைகளைப் பயன்படுத்தி ஆர்வத்துடன் மீன்களைப் பிடித்த பொதுமக்களுக்கு 5 கிலோ முதல் 10 கிலோ வரை மீன்கள் கிடைத்தன. இதனால் மகிழ்ச்சியடைந்த அவர்கள், பிடித்த மீன்களை சாக்குப் பைகளில் எடுத்துச் சென்றனர். தொடர்ந்து ஆலங்குடி, கூத்தகுடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த கிராம மக்களும் கண்மாயில் இறங்கி மீன்பிடி வலைகளைப் பயன்படுத்தி மீன்களைப் பிடித்துச் சென்றனர். மீன்பிடித் திருவிழாவைக் காண ஏராளமான கிராம மக்கள் கண்மாயின் கரையில் திரண்டு நின்று, பாரம்பரிய முறையில் நடைபெற்ற ஊத்தா மீன்பிடி திருவிழாவை ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.

Source: Read Full Article