டெல்லியில் இன்று காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 53-வது கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தின்போது, தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தருவதற்கு வாய்ப்பில்லை என கர்நாடகா கூறியுள்ளது.

கர்நாடக அதிகாரிகள் கூறியது என்ன.?

டெல்லியில் இன்று நடைபெற்ற இந்த கூட்டத்தில், தமிழ்நாடு தரப்பில் இருந்து நீர்வளத்துறை முதன்மை செயலாளர் சுப்ரியா சாகு, காவிரி தொழில் நுட்ப குழுத்தலைவர் சுப்ரமணியன் ஆகியோர் பங்கேற்ற நிலையில், கர்நாடக அதிகாரிகள் நேரில் பங்கேற்வில்லை. அதற்கு மாறாக, கர்நாடக அரசு தரப்பிலிருந்து, காணொலி வாயிலாக கூடுதல் செயலாளர் கவுரவ் குப்தா பங்கேற்றார்.

இந்நிலையில், கூட்டத்தின் போது, உச்சநீதிமன்ற உத்தரவின்படி, ஜூன் மற்றும் ஜூலை மாதங்களுக்கு வழங்க வேண்டிய நிலவை நீரை உடனடியாக திறந்துவிட வேண்டும் என தமிழ்நாடு சார்பாக பங்கேற்ற அதிகாரிகள் வலியுறுத்தினர்.

ஆனால், தமிழ்நாட்டிற்கு தற்போது தண்ணீர் திறந்துவிட முடியாது என கர்நாடகா தரப்பில் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டது.

கர்நாடகா கூறிய காரணம் என்ன.?

மேலும், கர்நாடகா தரப்பில், காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் போதிய மழைப்பொழிவு இல்லாததால், அணைகளுக்கு நீர்வரத்து மிகவும் குறைவாக உள்ளதாக தெரிவிக்கப்படடது.

அதோடு, தற்போது இருக்கும் தண்ணீர், தங்களின் குடிநீர் தேவைக்கு மட்டுமே போதுமானதாக இருப்பதால், பாசனத்திற்காக தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தர வாய்ப்புகள் இல்லை என கர்நாடகா தரப்பில் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலவை நீரின் அளவு அதிகரிப்பு

தமிழகத்திற்கு ஆண்டுதோறும் 177.25 டிஎம்சி காவிரி நீரை கர்நாடகா வழங்க வேண்டும். அதில், மாதம் தோறும் வழங்க வேண்டிய நீரின் அளவுப்படி, ஜூன் மாதம் 9.19 டிஎம்சி நீரை வழங்கியிருக்க வேண்டும். ஆனால், 2.19 டிஎம்சி நீரை மட்டுமே கர்நாடகா அரசு விடுவித்துள்ளது.

மேலும், நடப்பு ஜூலை மாதம், 31.2 டிஎம்சி நீரை வழங்க வேண்டும். அதில், 19-ம் தேதி வரை 19.4 டிஎம்சி நீரை வழங்கியிருக்க வேண்டும். ஆனால், 0.52 டிஎம்சி நீர் மட்டுமே தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட்டுள்ளது.

இதனால், கர்நாடகா வழங்க வேண்டிய நிலுவை நீரின் அளவு, 24.8 டிஎம்சி-யாக அதிகரித்துள்ளது. நிலுவை நீரின் அளவு கூடிக்கொண்டே வருவதால், தமிழ்நாட்டில் பாசனம், குடிநீர் தட்டுப்பாடு அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

காவிரி நதிநீர் பங்கீட்டை முறைப்படி நிர்வகிப்பதற்காக, உச்சநீதிமன்ற உத்தரவின்படி காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி ஒழுங்காற்றுக்குழு அமைக்கப்பட்டன. இந்த இரு அமைப்புகளும் அவ்வப்போது கூட்டங்களை நடத்தி, காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக ஆலோசித்து வருகின்றன. இதுவரை 52 கூட்டங்கள் நடைபெற்ற நிலையில், 53-வது காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டம் புது டெல்லியில் இன்று நடைபெற்றது. ஆணைய தலைவர் எஸ்.கே. ஹல்தார் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றது. முன்னதாக, ஜூன் 23-ம் தேதி கடைசியாக காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் கூடியது.

Source: Read Full Article