புதுச்சேரி : முதலமைச்சர் விஜயின் கடைசி திரைப்படமான ‘ஜனநாயகன்’ Jananayagan நாளை (23.07.2026) புதுச்சேரியில் 13 திரையரங்குகளில் வெளியாகிறது. இதில் திருக்கனூர் சுதா, வில்லியனூர் அசோக், ஜீவா திரையரங்குகளில் காலை 7 மணிக்கு சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் 13 திரையரங்குகளில் வெளியீடு & சிறப்பு காட்சிகள்

தமிழ்நாட்டைப் போலவே புதுச்சேரியிலும் முதலமைச்சர் விஜய்க்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இதனை முன்னிட்டு, புதுச்சேரியில் மட்டும் சுமார் 13 திரையரங்குகளில் இத்திரைப்படம் நாளை திரையிடப்படுகிறது.

காலை 7 மணி சிறப்பு காட்சிகள்:

ரசிகர்கள் தங்களது தலைவனின் கடைசித் திரைப்படத்தைக் கொண்டாட ஏதுவாக, புதுச்சேரியின் முக்கிய திரையரங்குகளுக்கு அரசு சிறப்பு காட்சி அனுமதியை வழங்கியுள்ளது.

திருக்கனூர் சுதா திரையரங்கம்

வில்லியனூர் அசோக் திரையரங்கம்

ஜீவா திரையரங்கம்

ராக்கெட் வேகத்தில் முன்பதிவு:

திரைப்படம் வெளியாக இன்னும் சில மணி நேரங்களே உள்ள நிலையில், இணையத்திலும் திரையரங்கின் நேரடி மையங்களிலும் டிக்கெட் முன்பதிவுகள் ராக்கெட் வேகத்தில் விற்றுத் தீர்ந்து வருகின்றன.

'ஜனநாயகன்'

விஜய் ‘ஜனநாயகன்’ படத்தை தேர்ந்தெடுத்ததற்குக் காரணம் பெண் முன்னேற்றத்தின் மீதான அவரது தீவிர ஆர்வமே என இயக்குனர் எச் வினோத் கூறியுள்ளார். தமிழக முதலமைச்சர் விஜய் நடிப்பில், இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் உருவாகிய ‘ஜனநாயகன்’ திரைப்படம், இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் தமிழ் திரைப்படங்களில் ஒன்றாகும். இப்படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜு, கௌதம் வாசுதேவ் மேனன், பிரகாஷ் ராஜ் மற்றும் நரேன் போன்ற பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்,

தணிக்கைப் பிரச்னைகளிலிருந்து மீண்டு நாளை 23 ஆம் தேதி திரைக்கு வருகிறது. விஜய்யின் இறுதியான படமென்பதால் உலகளவில் 3,500 திரைகளுக்கு மேல் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில், சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள கேவிஎன் அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இயக்குநர் எச்.வினோத் பேட்டி அளித்துள்ளார்.

இயக்குநர் எச். வினோத்,“ பல தடைகளைத் தாண்டி வெளியாகிறது ‘ஜனநாயகன்’ திரைப்படம். விஜய் அவர்களுக்கு தனது கடைசி படம் இப்படி இருக்க வேண்டும் என்று சில எண்ணங்கள் இருந்திருக்கலாம். பல கதைகளை கேட்ட பிறகு விஜய் இந்த படத்தைத் தேர்ந்தெடுத்ததற்குக் காரணம் பெண் முன்னேற்றத்தின் மீதான அவரது தீவிர ஆர்வமே. படம் இணையத்தில் கசிந்தாலும் முன்பதிவு நன்றாக இருக்கிறது. படத்துக்கு ‘ஏ’ சான்றிதழ் கிடைத்ததில் வருத்தம். ‘ஜனநாயகன்’ வெறுப்புக்கு எதிரான படம்.. ஒற்றுமையை பேசும் படம்.. வெறுப்புக்கு எதிரான படத்தின் மீது வெறுப்பை திணிப்பது சரியில்லை.

‘ஜனநாயகன்’ படம் லீக் ஆனபோது எதிர்காலம் என்னவென்று தெரியாமல் இரண்டு மூன்று முறை அழுதேன்.. எனினும், தயாரிப்பாளர் கே.வி.என் மற்றும் நடிகர் விஜய் எனக்கு மிகுந்த உறுதுணையாக இருந்தார்கள். படம் வெளியீட்டுக்கு முன்பே லீக் ஆன போதிலும் ரசிகர்கள் தியேட்டருக்கு வந்து ஆதரவு அளிப்பது பாராட்டுக்குரியது.. விஜய் மீதான மரியாதையாலும் நேர்மையாலும் தியேட்டரைத் தேடிவரும் மக்களுக்கும் ரசிகர்களுக்கும் பெரிய சல்யூட். ” என கூறியுள்ளார்.

கரூர் சம்பவம் தொடர்பாக படத்தில் காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக சொல்லப்படுகிறதே என்ற கேள்விக்கு “ஜனநாயகன் படத்தில் கரூர் சம்பவம் குறித்த காட்சிகள் உள்ளதாகக் கூறப்படுவதில் உண்மையில்லை.. அது வதந்தி.. இதுபோன்ற பொய் செய்திகளை உருவாக்குபவர்களின் செயல் அறமற்றது” என்றார்

Source: Read Full Article