தலைமைச்செயலகத்தில் முதலமைச்சர் அலுவலகம்

தமிழகத்தில் முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றுள்ளார். இதனையடுத்து நாள்தோறும் பல்வேறு பரபரப்புகளும், அதிரடிகளும் அரங்கேறி வரும் நிலையில், முதலமைச்சர் அலுவலகம் மாற்றப்பட இருப்பது தான் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில், 60 ஆண்டுகால வரலாற்றை கொண்ட முதலமைச்சர் அலுவலகம். கோட்டையின் பிரதான பாரம்பரியமான கட்டிடத்தின் முதல் தளத்திலிருந்தே இதற்கு முன் இருந்த முதலமைச்சர்கள் ஆட்சிப் பொறுப்புகளை கவனித்து வந்துள்ளனர். அந்த வகையில், காமராஜர், அறிஞர் அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி, ஸ்டாலின் என முதலமைச்சர்கள் பணியாற்ற அலுவலகம் தற்போது வேறு இடத்திற்கு மாற்றப்படவுள்ளது.

புதிய தலைமைச்செயலகம்

அந்த வகையில் தற்போது உள்ள முதலமைச்சர் அறையில் இடவசதி குறைவாக இருப்பதாக பல ஆண்டுகளாக புகார் தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில், புதிய தலைமைச்செயலகத்தை கடந்த 2010 ஆம் ஆண்டு கருணாநிதி ஆட்சி காலத்தில் ஓமந்தூரார் தோட்டத்தில் அமைக்கப்பட்டது. ஒரு வருட காலம் மட்டுமே அங்கு திமுக அரசு ஆட்சி செய்து வந்த நிலையில், அடுத்தாக வந்த அதிமுக ஆட்சியில் ஓமந்தூரர் தோட்டத்தில் அமைக்கப்பட்ட தலைமைச்செயலகத்தை மருத்துவமனையாக மாற்றப்பட்டது. மீண்டும் செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கே தலைமைசெயகம் இடம்பெயர்ந்தது. இந்நிலையில், தற்போது தமிழகத்தில் புதிதாக பதவியேற்றுள்ள தவெக அரசு, புதிதாக தலைமைச்செயலகம் கட்ட திட்டம் போட்டது.

10 வது மாடியில் சிஎம் விஜய் அலுவலகம்

இதற்காக திருமழிசை, இசிஆர், கோயம்பேடு என 3 இடங்களை தேர்வு செய்துள்ளது. இதற்கான ஆலோசனைகள் நடைபெற்று வரும் நிலையில், முதலமைச்சர் விஜய் தனது அலுவலகத்தை மாற்ற அதிரடியாக முடிவெடுத்துள்ளார். அந்த வகையில், தலைமைசெயலக வளாகத்தில் உள்ள வேறு கட்டிடம், அதாவது 10 அடுக்கு மாடிகளைக் கொண்ட நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது தளத்திற்கு முதலமைச்சர் விஜய்யின் அறை மாற்றப்படுகிறது. இதற்கான பணிகளை பொதுப்பணித்துறை மேற்கொண்டு வருகிறது.

புதிய முதல்வர் அலுவலகம் அமைக்க ரூ.11 கோடி ஒதுக்கீடு

புதிய முதல்வர் அலுவலகம் அமைப்பதற்காக ரூ.11 கோடி உடனடியாக ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், 10-வது தளத்தை சுத்தம் செய்யும் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கியுள்ளன. இதற்காக சுமார் ரூ.7.5 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிக்கான ஒப்பந்ததாரர்கள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்று பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். புதிய அலுவலகத்தில் முதல்வரின் அலுவலகத்துடன், முதல்வரின் செயலாளர்களின் அலுவலகங்கள், கூட்ட அரங்குகள், காத்திருப்பு அறைகள் மற்றும் உணவக வசதி ஆகியவை அமைக்கப்பட உள்ளன.

இந்த பணிகள் ஆரம்பத்தில் ஆறு மாதங்கள் தேவைப்படும் என மதிப்பிட்ட நிலையில், இந்தப் பணிகளை மூன்று மாதங்களுக்குள் முடிக்க முதல்வர் அலுவலகம் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதே போல ஒவ்வொரு தலைமைச்செயலகத்தில் உள்ள ஒவ்வொரு அமைச்சர்களின் அறையும் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், ரூ.15 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

Source: Read Full Article