இந்திய அணி தற்போது இங்கிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 தொடரை 2-0 என்ற கணக்கில் இழந்த நிலையில், தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரையும் தோல்வியுடனே தொடங்கியுள்ளது.

தொடர் தோல்வியில் இந்தியா:

டி20 உலக சாம்பியன் என்ற அந்தஸ்துடன் சென்ற இந்திய அணிக்கு அயர்லாந்து அணி மிகப்பெரிய பாடம் எடுத்தது. தற்போது இங்கிலாந்து நாட்டிலும் இந்திய அணி தடுமாறி வருகிறது. இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில், இந்திய அணி 2வது போட்டியில் தோற்றது.

வெளிநாட்டு மண்ணில் இந்திய அணிக்கு சிறிது தடுமாற்றம் இருந்தாலும் தொடர்ச்சியாக 4 போட்டிகளில் 3 தோல்வியுடன் ஒரு வெற்றிகூட இல்லாமல் இந்திய அணி இருப்பது ரசிகர்கள் மத்தியில் வேதனையை உண்டாக்கியுள்ளது. ஏனென்றால் ஐபிஎல் மூலமாக டி20 கிரிக்கெட் திறமையை இந்திய வீரர்கள் வளர்த்துக்கொண்டுள்ள நிலையில், சர்வதேச அரங்கில் தடுமாறுவதே அதற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

கம்பீருக்கு அழுத்தம்:

கவுதம் கம்பீர் பயிற்சியாளராக பொறுப்பேற்ற பிறகு இந்திய அணி டி20 சாம்பியன் பட்டம் உள்ளிட்ட பல்வேறு பட்டங்களை பெற்றாலும் ஏராளமான மோசமான சாதனைகளையும் படைத்துள்ளது. டெஸ்ட் தொடரில் இந்திய அணி பல மோசமான தோல்விகளை அடைந்து வரும் சூழலில், அயர்லாந்து தொடரில் அடைந்த தோல்வியும் கம்பீரின் பயிற்சி மீது கடுமையான விமர்சனங்களை உண்டாக்கியது.

ஸ்ரேயாஸ் ஐயர், திலக் வர்மா, அபிஷேக் சர்மா, சாம்சன், சூர்யவன்ஷி என பெரிய பட்டாளமே இந்திய அணியில் இருந்தும் இந்திய அணி தடுமாறி வருகிறது. இதனால், இந்திய அணி விரைவில் மீண்டுவர வேண்டியது அவசியம் ஆகிறது. இங்கிலாந்து தொடரில் எஞ்சிய போட்டிகளில் சிறப்பாக ஆடி வெற்றி பெற்றால் மட்டுமே இந்திய அணி விமர்சனங்களில் இருந்து மீள இயலும். அணி தேர்வு, ப்ளேயிங் லெவனில் உள்ள சிக்கலையும் இந்திய அணி சமாளிக்க வேண்டிய அவசியமாக உள்ளது.

இந்திய மண் மட்டுமின்றி வெளிநாட்டு மண்ணிலும் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தும் அளவிற்கு இந்திய அணியின் ஆட்டத்திறனை மீண்டும் அதிகரிக்கும் வகையில் கம்பீரின் பயற்சி அமைய வேண்டும் என்றும் ரசிகர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Source: Read Full Article