இந்தியாவில் தினமும் லட்சக்கணக்கான மக்கள் ரயில் பயணம் செய்கின்றனர். ரயில்களில் டிக்கெட் செலவு மிகவும் குறைவு. பயணிகளுக்காக பல வசதிகளும் ரயில்களில் இருக்கின்றன. ரயில்களில் பயணிகளுக்கு சில பிரச்சினைகளும் இருக்கின்றன. டிக்கெட் பரிசோதகர்களிடம் வாக்குவாதத்திலும் பல பயணிகள் ஈடுபடுகின்றனர். இதுபோன்ற பிரச்சினைகளுக்கு தீர்வுகாண இந்திய ரயில்வே ஒரு புதிய திட்டத்தைக் கொண்டுவந்துள்ளது.

ரயில்களில் டிக்கெட் பரிசோதனை செய்யும் போது பயணிகள் மற்றும் TTE ( டிக்கெட் பரிசோதகர் ) இடையேயான உரையாடல்கள் மற்றும் செயல்பாடுகள் அனைத்தையும் பதிவு செய்ய, TTE-க்களின் சீருடையில் பிரத்யேக பாடி கேமராக்கள் பொருத்தும் திட்டம் அமலுக்கு வருகிறது. இந்த கேமராக்கள் ஆடியோ மற்றும் வீடியோ வடிவில் நிகழ்வுகளைப் பதிவு செய்யும். இதன் மூலம் டிக்கெட் பரிசோதனை முறை மிகவும் நம்பகமானதாகவும், நவீனமாகவும் மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் பதிவாகும் அனைத்து தரவுகளும் ரயில்வேயின் பாதுகாப்பான மையக் கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பப்படும். இதனால் முறைகேடுகள் முற்றிலும் தடுக்கப்படும்.

வட மத்திய ரயில்வே (NCR) மண்டலம், பிரயாக்ராஜ் கோட்டத்தில் இத்திட்டத்தை முன்னோட்டமாகத் தொடங்கியுள்ளது. பொது மேலாளரின் உத்தரவின்பேரில், முதற்கட்டமாக பிரயாக்ராஜ் எக்ஸ்பிரஸ் மற்றும் சிரமிக் சக்தி எக்ஸ்பிரஸ் ஆகிய இரண்டு முக்கிய ரயில்களில் இத்திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. முதல் கட்டமாக பரிசோதனை ஊழியர்களுக்கு 30 கேமராக்கள் வழங்கப்பட்டு, அவற்றை இயக்கும் முறைகள் குறித்த சிறப்புப் பயிற்சிகளும் அளிக்கப்பட்டு வருகின்றன. இந்த முன்னோடித் திட்டம் வெற்றி பெறும் பட்சத்தில், நாடு முழுவதும் உள்ள பிற ரயில்களுக்கும் படிப்படியாக விரிவுபடுத்தப்பட உள்ளது.

சீருடையில் எளிதாகப் பொருத்தும் வகையில் சிறியதாகவும், குறைந்த எடைக் கொண்டதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. தெளிவான ஆடியோ மற்றும் உயர் வரையறை (HD) வீடியோவைப் பதிவு செய்யும் திறன் கொண்டது. இரவு நேரப் பயணங்களின் போதும் துல்லியமாகப் பதிவு செய்யக்கூடிய 'நைட் விஷன்' வசதி இதில் இருக்கிறது. நீண்ட தூரப் பயணங்களுக்குச் சவால்கள் இல்லாத வகையில் வலுவான பேட்டரி பேக்கப் வழங்கப்பட்டுள்ளது. பதிவான வீடியோ அல்லது ஆடியோவை யாராலும் அழிக்கவோ, மாற்றவோ அல்லது திருத்தவோ முடியாத அளவுக்குப் பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்துள்ளது.

டிக்கெட் பரிசோதனையின் போது TTE மற்றும் பயணிகளுக்கு இடையே தேவையில்லாத வாக்குவாதங்களோ அல்லது தவறான குற்றச்சாட்டுகளோ எழுந்தால், கேமரா பதிவுகள் மூலம் உண்மை கண்டறியப்பட்டு நியாயமான முடிவு எடுக்கப்படும். நேர்மையாகப் பணியாற்றும் ரயில்வே ஊழியர்கள் மீது சுமத்தப்படும் வீண் புகார்களில் இருந்து இந்த வீடியோ சாட்சியங்கள் அவர்களைப் பாதுகாக்கும். ரயிலில் சந்தேகத்திற்கிடமான நபர்களோ அல்லது குற்றச் செயல்களோ தென்பட்டால், ரயில்வே பாதுகாப்புப் படைக்கு (RPF) இது பலமான டிஜிட்டல் ஆதாரமாக அமையும்.

அதேபோல் TTE-க்கள் பயணிகளிடம் சட்டவிரோதமாகப் பணம் வசூலிப்பது அல்லது பயணிகள் TTE-க்கு லஞ்சம் கொடுக்க முயற்சிப்பது போன்ற முறைகேடுகளுக்கு இது முற்றுப்புள்ளி வைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. ரயில்வே துறையில் கொண்டுவரப்பட்டுள்ள இந்த டிஜிட்டல் மாற்றம் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதோடு, இந்திய ரயில்வேயின் ஒட்டுமொத்த நிர்வாகத்தையும் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Source: Read Full Article