Cooking Oil: சமையல் எண்ணெயை இனி 200 மில்லி தொடங்கி 20 லிட்டர் வரையிலான, 9 நிலையான பேக்குகளில் மட்டுமே விற்பனை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

எண்ணெய் விற்பனைக்கு கட்டுப்பாடுகள்:

மத்திய அரசு வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பின்படி, சமையல் எண்ணெய் பேக்கேஜிங் விதிமுறைகளில் மிகப்பெரிய மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. அதாவது, இனி நாட்டில் விற்பனை செய்யப்படும் சமையல் எண்ணெய்கள் ஒன்பது நிலையான கொள்ளளவில் மட்டுமே பேக் செய்யபட வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பயனர்கள் வெவ்வேறு ப்ராண்டுகள் மற்றும் தயாரிப்புகளின் விலைகளை ஒப்பிட்டுப் பார்ப்பதை எளிதாக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நுகர்வோர் விவகாரங்கள் துறை, சட்ட அளவியல் கட்டமைப்பின் கீழ் உள்ள நிலையான செயல்பாட்டு நடைமுறையைத் திருத்தியுள்ளது. இந்தப் புதிய விதிமுறைகள், உள்நாட்டில் தயாரிக்கப்படும் மற்றும் இறக்குமதி செய்யப்படும் சமையல் எண்ணெய் ஆகிய இரண்டிற்கும் பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

9 நிலையான பேக்கேஜ் அளவுகள்:

திருத்தப்பட்ட விதிகளின்படி, சமையல் எண்ணெய்கள் பின்வரும் பேக்கேஜ் அளவுகளில் மட்டுமே இனி விற்பனை செய்யப்படும். அதாவது 200 மிலி, 500 மிலி, 1 லிட்டர், 2 லிட்டர், 3 லிட்டர், 4 லிட்டர், 5 லிட்டர், 15 லிட்டர் மற்றும் 20 லிட்டர். இந்த விதிமுறைகள், பாமாயில், சோயாபீன் எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய், கடுகு எண்ணெய், நிலக்கடலை எண்ணெய், எள் எண்ணெய், அரிசித் தவிடு எண்ணெய், பருத்தி விதை எண்ணெய் மற்றும் மக்காச்சோள எண்ணெய் உள்ளிட்ட பலவகையான சமையல் எண்ணெய்களுக்கும் பொருந்தும். மேலும், உற்பத்தியாளர்கள் எண்ணெயின் கனஅளவுடன் அதன் எடையையும் பேக்கேஜிங்கில் குறிப்பிட வேண்டும். உதாரணமாக, லிட்டரில் விற்கப்படும் பொருட்கள், அவற்றின் சமமான எடையை கிலோகிராமிலும் குறிப்பிட வேண்டும்.

சிறிய பேக்கட்களுக்கு விலக்கு

200 மில்லிக்கும் குறைவான சமையல் எண்ணெய் பொட்டலங்களுக்கும், சில சிறிய வகை சமையல் எண்ணெய்களுக்கும் புதிய பேக்கேஜ் விதிமுறைகளிலிருந்து அரசு விலக்கு அளித்துள்ளது. சந்தையில் மலிவு விலையில் சிறிய பொட்டலங்கள் தொடர்ந்து கிடைப்பதை உறுதி செய்வதே இந்த விலக்கின் நோக்கம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மூன்று மாதங்கள் அவகாசம்

திருத்தப்பட்ட விதிமுறைகளுக்கு ஏற்ப நடவடிக்கைகளை மேற்கொள்ள உற்பத்தியாளர்கள், பேக்கேஜ் செய்பவர்கள் மற்றும் இறக்குமதியாளர்களுக்கு மூன்று மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும், புதிய தரநிலைகளை முன்கூட்டியே பின்பற்ற விரும்பும் நிறுவனங்கள் உடனடியாக அதனை பின்பற்றலாம். இந்தியாவின் சமையல் எண்ணெய் துறையில் கிட்டத்தட்ட 90 சதவிகிதத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழில் சங்கங்களுடன் கலந்தாலோசித்த பின்னரே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இதையும் படியுங்கள்:TN Weather Update: இடி, மின்னல் மிரட்ட..! 14 மாவட்டங்களில் இன்று கனமழை, சென்னை? தமிழக வானிலை வார்னிங்

குழப்பங்களுக்கான முற்றுப்புள்ளி

உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடான இந்தியாவில், வழக்கத்திற்கு மாறான மற்றும் நிலையற்ற அளவுகளில் விற்கப்படும் எண்ணெய்களால், சமையலறைக்கு அத்தியாவசியமான ஒரு பொருளுக்கு எந்த பிராண்ட் சிறந்த மதிப்பை வழங்குகிறது என்பதை கண்டறிய முடியாத நிலை உள்ளது. இதுகுறித்து பேசும் இந்திய காய்கறி எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் (IVPA) தலைவர் சுதாகர் தேசாய், "தொழில்துறைக்கு சுதந்திரம் அளிப்பதற்காக தரப்படுத்தல் இல்லாத நிலை கொண்டுவரப்பட்டாலும், மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக, இந்த நடைமுறை சந்தையைச் சிதைத்து, பல்வேறு அளவிலான பேக்கேஜ்கள் பெருக வழிவகுத்து, சந்தையில் பரவலான குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அதை தவிர்க்கும் வகையான நடவடிக்கை வரவேற்கத்தக்கது” என குறிப்பிட்டுள்ளார்.

Source: Read Full Article