காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆன்லைன் சைபர் குற்றங்களுக்குத் தங்களது வங்கி கணக்குகளை வழங்கி, பணப் பரிமாற்றத்திற்கு உதவியாக இருந்த 18 நபர்களை காஞ்சிபுரம் மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையினர் 'ஆப்பரேஷன் சைபர் விஜில்' என்ற சிறப்பு நடவடிக்கையின் மூலம் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.

விசாரணையும் தீவிர நடவடிக்கையும்

சமீபகாலமாக போலி முதலீட்டுத் திட்டங்கள், பகுதி நேர வேலைவாய்ப்பு மோசடி, டிஜிட்டல் அரெஸ்ட் (Digital Arrest) எனப்படும் இணையவழி போலி கைது மிரட்டல்கள் மற்றும் போலீஸ் அல்லது அரசு அதிகாரிகள் போல ஆள்மாறாட்டம் செய்து பேசிப் பணம் பறித்தல் போன்ற பல்வேறு நுட்பமான வழிகளில் இணையவழி சைபர் மோசடிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இத்தகைய குற்றங்களைத் தடுக்கும் நோக்கில், காஞ்சிபுரம் மாவட்ட சைபர் கிரைம் போலீசார் தீவிரக் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

ஆப்பரேஷன் சைபர் விஜில் நோக்கம்

இணையம் வழியாகப் பொதுமக்களை ஏமாற்றிப் பணம் பறிக்கும் முக்கியக் குற்றவாளிகளைக் கண்டறிவதுடன், அவர்கள் மோசடி செய்த பணத்தைப் பெறுவதற்கும் கை மாற்றுவதற்கும் பயன்படுத்தப்படும் வங்கி கணக்குகள் (Mule Accounts), மொபைல் போன் எண்கள் மற்றும் சந்தேகத்திற்கிடமான பணப் பரிமாற்றங்களை விரிவாக ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுப்பதே இந்த 'ஆப்பரேஷன் சைபர் விஜில்' சிறப்பு நடவடிக்கையின் முதன்மை நோக்கமாகும்.

குற்றவாளிகள் வலைவீச்சு

இந்தச் சிறப்பு சோதனையின் போது, ஆன்லைன் மோசடிகளில் நேரடியாக ஈடுபடுபவர்கள் மட்டுமின்றி, கமிஷன் தொகையைப் பெற்றுக்கொண்டு தங்களது வங்கி கணக்குகளை மோசடி கும்பலுக்குப் பயன்படுத்தக் கொடுத்த நபர்களும் தீவிர கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டனர். அதன் அடிப்படையில் காஞ்சிபுரம் சைபர் கிரைம் காவல்துறையினர் கடந்த இரண்டு நாட்களாக நடத்திய தீவிர விசாரணையில், சைபர் குற்றங்களுடன் நேரடியாகத் தொடர்புடைய 18 பேரை அடையாளம் கண்டு கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் உத்தரமேரூரைச் சேர்ந்த லோகநாதன், லோகேஷ், மகேந்திரன், கிருஷ்ணமூர்த்தி, வாலாஜாபாத்தைச் சேர்ந்த தரணிகுமார், அபிகண்ணன், யுவராஜ் மற்றும் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த விக்னேஷ்குமார் உள்ளிட்ட 18 நபர்கள் அடங்குவர். கைது செய்யப்பட்ட அனைவரிடமும் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளைத் தீவிரப்படுத்தி வருகின்றனர்.

Source: Read Full Article