தஞ்சாவூர்: டெல்டா மாவட்டங்களின் உயிர்நாடியாக விளங்கும் காவிரி ஆறு முற்றிலும் தண்ணீரின்றி வறண்டு, பாலைவனம் போல் காட்சியளிப்பது விவசாயிகளிடையேயும் பொதுமக்களிடையேயும் பெரும் சோகத்தையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.

ஆண்டுதோறும் ஆடி மாதம் பிறந்துவிட்டாலே டெல்டா மாவட்டங்களில் விவசாயப் பணிகளும், ஆன்மீகக் கொண்டாட்டங்களும் கலைகட்டத் தொடங்கிவிடும். குறிப்பாக ஆடிப் பெருக்கு விழாவின்போது காவிரி ஆற்றில் பொங்கி வரும் புது தண்ணீரை கண்டு மக்கள் மகிழ்வது வழக்கம். ஆனால், நடப்பு ஆண்டில் ஆடி மாதம் நெருங்கி வரும் வேளையிலும், காவிரி ஆற்றில் ஒரு சொட்டுத் தண்ணீர் கூட இல்லாமல், வெறும் மணல் பரப்பாகக் காட்சியளிப்பது ஒட்டுமொத்த டெல்டா மக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பருவமழை ஏமாற்றம் மற்றும் தண்ணீர் பற்றாக்குறை

மேட்டூர் அணையில் போதிய நீர் இருப்பு இல்லாததாலும், கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்குத் தர வேண்டிய உரிய தண்ணீர் தடையின்றி வராததாலும், காவிரி ஆற்றுப் படுகைகள் அனைத்தும் வறண்டு போயுள்ளன. ஆங்காங்கே சிறு குட்டைகளில் தேங்கியுள்ள சொற்ப தண்ணீரைத் தவிர, ஆறு முழுவதும் வறட்சியின் பிடியில் சிக்கியுள்ளது.

விவசாயிகள் கவலை... எதிர்காலம் கேள்விக்குறி

காவிரி நீரை மட்டுமே நம்பி குறுவை மற்றும் சம்பா சாகுபடி பணிகளை மேற்கொள்ளும் டெல்டா பகுதி விவசாயிகள், தற்போது ஆற்றின் நிலையைப் பார்த்து என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்துப் போய் நிற்கின்றனர். "ஆடிப் பட்டத்தைத் தேடி விதைக்க வேண்டிய இந்த முக்கிய காலகட்டத்தில், ஆறு இப்படி வறண்டு கிடப்பது எங்களின் வாழ்வாதாரத்தையே கேள்விக்குறியாக்கியுள்ளது. நிலத்தடி நீர்மட்டமும் வேகமாகத் தாழ்ந்து வருவதால், ஆழ்துளைக் கிணறுகளை நம்பியும் விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது" என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

குடிநீர் தட்டுப்பாடு அபாயம்- அச்சத்தில் கிராம மக்கள்

விவசாயம் மட்டுமின்றி, காவிரி ஆற்றை ஒட்டியுள்ள கூட்டுக்குடிநீர் திட்டங்களும் இதனால் கடுமையாகப் பாதிக்கப்படும் அபாயம் உருவாகியுள்ளது. ஆறு வறண்டு போனதால், சுற்றியுள்ள கிராமங்கள் மற்றும் நகரங்களில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து, கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் நிலவுகிறது.

மாநில அரசின் தலையீடு தேவை... கண்ணீருடன் வலியுறுத்தும் விவசாயிகள்

வறண்டு கிடக்கும் காவிரியைப் பார்த்து அனைத்துத் தரப்பு மக்களும் வேதனை அடைந்துள்ள நிலையில், தமிழக அரசு உடனடியாகத் தலையிட்டு, கர்நாடக அரசிடமிருந்து தமிழகத்திற்குத் தர வேண்டிய தண்ணீரைப் பெற்றுத் தர சட்டப்பூர்வமான மற்றும் ராஜதந்திர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும், மேட்டூர் அணையில் இருந்து விவசாயத்திற்குத் தேவையான தண்ணீரைத் திறந்துவிட உரிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்றும் டெல்டா பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உயிர்த்துடிப்பான காவிரி ஆறு மீண்டும் எப்போது புது வெள்ளத்துடன் பாய்ந்தோடும், தங்களின் வாழ்வாதாரம் எப்போது செழிக்கும் என்ற எதிர்பார்ப்புடன் ஒட்டுமொத்த டெல்டாவும் காத்துக் கிடக்கிறது. காவிரி நீர் என்பது தமிழக மக்களின் உயிரோடும், உணர்வோடும் கலந்து விட்ட ஒன்றாகும். பெற்ற தாயிற்கு சமமாக காவிரி தாயை கொண்டாடும் தமிழக மக்களுக்கு வறண்ட பாலைவனமாக அகண்ட காவிரி காட்சியளிப்பது நெஞ்சத்தில் குத்து வேல் கொண்டு பாய்ச்சியது போல் உள்ளது என்றால் மிகையில்லை.

ஆட்சியாளர்களின் அலட்சியம்... விவசாயிகள் கடும் அதிர்ச்சி

கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் நான்கு ஆண்டுகள் சரியான காலகட்டத்தில் அதாவது ஜூலை 12ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டது. ஒரு ஆண்டு மட்டும் சற்று காலதாமதமாக திறக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் தற்போது தாவீகா ஆட்சிக்காலத்தில் மேட்டூர் அணை திறப்பது குறித்து எவ்வித அறிவிப்பையும் இல்லை என்பதால் விவசாயிகள் மத்தியில் கடும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது

Source: Read Full Article