நாடு முழுவதும் ஏழை எளிய மக்களுக்கு உதவிடும் வகையில் இலவசமாகவும் மானிய விலையிலும் உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.அந்த வகையில் தமிழகம் முழுவதும் 34 ஆயிரத்து 916 நியாய விலை கடைகளில் உள்ள 2 கோடியே 28 லட்சத்து 12,942 ரேஷன் கார்டுகளுக்கு உணவு பொருட்கள் வழங்கப்படுகிறது. குறிப்பாக அரிசி, பச்சரிசி, சக்கரை, கோதுமை, பாமாயில் உள்ளிட்ட உணவுப்பொருட்கள் வழங்கப்படுகிறது. மேலும் ரேஷன் அட்டை உணவுப்பொருட்கள் வாங்குவதற்கு மட்டுமல்லாமல் அடையாள ஆவணமாகவும் உள்ளது. குறிப்பாக மழை வெள்ளம் பேரிடர் காலத்தில் ரேஷன் அட்டை இருந்தால் மட்டுமே நிவாரண உதவியானது வழங்கப்படுகிறது.

மேலும் பொங்கல் பரிசு தொகை பெறுவதற்கும் ரேஷன் அட்டை முக்கிய ஆவணமாக பார்க்கப்படுகிறது. இதே போல மகளிர் உரிமை தொகையை பெறுவதற்கும் ரேஷன் அட்டை கட்டாய தேவையாக உள்ளது. எனவே மகளிர் உரிமை தொகை பெறுவதற்காகவே பல லட்சம் பேர் ரேஷன் அட்டை கேட்டு விண்ணப்பித்தனர். இதில் உரிய ஆவணங்கள் இருப்பவர்களுக்கு ரேஷன் அட்டையானது வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் சட்டமன்ற தேர்தல் காரணமாக கடந்த 6 மாதங்களுக்கு மேலாக புதிய ரேஷன் அட்டையானது அச்சிடும் பணியானது நிறுப்பட்டது. இந்த நிலையில் தற்போது புதிதாக தவெக அரசு பதவியேற்ற நிலையில், புதிய ரேஷன் கார்டு கேட்டு சுமார் 4 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்திருந்தனர்.

எனவே 4 லட்சம் விண்ணப்பங்கள் சரிபார்க்கும் பணியானது நடைபெற்று வரும் நிலையில், இதில் ஆவணங்கள் சரியாக உள்ள சுமார் 45 ஆயிரம் பேருக்கு இன்று முதல் புதிய ரேஷன் அட்டையானது வழங்கப்படவுள்ளது. அந்த வகையில் முதலமைச்சர் விஜய் புதிய ரேஷன் கார்டு வழங்கும் திட்டத்தை இன்று தொடங்கிவைக்கவுள்ளார். வரும் நாட்களில் 45 ஆயிரம் பேருக்கு வீடு தேடி ரேஷன் கார்டு வழங்கப்படவுள்ளது. மேலும் முதலமைச்சர் விஜய் இன்று மதியம் பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை திறந்து வைக்கிறார். அடுத்தாக 45 ஆயிரம் புதிய குடும்ப அட்டை (ரேஷன் கார்டு) வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்கிறார். இதனை தொடர்ந்து மாநகரப் போக்குவரத்துக் கழகம் (MTC) பேருந்து பணிமனையை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து பனிமனையில் தேவைப்படும் வசதிகள் தொடர்பாக கேட்டறியவுள்ளார்.

Source: Read Full Article